

உலகளாவிய உளவாளிகளின் பட்டியலில் ‘எலியாஹு கோயன்’ என்ற இஸ்ரேலிய உளவாளிக்கு முதல் வரிசையில் இடமுண்டு. இன்றைக்கும் சர்வதேச உளவாளிகள் திகிலுடனும் இஸ்ரேல் தேசம் கனிவுடனும் நினைவுகூரும் இந்த உளவு நாயகனின் உண்மைக் கதையை, ‘தி ஸ்பை’ என்ற வலைத்தொடராக நெட்ஃபிளிக்ஸ் வெளியிட்டுள்ளது.
இஸ்ரேல் என்ற, புதிதாகக் கட்டமைக்கப்பட்ட தேசத்தைத் தொடர்ந்து கட்டிக் காப்பதில், உலகமெங்கும் வேர்பரப்பியிருக்கும் அதன் உளவு நிறுவனமான ‘மொஸாட்’ உளவாளிகளுக்கு முக்கியப் பங்குண்டு. அப்படியொரு மொஸாட் ஒற்றனின் சாகசங்கள் வாயிலாக மெல்லத் தீப்பிடிக்கும் திரில்லர் ஒன்றை விறுவிறுப்பாகப் பரிமாறுகிறது ‘தி ஸ்பை’ வலைத்தொடர்.
அண்டை தேசமான சிரியாவால் தனது எல்லையில் சதா நிம்மதியிழந்து தவிக்கிறது இஸ்ரேல். எதிரியின் தொடர் அச்சுறுத்தல்களைத் தடுக்க அதன் ராணுவ ரகசியங்கள், வியூகங்கள் இஸ்ரேலுக்கு அவசியமாகின்றன. எகிப்தில் பிறந்த யூதரான கோயன், மொஸாடின் புது உளவாளியாக அவதாரமெடுக்கிறார். முற்றிலும் புதிய அடையாளங்களுடன் சிரியாவுக்குள் காலடி வைப்பவர், ஒரு சர்வதேச வர்த்தகராகத் தன்னை வரிந்துகொண்டு அதிகார வர்க்கத்துடனும் அரசியல்வாதிகள், ராணுவப் புள்ளிகளுடனும் நெருக்கத்தை வளர்த்துக் கொள்கிறார்.
‘பாத்’ கட்சியின் அரியணையேறும் முயற்சிகளுக்கு திரைமறைவில் உதவியதன் மூலம் பிரதமர் அமின் அல்-ஹஃபிஸின் நம்பிக்கையைப் பெறுகிறார். அந்த வகையில் சிரியாவின் பாதுகாப்புத்துறைத் துணை அமைச்சராகத் தேர்வாகும் அளவுக்கு கோயனின் செல்வாக்கு உச்சம் தொடுகிறது.
இடைப்பட்ட ஆண்டுகளில் சிரியாவின் ராணுவ அரசியல் ரகசியங்களைத் தாய் நாடான இஸ்ரேலுக்குச் சளைக்காது அனுப்புவதையும் தொடர்கிறார். அபாயகரமான அரசியல் சதுரங்கத்தில் வெற்றிகளை மட்டுமே ருசித்த கோயனின் குட்டு, எதிர்பாராத தருணமொன்றில் உடைபடுகிறது. ஒட்டுமொத்தமாக ஒரு தேசத்தையே முட்டாளாக்கிய யூத உளவாளிக்கு எதிராக, சிரியா மட்டுமன்றி அரபு நாடுகள் அனைத்தும் கொந்தளிக் கின்றன.
தனது சாகச நாயகனை மீட்க இயன்றமட்டில் இஸ்ரேல் போராடியது. அயலுறவுத் துறை அமைச்சர் கோல்டா மேயர் முயற்சியால் உலக நாடுகள் பலவும் சிரியாவுக்கு அழுத்தம் தந்தன. போப் ஆறாவது பால் தலையிட்டும், அவமானத்தில் சிவந்திருந்த சிரியாவின் சினம் தணிந்தபாடில்லை. பலவிதமான சித்திரவதைகளுக்குப் பிறகு டமாஸ்கஸ் நகரின் சதுக்கமொன்றில் ஆயிரக்கணக்கானோர் முன்னிலையில் கோயனைப் பழிதீர்த்தார்கள்.
கோயனை இழந்ததில் இஸ்ரேல் வெறி கொண்டது. எல்லை தாண்டி சகட்டுமேனிக்கு எதிரிகளைத் துவம்சம் செய்தது. எகிப்து, ஜோர்டான் எனக் கைகோத்த வர்களையும் சிதறடித்த இஸ்ரேல், அந்த ‘ஆறு-நாள் போரின்’ முடிவில் தனது தேசத்தின் பரப்பளவை இருமடங்காக்கிக் கொண்ட பின்னரே ஓய்ந்தது. இஸ்ரேலின் இந்த வெற்றிக்கு அதுவரை கோயன் அனுப்பியிருந்த எதிரிகளின் ராணுவ ரகசியங்களே அடித்தளமிட்டிருந்தன.
இதுதான் எலியாஹூ கோயன் என்ற மொஸாட் உளவாளியின் சுருக்கமான நிஜக்கதை. கோயனின் இந்த வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் நாவல் ஒன்றைத் தழுவியதாக, நெட்ஃபிளிக்ஸின் ‘தி ஸ்பை’ தொடர் செப்டம்பர் 6 அன்று வெளியானது.
தினசரி மோர்ஸ் குறியீடுகளைக் கையாளும் சாதாரண அலுவலக சிப்பந்தியாக அறிமுகமாகும் கோயன், ஒரு கட்டத்தில் சர்வதேச உளவாளிக்கான தகுதிகளை வளர்த்துக்கொள்கிறார். தபேத் என்ற அர்ஜெண்டினா வர்த்தகர் அடையாளத்துடன் சிரியாவுக்குள் நுழைகிறார். தொடர்ந்து கோயனின் ஒற்றறியும் வேட்டையும், சிரியாவின் அதிகார மட்டங்களில் ஊடுருவி ரகசியங்களைக் களவாடுவதையும் ‘தி ஸ்பை’ சுவாரசியமாகச் சித்தரிக்கிறது.
சிரியாவின் பதுங்கு தளங்களை அடையாளம் காட்டும்விதமாக எல்லையோரம் தைல மரங்களை நடச்சொல்லும் கோயனின் யோசனை, அதிகாரிகளைக் கவிழ்க்க கோயனின் குடியிருப்பில் நடந்தேறும் பாலியல் விருந்துகள், கோயனின் மோர்ஸ் செய்திகளை ரஷ்ய கே.ஜி.பி. உதவியுடன் மோப்பமிடும் சிரிய ரகசியப் படை… என்பது உள்ளிட்ட உண்மைச் சம்பவங்களைச் சித்தரிக்கும் காட்சிகள் புனைவுக்குச் சவால்விடுகின்றன.
உளவாளியின் சாதுர்ய சாகசங்களுக்கு மறுபக்கத்தில் அவரது குடும்பம் உண்மையில் படும்பாட்டையும் வலைத்தொடர் உருக்கமாகச் சித்தரிக்கிறது. சாமானியன், உளவாளி என இருவேறு வாழ்க்கைகளுக்கு இடையே சறுக்கித் தவிப்பதை கோயனாக வரும் ‘சாஷா பேரோன்’ வாழ்ந்து காட்டுகிறார். வருடக்கணக்கில் தலைமறைவாகும் கணவனின் ரகசியங்களைத் துழாவுவதிலும், கணவனின் மேலதிகாரியைக் கூர்மையான சொற்களால் நிலைகுலைய வைப்பதிலும், ‘நாடியா’வாக வரும் ‘அடார் ரட்ஸன்’ உருகவைக்கிறார். கதை உறைந்திருக்கும் அறுபதுகளின் காலத்தை வாகனங்கள், தெருக்கள் என அசலாகப் பிரதிபலிக்கவும் ஒரு வலைத்தொடரில் முடிந்த அளவுக்கு முயன்றிருக்கிறார்கள்.