

உகந்த தொழில்நுட்பத்துக்காக இருபது ஆண்டுகள் காத்திருந்த திரைக்கதை ஒன்று, தற்போது ‘ஜெமினி மேன்’ என்ற தலைப்புடன் திரைப்படமாக வெளியாக இருக்கிறது.
அரசு ஏஜென்ஸியின் பகைவர்களை வேட்டையாடும் பணியில் இருப்பவர் ஹென்றி புரோகன். மத்திம வயதை கடந்த அவர் பணியிலிருந்து ஓய்வு பெற நினைக்கிறார். அச்சமயம், வாழ்நாளில் அதுவரை கண்டிராத புத்திசாலியான எதிரியை எதிர்கொள்கிறார். புதிய எதிரி தனது நகர்வுகளையும் திட்டமிடல் களையும் முன்கூட்டியே கணிப்பவனாகவும் தனது இளம்வயது வேகத்தையும் ஒருங்கே கொண்டிருப்பதையும் அறிந்து ஹென்றி ஆச்சரியம் கொள்கிறார்.
நேருக்கு நேரான மோதலின்போது, 25 வருடங்களுக்கு முன்னர் தன்னிலிருந்து உருவாக்கப்பட்ட ‘க்ளோனிங்’ வார்ப்பே அந்த இளைஞன் என்பதை கண்டுகொள்கிறார். இருவருக்கும் இடையிலான மோதலும் சீனியரை ஜூனியர் விரட்டுவதன் பின்னணியுமே மிச்சக் கதை.
தனது அனிமேஷன் திரைப்படங்களின் வரிசையில் 1997-ல் தொடங்கி இந்தக் கதையை டிஸ்னி நிறுவனம் பல ஆண்டுகளாக பரிசீலித்து வந்தது. பல்வேறு தொழில்நுட்பங்களை ஆராய்ந்ததில் சீனியரை ஒத்த க்ளோனிங் ஜூனியரை உருவாக்குவதிலும் இருவருக்கும் இடையிலான ஆக்ஷன் காட்சிகளில் முழுமை கிடைக்கவில்லை எனவும் தயாரிப்பு முயற்சிகள் அவ்வப்போது கிடப்புக்கு போயின. முதன்மை கதாபாத்திரத்துக்கு ஹாரிசன்ஃபோர்ட், மெல் கிப்சன், நிகோலஸ் கேஜ் உட்பட பலரையும் ‘சி.ஜி’யில் பரிசோதித்ததும் படத் திட்டம் நகராமல் அடம்பிடித்தது. அதுபோலவே ஹாலிவுட் இயக்குநர்கள் அடுத்தடுத்து இணைவதும் விலகுவதும் தொடர்ந்தன.
2017-ல் படத் தயாரிப்பு உரிமம் டிஸ்னியிடமிருந்து ஸ்கை டான்ஸ் நிறுவனத்துக்குக் கைமாறியதும் மாற்றங்கள் வேகமாக நடந்தன. ‘லைஃப் ஆஃப் பை’ படத்துக்காக ஆஸ்கர் வாங்கிய இயக்குநர் ஆங் லீ, நவீன தொழில்நுட்பங்களுடன் புதுரக கேமரா உத்திகளையும் பரிசோதித்து தயாரிப்பு நிறுவனத்தை திருப்திபடுத்தினார். முதன்மை வேடத்துக்கு வில் ஸ்மித் முடிவானதும் 20 ஆண்டுகள் கழித்து முழுவீச்சில் படப்பிடிப்பு வளர்ந்தது.
மேரி எலிசபெத், க்ளைவ் ஓவன் உள்ளிட்டோர் நடித்திருக்கும் ‘ஜெமினி மேன்’ திரைப்படம் அக்டோபர் 11 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.