

சுசிகணேசன் இயக்கிய ‘ஃபைவ் ஸ்டார்’ படத்தின் மூலம் அறிமுகமான கனிகா. திருமணத்துக்குப் பின் தாய் வீடான மலையாளப் படவுலகில் கவனம் செலுத்தி வந்தார். மணிரத்னத்தின் இயக்கத்தில் வெளியான ‘ஒகே கண்மணி’ படத்தில் ஒரு கௌரவக் கதாபாத்திரத்தில் தோன்றினாலும் தமிழில் அவர் தொடர்ந்து நடிக்கவில்லை. ஆனால், தற்போது விஜய் சேதுபதி நடிக்கும் படம் ஒன்றில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் கனிகா.
அப்பாவும் நானும்
‘தர்மதுரை’ படத்துக்குப் பிறகு சீனுராமசாமியின் இயக்கத்தில் விஜய்சேதுபதி மீண்டும் நடித்திருக்கும் படம் ‘மாமனிதன்’. இது கிராமியப் பின்னணியில் நடக்கும் கதை. இந்தப் படத்துக்கு இளையராஜாவும், யுவன்சங்கர் ராஜாவும் இணைந்து இசை அமைக்கிறார்கள். இந்தத் தகவலை யுவன் சங்கர் ராஜா தனது ட்விட்டர் பக்கம் வழியாக உறுதிப்படுத்தியிருக்கிறார். ‘‘ ‘மாமனிதன்’ படத்தில் நானும் அப்பாவும் முதல் முறையாக இணைந்து வேலை செய்துள்ளோம். ‘மாமனிதன்’ படப் பாடல்கள் இசை ரசிகர்கள் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் என்று நம்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
பெண்ணிடம் சிக்கிய மிருகம்
ஸ்ரீகாந்த், ராய் லட்சுமி ஜோடியாக நடித்து முடித்திருக்கும் படம் ‘மிருகா’. பிரபல ஒளிப்பதிவாளர் எம்.வீ.பன்னீர்செல்வம் கதை, திரைக்கதை எழுதி ஒளிப்பதிவும் செய்திருக்கிறார். “தனது தோற்றம், இனிமையாகப் பேசுவது ஆகியவற்றை முதலீடாக வைத்து பெண்களை ஏமாற்றிப் பல திருமணங்கள் செய்யும் ஒருவன். அவனது வலையில் விழுந்தாலும், பின்னர் சுதாரித்துக்கொள்ளும் ஒருத்தி. இவர்கள் இருவருக்கும் இடையிலான இறுதி யுத்தம்தான் கதைக் களம்” என்கிறார் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகும் ஜே.பார்த்திபன். இவர் இயக்குநர் பாலாவின் உதவியாளர். தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்புத் துறையில் பிரபலமாக இருக்கும் பி. வினோத் ஜெயின் - ஜாகுவார் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் படம் இது.
நயன்தாராவின் ‘நெற்றிக்கண்’.
நயன்தாராவின் நண்பரும் இயக்குநருமான விக்னேஷ் சிவன், சில படங்களில் பாடல்களும் எழுதினார். தற்போது ‘ரௌடி பிக்சர்ஸ்’ என்ற பெயரில் படத் தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கியிருக்கிறார். இவரது முதல் தயாரிப்பில் கதாநாயகியாக நடிக்க இருப்பவர் நயன்தாரா. கதாநாயகியை மையப்படுத்திய கதை. கவிதாலயா நிறுவனத்தின் தயாரிப்பில் ரஜினி நடிப்பில் 1981-ல் வெளியான ‘நெற்றிக்கண்’ படத்தின் தலைப்பை முறைப்படி அனுமதி பெற்று இந்தப் படத்துக்குச் சூட்டியிருக்கிறார்கள். சித்தார்த் நடிப்பில் ‘அவள்’ படத்தை இயக்கிய மிலிந்த் ராவ் இயக்கும் படம் இது.