தரைக்கு வந்த தாரகை 31: மக்களுக்கான ராகம்! 

தரைக்கு வந்த தாரகை 31: மக்களுக்கான ராகம்! 
Updated on
3 min read

காடு வெளஞ்சென்ன மச்சான்
நமக்குக் கையுங் காலுந்தானே மிச்சம்
காடு விளையட்டும் பொண்ணே நமக்குக்
காலம் இருக்குது பின்னே
நாளை போடப் போறேன் சட்டம்
நமக்கு நன்மை புரிந்திடும் திட்டம்

படம்: நாடோடி மன்னன்

மாடர்ன் தியேட்டர்ஸ் பட முதலாளி சுந்தரத்தின் கோபத்திலிருந்து எம்.ஜி.ஆர். தப்பித்துக்கொண்டதை எடுத்துக்கூறிய பானுமதி, தனது பிஸியான நாட்களைக் குறித்த பகிர்தலைத் தொடர்ந்தார்.

‘அலிபாபாவும் 40 திருடர்களும்’ படம் வெளியான இடங்களில் எல்லாம் 100 நாட்கள் ஓடியது. படத்தின் நூறாவது நாள் விழாக்களை நடத்த சேலத்திலும் சென்னையிலும் டி.ஆர்.சுந்தரம் பிரம்மாண்டமான ஏற்பாடுகளைச் செய்திருந்தார். கணவருடன் விழாக்களில் நான் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டுமென்று அழைப்பு விடுத்திருந்தார். தொடக்கம் முதலே நூறாவது நாள் கொண்டாட்டங்களைத் தவிர்த்து வந்திருக்கிறேன்.

இவ்விழாக்களில் வழங்கப்படும் கேடயங்களை வாங்கி, வீட்டின் அலமாரிகளில் பலர் அறியக் காட்சிப்படுத்துவதுதில் எனக்கு ஆர்வமில்லை. அப்படியே வாங்கினாலும் வீட்டின் ஏதோ ஒரு மூலையில் அவற்றைப் போட்டு வைத்திருப்பேன். வீட்டுக்கு வரும் விருந்தாளிகள் ‘என்ன இது! உனக்குக் கிடைத்த ஷீல்டுகளையும் நினைவுப் பரிசுகளையும் இப்படி மூலையில் போட்டு வச்சிருக்கே; எல்லோரையும் போல கூடத்தில் அழகாக வைத்தால்தான் என்ன?’ என்று கேட்பார்கள். நான் சிரித்துக்கொண்டே ‘எனக்குக் கிடைத்த பரிசுகளைக் காட்டி என் திறமையைப் பாருங்கள் என்று தம்பட்டம் அடித்துக் கொள்ளணுமா என்ன?’ என்று திருப்பிக் கேட்பேன்.

அதுதான் ‘மக்கள் திலகம்’

டி.ஆர்.சுந்தரத்தின் அழைப்பை மறுக்க முடியவில்லை. மதுரையில் நடந்த விழாவில் மக்கள் தந்த வரவேற்பும் உற்சாக வாழ்த்துகளும் என்னால் மறக்க முடியாதவை. அந்த ஆண்டு எனக்குத் தமிழ்ப் படங்களில் நடிக்க நிறைய வாய்ப்புகள் தேடிவந்தன. ஒரே நேரத்தில் 18 தமிழ்ப் படங்களில் நடிக்க ஒத்துக்கொண்டது நினைவுக்கு வருகிறது.

அந்தக் காலத்தில் படங்கள் வேகமாக எடுக்கப்படுவதில்லை. அவசரமே இல்லாமல் படவேலைகளைத் திட்டமிடுவார்கள், அமைதியான பதற்றப்படாத சூழலில் படங்கள் எடுக்கப்படும். இது படத்திலும் பிரதிபலிக்கும். ஆசுவாசமான காட்சிகள், நின்று நிதானமாகப் பேசும் கதாபாத்திரங்கள் படத்துக்குத் தனியாக அழகைக் கொடுத்தன என்பதை மறக்க முடியாது. அந்தக் காலத்தில் மக்கள் அப்படித்தானே வாழ்ந்தார்கள்?

மக்கள் என்றதும் ஒரு சம்பவம் நினைப்புக்கு வருகிறது. எம்.ஜி.ஆர். அடிக்கடி சொல்லும் வார்த்தை. ‘மக்களுக்காகப் படம் எடுக்கிறோம் என்பதை மறந்துவிடக் கூடாது’.

‘நாடோடி மன்னன்’ படத்தில் ஒரு பாடல் பதிவின்போது, குறிப்பிட்ட பாடலுக்கு இசை அமைத்த தருணத்தில் எம்.ஜி.ஆரும் உடனிருந்தார். பாடலுக்கான இசை, கர்னாடக இசையில் குறிப்பிட்ட ராகத்தில் அமைந்தது. ஆனால், ராகம் சரியாக வரவில்லை. பிசிறு தட்டியது. இதை நான் சுட்டிக்காட்டியபோது எம்.ஜி.ஆர், ‘ராகம் பிசகினாலும் மக்கள் புரிந்துகொள்ளும்படியான வார்த்தைகள் முக்கியம் அம்மா’ என்றார்.

நான் சிறு வயதிலிருந்தே சங்கீதத்தில் முறையாகப் பயின்றவள் என்பதால் அபஸ்வரத்தைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. மக்களுக்குப் புரிவதே முக்கியம், ராகம் சரியில்லை என்றாலும் பரவாயில்லை என்று எம்.ஜி.ஆர். சொல்லிவிட்டார். பட்டி தொட்டி எங்கும் பாமர மக்களிடம் ‘நாளை போடப்போறேன் சட்டம்’ என்று பிரபலமான அந்தப் பாடலில் தன் எதிர்காலத்தைச் சூசகமாகச் சொல்லி இருப்பார். அவர் ஏன் ‘மக்கள் திலகம்’ என்று அழைக்கப்பட்டார் என்று புரிந்தது.

வதந்தியும் உண்மையும்

இக்கால கட்டத்தில்தான் நாராயணா அண்டு கோ அதிபர். நாராயணா அய்யங்கார் ‘கணவனே கண்கண்ட தெய்வம்’ என்ற படத்தை எடுக்கத் திட்டமிட்டார். இதற்கு முன்பே எங்கள் நிறுவனத்துடன் சேர்ந்து தமிழிலும் தெலுங்கிலும் ‘சிந்தாமணி’ என்ற படத்தை எடுக்கத் திட்டமிட்டிருந்தோம். படப்பிடிப்பு நடத்திக்கொண்டிருந்தபோதே உடம்பு இளைப்பதற்காக நான் சாப்பிட்ட மாத்திரையில் கடுமையான உடல்நலக் குறைவு ஏற்பட்டது.

இதனால் படப்பிடிப்புகளை ரத்து செய்யும் நிலை ஏற்பட்டது. இந்த வேளையில்தான் நான் படப்பிடிப்புக்கு ஒத்துழைப்பதில்லை என்ற வதந்தி பரவியது. தயாரிப்பாளர் புட்டண்ணா, கதாபாத்திரம் பிடிக்காததால் நான் இப்படிச் செய்வதாகப் புகார் சொன்னார். என்னுடைய நிலைமையை விளக்கமாக எடுத்துச் சொல்லி படத்திலிருந்து நான் விலகிக் கொள்வதாகத் தெரிவித்துவிட்டேன்.

‘மிஸ்ஸியம்மா’ படத்துக்குப் பிறகு இது என் வாழ்க்கையில் ஏற்பட்ட இரண்டாம் அபஸ்வரம். ‘செஞ்சு லட்சுமி’ படத்திலும் உடல்நிலை காரணமாக வெளியேற நேர்ந்தது. பரணி பிக்சர்ஸ் சார்பாக ‘சிந்தாமணி’ என்ற படத்தை எடுக்க முற்பட்டோம். இதில் என்.டி ராமராவ் முக்கிய வேடமேற்று நடித்தார். எஸ்.வி. ரங்காராவ் ரேலங்கி வெங்கடராமையா (சுப்பிசெட்டி கதாபாத்திரம்) ஆகியோரும் சிறப்பாக நடித்தனர்.

தணிக்கைக் குழு தலைவர் பண்டிரி மல்லிகார்ஜுன் ராவ் சுப்பிசெட்டி கதாபாத்திரம் குறிப்பிட்ட வகுப்பினரைக் கேலி செய்வதாகக் கூறி இரண்டாயிரம் அடி நீளத்தை வெட்டச் சொல்லிவிட்டார். உண்மையாக அவை யாரையும் புண்படுத்தாத நல்ல நகைச்சுவைக் காட்சிகள். இது எங்களுக்குப் பலத்த அடி. படமும் சுமாராகத்தான் ஓடியது. பிறகு ‘வரடு காவாலி’ என்ற தெலுங்குப் படம் பரணி பிக்சர்ஸின் சொந்தப் படமாக வெளிவந்தது. தமிழில் சிவாஜி கணேசன் நடிப்பில் ‘மணமகன் தேவை’ படமாக வெளிவந்தது. தெலுங்கில் தோல்விகண்ட இப்படம் தமிழில் சக்கைப்போடு போட்டது.

மென்மையின் மறு உருவம்

‘ரங்கோன் ராதா’ படத்தில் நடித்ததற்காக எனக்கு பிலிம் ஃபேன்ஸ் அவார்டு கிடைத்தது. இந்தப் படத்தின் கதாநாயகன் சிவாஜி கணேசன். படப்பிடிப்பு இடைவேளைகளில் ஆங்கிலப் படங்களைப் பற்றி இருவரும் பேசுவோம். சிவாஜி பிறவி நடிகர். அவர் கண்கள் பேசும் அழகை பார்த்துக் கொண்டே இருக்கலாம். கதாபாத்திரத்தின் உணர்வுகளைக் கன்னங்களைத் துடிக்கவைத்து, அவர் வெளிப்படுத்துவதைக் கண்டு வியந்திருக்கிறேன். நான் சீனியர் ஆர்டிஸ்ட் என்பதால் என்னிடம் பேசக் கூச்சப்படுவார். மென்மையின் மறு உருவம் அவர்.

கொஞ்சம் கிண்டலும் உண்டு. ஆனால், நடிப்பில் வெளுத்து வாங்குவார். தமிழ் வசன உச்சரிப்புகள் சிலவற்றை அவரிடம் கேட்டுத் தெளிவுபடுத்திக் கொண்டிருக்கிறேன். நான் தமிழ் நன்றாகப் பேசுகிறேனா என்று அவரிடம் ஒருநாள் கேட்டேன். ‘ஐயோ! அம்மா! என்னிடம் இப்படிக் கேட்கலாமா? சரஸ்வதி கடாட்சம் உடையவர் நீங்கள். அதனால்தான் வெகு அழகாகப் பாடுகிறீர்கள்; இயல்பாக நடிக்கிறீர்கள். நன்கு வசனம் பேசுகிறீர்கள். என்ன ஒன்று.. தெலுங்கு வாடை லேசாக வீசுகிறது. அதுவே அழகாகத்தான் இருக்கு அம்மா!’ என்றார் சாமர்த்தியமாக.

அவர் ‘சரஸ்வதி கடாட்சம்’ என்றதும் ஏனோ எனக்கு என் ஜாதகத்தின் நினைவு வந்துவிட்டது. நான்தான் ஜோதிடத்தில் நம்பிக்கை உடையவள் ஆயிற்றே. படப்பிடிப்பு இடைவேளையில் என் ஜாதகத்தில் கிரகங்களின் சஞ்சாரத்தைக் கணித்தேன். திக்கென்றது. எனக்கு ஏழரைச் சனி தொடங்க இருந்தது. இதன் விளைவு என்ன ஆயிற்று தெரியுமா?

(தாரகை ஒளிரும்)
- தஞ்சாவூர்க் கவிராயர்
தொடர்புக்கு: thanjavurkavirayar@gmail.com | படங்கள் உதவி: ஞானம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in