

‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்திருந்தார் வித்யா பாலன். அடுத்து, கணித மேதை சகுந்தலா தேவியின் வாழ்க்கை வரலாற்றைச் சித்தரிக்கும் படத்தில் ‘டைட்டில்’ கதாபாத்திரம் ஏற்று நடிக்கிறார். ‘சகுந்தலாதேவி’ என்ற தலைப்பில் இந்தப் படம் இந்தியில் உருவாகிறது. பாலிவுட்டில் மூன்று படங்களை இயக்கி கவனம் பெற்றிருக்கும் அனு மேனன் இயக்குகிறார். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 1929-ல் பிறந்து வளர்ந்த சகுந்தலா தேவி, ‘ஹ்யூமன் கம்ப்யூட்டர்’ என்று அழைக்கப்பட்டவர். கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்த இந்தியச் சாதனையாளரான இவர், 2013-ல் தனது 83-ம் வயதில் மறைந்தார்.
அதிதி அடுத்து
எச்.ஐ.வி. தொற்றுக்கு ஆளான ஒரு பெண் எதிர்கொள்ளும் சமூகப் புறக்கணிப்பை, அவற்றின் பின்னுள்ள வலிகளைத் தனது அபாரமான நடிப்பின் மூலம் ‘அருவி’ படத்தில் வெளிப்படுத்தினார் அதிதி பாலன். 2017-ல் வெளியான அந்தப் படத்துக்குப்பின், தனக்குக் கூறப்பட்ட கதைகள் எவையும் தன்னைக் கவரவில்லை என்று கூறிப் படங்கள் எதையும் ஒப்புக்கொள்ளாமல் இருந்தார். தற்போது ‘படவெட்டு’ என்ற மலையாளப் படத்தில் நிவின் பாலியுடன் இணைந்து நடிக்கிறார். லிஜோ கிருஷ்ணா என்ற அறிமுக இயக்குநரின் படம் இது.
தெலுங்கில் வேறு!
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற படம் 'ஜிகர்தண்டா'. 2014-ல் வெளியான அப்படத்தை தற்போது தெலுங்கில் 'வால்மீகி' என்ற தலைப்பில் மறுஆக்கம் செய்திருக்கிறார்கள். தாதாவின் வாழ்க்கையை தனது முதல்படமாக எடுக்க முனையும் இயக்குநராக சித்தார்த் நடித்த கதாபாத்திரத்தில் அதர்வாவும், பாபி சிம்ஹா நடித்த தாதா கதாபாத்திரத்தை வருண் தேஜும் ஏற்று நடித்திருக்கும் இந்தப் படத்தை ஹரிஷ் ஷங்கர் இயக்கியிருக்கிறார். தமிழில் லட்சுமி மேனன் மட்டும் கதாநாயகியாக நடித்திருந்தார். தெலுங்கில் இரண்டு கதாநாயகிகள் நடித்திருப்பதுடன் தெலுங்கு வணிக சினிமாவின் போக்குக்கு ஏற்ப பெரும்பாலான காட்சிகளை மாற்றிவிட்டதாகக் கூறியிருக்கிறார் இயக்குநர். அந்தப் படம் ஆந்திராவில் இன்று வெளியாகிறது.