Published : 20 Sep 2019 11:36 AM
Last Updated : 20 Sep 2019 11:36 AM

திரைக்குப் பின்னால்: தம்பி என்பதற்காக அல்ல! - ஒளிப்பதிவாளர் பிரசன்னா

அண்ணன் இயக்க தம்பி நாயகனாக நடிப்பது தமிழ் சினிமாவில் உண்டு. அண்ணன் இயக்க, தம்பி ஒளிப்பதிவு செய்வது அபூர்வம். சமீபத்தில் வெளியாகி வெற்றிபெற்றிருக்கும் ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்தின் ஒளிப்பதிவாளர் பிரசன்னா எஸ்.குமார் அந்தப் படத்தின் இயக்குநர் சசியின் தம்பி. அப்படத்தின் பைக் ரேஸ் காட்சிகள் உட்படப் படத்தின் ஒளிப்பதிவுக்காக விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றுவரும் அவரிடம் உரையாடியதிலிருந்து ஒரு பகுதி..

உங்களது அண்ணன் இயக்குநராக இருப்பதால்தான் ஒளிப்பதிவுத் துறைக்கு வந்தீர்களா?

அண்ணனுடைய படங்கள் மீது எப்போதுமே எனக்கு மரியாதை உண்டு. ஏனென்றால், அவரது படங்கள் தொடக்கம் முதல் கடைசி ஷாட் வரை கட்டிப்போட்டுவிடும். திரைக்கதைக்காக அவ்வளவு உழைப்பைக் கொட்டியிருப்பார். ஒவ்வொரு விஷயத்துக்கும் அவர் வைத்திருக்கும் பின்கதை ஆச்சரியமூட்டும். எந்த அளவுக்கு ரசிக்க முடிகிறதோ அதே அளவுக்குக் கண்களைக் கலங்கவும் வைத்துவிடுவார். அழுத்தமான ஒருவரிக் கதை, நமக்கு மத்தியில் நடமாடும் கதாபாத்திரங்கள், அவற்றுக்கான முழுமை என்று அவரது படங்களில் இருக்கும் லைஃப்தான் எனக்கு ரொம்பப் பிடிச்ச அம்சம்.

படம் முடிந்து தியேட்டரைவிட்டு வெளியே வரும்போது மனம் லேசாகி காற்றில் பறப்பதை அவரது ஒவ்வொரு படத்திலும் உணர்ந்திருக்கிறேன். அவர் எனது அண்ணனாக இல்லாமல் இருந்தாலும் இதுதான் அவரது படங்களைப் பற்றிய எனது விமர்சனம். அவரது படங்களுக்கு ரசிகனாக இருந்த என்னை ஒளிப்பதிவாளராக மாற்றியதும் அவர்தான். சென்னை எழும்பூரில் உள்ள அரசு கவின்கலைக் கல்லூரியில் இளங்கலை படித்து முடித்ததும் ஓவியம் வழியாக ஒளிப்பதிவின் மீது ஆர்வம் வந்தது.

எனது ஆர்வத்தைத் தெரிந்துகொண்டு, அவரது ‘பூ’ படத்துக்கு ஒளிப்பதிவு செய்த பி.ஜி.முத்தையாவிடம் ஒளிப்பதிவு உதவியாளராகச் சேர்த்துவிட்டார். அந்தப் படம் முடித்ததும் ஒளிப்பதிவாளர் ஆர். ரத்னவேலுவை ஆறுமாதங்கள் விடாமல் துரத்தி, அவரிடம் உதவியாளனாகச் சேர்ந்தேன். அவர் ஒளிப்பதிவு செய்த பல முன்னணிக் கதாநாயகர்களின் படங்களில் பணிபுரியும் வாய்ப்பு எனக்கு அமைந்தது.

தம்பி என்பதற்காகத்தான் ‘பிச்சைக்காரன்’ படத்தில் உங்களை ஒளிப்பதிவாளராக அறிமுகம் செய்தாரா?

இல்லவே இல்லை. ரத்னவேலுவிடம் பல படங்கள் பணிபுரிந்ததில் பல ஆண்டுகள் ஓடிப்போய்விட்டன. ஹைதராபாத்திலேயே இரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டன. சென்னை வந்ததும் நான் தனியாக முயற்சி செய்கிறேன் என்று அண்ணனிடம் சொன்னேன். ‘‘உனது ‘ஷோ ரீலை’க் கொண்டு வா பார்க்கிறேன்’’ என்றார். அவரிடம் அதைக் காட்டியபோது எனக்கு இது போதாது என்று அனுப்பிவிட்டார். எனக்கு அதிர்ச்சியாகிவிட்டது.

பின்னர், ‘‘நீ போய்... மாநகரம், புறநகர், சிறுநகரங்கள், கிராமம் என்று தெரு வாழ்க்கையை ஒளிப்பதிவு செய்து எடிட் செய்துகொண்டுவந்து கொடு.. அந்த ஷோ ரீலில் உனது பெயர் போடாமல் கொண்டுவா.. உனக்குத் திறமை இருந்தால் எனது அடுத்த படத்தில் வாய்ப்புக் கிடைக்கலாம்’’ என்றார். ஒரு மாதம் அலைந்து திரிந்து அவர் கேட்டதைக் கொடுத்தேன்.

என்னைப் போலவே பலரிடம் ‘தெரு வாழ்க்கை’யைப் படமெடுக்கச் சொல்லி ஷோ ரீல் வாங்கி விஜய் ஆண்டனி சாரிடம் கொடுத்திருக்கிறார். அதில் விஜய் ஆண்டனி சார் எனது ஷோ ரீலைக் காட்டி.. ‘இவர்தான் இந்தக் கதைக்குச் சரியான ஆள்’ என்று சொல்ல, அதன் பிறகே என்னை அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

இயக்குநர் ஆர்.கண்ணனின் படங்களுக்கு அடுத்தடுத்துப் பணிபுரியும் வாய்ப்பு எப்படி அமைந்தது?

அவரது ‘கண்டேன் காதலை’ படத்தில் ஒளிப்பதிவு உதவியாளராகப் பணிபுரிந்தபோது என்னைக் கவனித்திருக்கிறார். இனிமையும் தோழமையும் மிக்கவர். ‘‘ ‘இவன் தந்திரன்’ படத்துக்கு ஹீரோ கால்ஷீட் கிடைத்திருக்கிறது. ஒரு வாரத்தில் படப்பிடிப்புக்குச் செல்ல வேண்டும்; உன்னால் முடியுமா?” என்றார்.

எனக்குக் கொஞ்சம் அதிர்ச்சிதான். இவ்வளவு குறுகிய அவகாசத்தில் திரைக்கதை படித்து, லொக்கேஷன் பார்ப்பது எப்படிச் சாத்தியம் என்று யோசித்தபோது முழுவதுமாக ஏழு நாட்கள் இருக்கின்றனவே என்று மூளைக்குள் அலாரம் அடித்தது.

அதிரடியாகச் செயல்பட்டு அந்தப் படத்தை 28 நாட்களில் எடுத்து முடித்தோம். இயக்குநர் கண்ணனின் திரைக்கதை அவ்வளவு தெளிவாக இருக்கும். ‘பூமராங்’ படத்திலும் அவருடன் இணைந்து பணிபுரிய அவரது அசத்தலான திரைக்கதையே காரணம்.

‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்தின் பைக் ரேஸ் காட்சிகள் 360 டிகிரியில்கூடப் படக்கருவியைச் சுழல விட்டிருக்கிறீர்களே எப்படி?

மொத்தம் மூன்று பைக் ரேஸ் காட்சிகள். எல்லாவற்றையும் முதலிலேயே ஸ்டோரி போர்டு செய்துவிட்டோம். எதைச் சென்னையில் எடுப்பது எதைப் புதுச்சேரியில் எடுப்பது என்று ஷாட்களை பக்காவாகப் பிரிந்து 8 நாட்களில் எல்லா ஷாட்களை எடுத்துக் குவித்ததைப் பார்த்து எடிட்டர் அலறிவிட்டார். ஜி.வி.பிரகாஷ் பைக் ஓட்டும் காட்சியில் 360 டிகிரி கேமரா சுழல ஆஸ்திரேலியாவிலிருந்து ரிக் வரவழைக்க வேண்டும்.

அதுவரை காத்திருக்க முடியாது. ஆனால், நாங்களே அதற்கான ரிக்கை நம்மிடம் இருக்கும் பொருட்களை வைத்தே உருவாக்கிப் பயன்படுத்தினோம். நாம் மனது வைத்துவிட்டால் இயக்குநரின் கற்பனைக்கு நிச்சயமாக உயிர்கொடுக்க முடியும்.

அடுத்து?

வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் தயாரிக்கும் படம். ஜீவா நாயகனாக நடிக்கிறார். ரத்னசிவா இயக்கம்.

- ஜெயந்தன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x