

எஸ். கோபால்
சிம்மக் குரலோன்-90, வீரபாண்டிய கட்டபொம்மன்-60
மேலைநாட்டு மக்களுக்கு ஒரு ‘டென் கமாண்ட்மெண்ட்ஸ்’ (Ten Commandments), ஒரு ‘ லாரன்ஸ் ஆஃப் அரேபியா’ (Lawrence of Arabia) போல, கீழைத் தேச மக்களுக்கு ஒரு ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’. தலைமுறைகள் பார்த்திராத கட்டபொம்மனுக்குத் தனது நடிப்புத் திறமையால் உயிர் கொடுத்து உயிருடன் திரையில் உலவவிட்டவர் நடிகர் திலகம்.
சிறுவயதில் கட்டபொம்மன் நாடகத்தைப் பார்த்துவிட்டு, நாடகத்தில் தானும் ஒரு நடிகனாக வேண்டும் என்ற ஆசையை அவரது மனத்தில் வேர்விடச் செய்தது அக்கதாபாத்திரம். அது பிரம்மாண்ட திரைப்படமாக உருமாறியபோது, சிவாஜி எனும் நடிகரின் உயிரிலும் உணர்விலும் கலந்து நின்ற ஒரு கதாபாத்திரம் திரையில் எப்படி இருக்குமோ என்ற வெகுஜனங்களின் கற்பனையை மீறி நின்றது சிவாஜியின் திரை நடிப்பு. மொழியின் தடையின்றி அப்படத்தை உலகமே பார்த்து வியந்தது!
வரலாற்றில் வெள்ளையரை எதிர்த்துநின்ற கால கட்டத்தில் கட்டபொம்மனின் வயது என்னவோ, படம் வெளியானபோது சிவாஜி கணேசனின் அன்றைய வயதும் அதுதான். ஏறக்குறைய முப்பது. நிறம்? ஒத்துப்போய்விட்டது. ஆனால், கட்டபொம்மனின் உயரம்? அதுவும் சிவாஜியின் உயரம்தான் என்பது எதிர்பாராமல் அமைந்த ஒற்றுமை. ஆனால், கதாபாத்திரத்தை ஏற்கும் நடிகன் ஒரு மேதையாக இருந்தால் மட்டுமே அதன் உயரத்தை மேலும் ஓரடி கூட்ட முடியும். அந்த அதிசயத்தைத் திரை நடிப்பின் மேதை சிவாஜி கணேசன் செய்து காட்டினார். அதை நாம் மட்டுமே வியக்கவில்லை, உலகமும் எகிப்து அதிபர் நாசரும்கூட வியந்தனர். தானே தேடி வந்து சிவாஜியைச் சந்தித்தார். ‘இவரா (?) படத்தில் ஆறடிக்கு மேல் தெரிந்தாரே’என வியந்தார் நாசர்!
உடல்மொழியின் கையேடு
‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ படத்தில் அந்த நடையும், கைகளை, விரல்களை சிவாஜி பயன்படுத்தும் விதமும் அலாதியானவை. வால்மீகி ராமாயணத்தில், வால்மீகியும் ராமனின் நாலு வித நடைகளைக் குறிப்பிடுவார். சிங்க நடை, தலைமைக் குணத்தைக் குறிப்பது. புலி நடை, சீற்றத்தையும் கோபத்தையும் குறிப்பது. யானை நடை, பெருமிதத்தைக் குறிப்பது. எருது நடை, அகந்தை, அலட்சியம் இவற்றைக் குறிப்பது. வால்மீகியைப் படிக்காமலேயே சிவாஜி அவற்றைத் தனது உடல்மொழியால் உணர்த்திய விதம் அதிசயம்.
அரச சபையிலும் நகர்வலம் செல்லும்போதும் மந்திரி, நண்பர்களுடன் இருக்கும்போதும் நடக்கும் நடை ஒரு சிம்மத்தின் தலைமைக் குணத்தைக் குறிக்கும் நடை. ஜாக்சன் தன்னை அவமதித்துக் கோபப்படுத்தும்போது ஒரு புலியின் சீற்றம் நடையில் தெரியும். மனைவி ஜக்கம்மாவிடம் போருக்கு விடைபெறும்போது ஒரு யானையின் பெருமிதம் தொனிக்கும். கடைசியில் பானர்மன் தூக்கு தண்டனை விதித்ததும் தூக்கு மேடையை நோக்கி நடக்கும் சிவாஜியின் கால்களில் ஒரு எருதின் அலட்சியம் தெறிக்கும்.
தன் அமைச்சர் தானாபதி பிள்ளை நெல் மூட்டைகளைக் கொள்ளையிட்டதால், அவரை ஒப்படைக்கச் சொல்லி தூதர் ஓலையுடன் வரும் காட்சி. முகபாவம், உடல் மொழி, அசைவுகள், வசன உச்சரிப்பு முறை எல்லாவற்றிலும் உச்சம் தொடும் அதிசயக் காட்சி. புரியாமல் பேசும் மந்திரியை ஆழம் பார்த்து, குற்றச்சாட்டின் தீவிரத்தை அவருக்குப் படிப்படியாக உணர்த்தும் சிவாஜியின் இணையற்ற நடிப்பு இந்தக் காட்சியை உயரத்தில் வைக்கும்.
கடைசிக் காட்சியில் தனக்குத் தூக்கு உறுதியானபின், உயிரைத் தவிர இழக்க ஒன்றுமில்லை என்ற நிலையில், நிலையற்ற அந்நியரிடம் பணிந்த தன் சகாக்களிடம் ஈனமாக வெடிக்கும் கோபம்... அந்நியரிடம், மூர்க்கமும் ஆற்றாமையும் கலந்து ‘வருவது வரட்டும்’ என்ற கோபம்... என்று சிவாஜி கோபத்தில் வெடிக்கும் காட்சிகளில் பிரமிப்பு அகலாத உணர்வுடன் திரையரங்கில் இருந்து வெளியேறுவோம்.
பானர்மன் துரையாக வரும் ஜாவர் சீதாராமனுடன் கனல் தெறிக்க சிவாஜி பேசும் இறுதிக் காட்சி, ஒரு வசனக் காட்சி என்று விமர்சகர்கள் கூறுவது உண்டு. ஆனால் சங்கிலியால் கட்டப்பட்டு முன்னும் பின்னும், பக்கவாட்டிலும் நகர்வதிலும் கூடக் காட்டியிருப்பார் தனது நடிப்பின் நுட்பங்களை. அக்காட்சியில் சிவாஜி காட்டும் முகக்குறிப்புகளைப் பார்க்கும்போது, ‘எதையும் சந்திக்கத் தயார்’ என்ற கட்டபொம்மனின் மனோபாவம் மொழிபெயர்ப்பு வசனத் தேவையின்றி வெளிநாட்டவருக்கும் விளங்கி இருக்கும்.
முழுமையை விரும்பிய சிவாஜி
1990-களின் மத்தியில் ஒருமுறை நான் சென்னையில் இருந்து விமானத்தில் கோயமுத்தூருக்குச் சென்றேன். அதே விமானத்தில் சிவாஜியும் கோயமுத்தூர் செல்ல வந்திருந்தார். அனைவரும் ஏறிய பின் புறப்படும் நேரத்தில் திடீரெனத் தொழில்நுட்பக் கோளாறு காரணமாகப் பயணிகளை விமானத்தில் இருந்து இறங்கச் சொல்லி அறிவிப்பு வந்தது.
சிவாஜி உட்பட எல்லோரும் இறங்கினோம்.
இறங்கி விமானம் தயாராவதற்காகக் கீழே காத்திருந்தபோது, சிவாஜி சொன்னார்: ‘‘என்ன இது? பயணிகள் ஏறும் முன்பே விமானம் நல்ல நிலையில் இருக்கிறதா என்று சரிபார்க்க மாட்டார்களா? யாராவது வெளிநாட்டவர் விமானத்தில் வந்தால் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள்?’’ என்று வருத்தமும் ஆதங்கமுமாகக் கூறினார்.
‘தனக்குச் சிரமம் ஏற்பட்டதே, காத்திருக்க வேண்டியுள்ளதே’ என்று சிவாஜி நினைக்கவில்லை. எதிலும் முழுமை இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் வெளிநாட்டவர் இந்தியாவைப் பற்றிச் சிறப்பாக நினைக்க வேண்டும் என்ற நாட்டுப்பற்றும்தான் அவரது வருத்தம் தோய்ந்த ஆதங்கத்தில் வெளிப்பட்டன. அந்த முழுமை, நாட்டுப்பற்று, அர்ப்பணிப்பு உணர்வு ஆகியவை ஒரு கலைஞனுக்கு அவசியமான தகுதிகள். அதனால்தான் சிறுவயதில் இருந்தே தனது ஊனோடும் உயிரோடும் கலந்துவிட்ட சுதந்திரப் போராட்ட வீரன் கட்டபொம்மனுக்குத் திரையில் கலைக்குரிய முழுமையுடன் சிவாஜியால் உயிர் கொடுக்க முடிந்தது.
தொடர்புக்கு:
gopalsundararaman@gmail.com