

திரை பாரதி
அக்டோபர் 1... தமிழ்த் திரையுலகின் நடிப்புப் பல்கலைக் கழகம், நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பிறந்த தினம். அவரைக் கொண்டாடக் கிடைத்த அரிய வாய்ப்பாக இதைக் கருதி, ‘சிம்மக் குரலோன் 90’ எனத் தலைப்பிட்டுக் கடந்த ஆண்டு சென்னையிலும் பின்னர் கோவையிலும் மாபெரும் கொண்டாட்டங்களை நடத்தியது ‘இந்து தமிழ்’.
அப்போது இவ்விழாக்களுக்கு மதுரையிலிருந்து திரளாக வந்திருந்த சிவாஜி மன்றங்களின் நிர்வாகிகள், ரசிகர்கள் அவரது அபிமானிகள், ‘மதுரையில் எப்போது ‘சிம்மக் குரலோன் 90’ விழாவை நடத்தப்போகிறீர்கள்?’ எனக் கேட்டகத் தொடங்கிவிட்டார்கள். அதுமட்டுமல்ல; 'சிம்மக் குரலோன் 90' கொண்டாட்டத்துடன் 'வீரபாண்டிய கட்டபொம்மன் - 60' வைர விழாவையும் மதுரையில் நடத்த வேண்டும்’ எனக் கேட்டுக்கொண்டார்கள்.
உலக மகா நடிகரை தங்களது உள்ளத்தில் சுமந்திருப்பவர்களின் உணர்வுகளை மதித்துக் கொண்டாட முடிவு செய்தபோது விழா ஒருங்கிணைப்பில் அவர்களும் நேரடியாகப் பங்கேற்க முன்வந்தனர். அதைவிட ஆச்சரியம், ‘சிம்மக் குரலோன் 90’ – ‘ வீரபாண்டிய கட்டபொம்மன் 60’ விழாக்களை முன்னிட்டு, ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ திரைப்படத்தின் மீள் உருவாக்கம் செய்யப்பட்ட டிஜிட்டல் பிரதியை மதுரையின் பல திரையரங்குகளில் மீண்டும் ரிலீஸ் செய்கிறோம் என்றார்கள். இது ‘சிம்மக் குரலோன்’ நிகழ்ச்சியை ஒரு வரலாற்று நிகழ்வாக மாற்றும் அற்புதத்தைச் செய்ய இருக்கிறது.
மதுரை ‘சிம்மக் குரலோன்’ கொண்டாட்டத்தை இந்துவுடன் இணைந்து ஒருங்கிணைப்பு செய்த அணிக்குத் தலைமையேற்றுச் செயல்பட்டவர் வி.என்.சிடி. வள்ளியப்பன். சென்னை, வடபழனியின் அடையாளங்களில் ஒன்றாகத் திகழும் கமலா சினிமாஸின் நிர்வாகி. அவரிடம் இதுபற்றி கேட்டபோது "நாடக உலகில் நடித்துக் கொண்டிருந்த காலத்திலேயே சிவாஜிக்கும் மதுரைக்கும் தொடர்பு உண்டு.
‘மீனாட்சி மைந்தன்’ என அறியப்பட்ட என் தந்தையார் வி.என். சிதம்பரம், சிவாஜியின் நெருங்கிய நண்பர் மட்டுமல்ல; மதுரையிலே அவருக்குச் சிலையையும் வைத்தவர். அதன் தொடர்ச்சியாகவே பாரம்பரியமிக்க இந்து தமிழ் நாளிதழ் ‘சிம்மக்குரலோன் 90’ விழாவை மதுரையில் நடத்த முன்வந்தபோது மதுரை சிவாஜி மன்ற நண்பர்களுடன் இணைந்து மகிழ்வுடன் பணியாற்றினேன். எனது தந்தையாரின் ஆன்மா இதைக் கண்டு மகிழும்” என்கிறார்.
இவருக்கு உறுதுணையாய் நின்ற அகில இந்திய சிவாஜி மன்ற பொதுச் செயலாளர் முருகவிலாஸ் நாகராஜன் பேசும்போது " மதுரைக்கும் ரசிகர் மன்றங்களுக்கும் உள்ள தொடர்பு உலகறிந்தது. சிவாஜியின் முதல் படமான ‘பராசக்தி’ தென்கிழக்கு ஆசியாவின் மிகப் பெரிய அரங்கமான மதுரை தங்கத்தில் 112 நாட்கள் ஓடிய போதே மதுரையில் அவருக்கு ரசிகர் மன்றம் உருவாகி விட்டது. மேலும் அவரது திரைப்படங்கள் அதிகளவு வெற்றிகளைப் பெற்றதும் மதுரையில்தான். எனவே சிவாஜி மன்றங்கள் இந்து தமிழ் திசையோடு இணைந்து ‘சிம்மக் குரலோன் 90’ கொண்டாடுவது எங்களது வாழ்நாள் பெருமைகளில் ஒன்று” என்கிறார்.
விழாவுக்குத் தொடக்கம் முதலே உறுதுணை புரிந்துவருபவர் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரியும் மதுரை சிவாஜி பைன் ஆர்ட்ஸின் பொதுச் செயலாளருமான சந்திரசேகர். அவர் கூறும்போது "வீரபாண்டிய கட்டபொம்மன் வெறும் படமல்ல; சுதந்திரப் போராட்டத்தின் வரலாற்றுப் பதிவு. சிறு வயது முதல் சிவாஜியின் ஆசைக் கனவு. அதை நாடகமாக நடத்தி அதன் மூலம் கிடைத்த ரூபாய் 32 லட்சத்தைக் குழந்தைகளின் கல்வி நிதிக்காக வழங்கியவர் சிவாஜி. இன்றைய மதிப்பில் அவை பல கோடிகள்.
உலக அரங்கில் தமிழ் சினிமாவுக்குப் பெருமையும் விருதுகளையும் கொண்டு வந்த காவியம். அதன் வைரவிழாவை இணைத்து ‘சிம்மக் குரலோன் 90 ;விழாவை நடத்த வேண்டும் என்ற எங்களது கோரிக்கையை இனிதே ஏற்று இருபெரும் விழாக்களாகக் கொண்டாட முன்வந்த இந்து தமிழ் நாளிதழின் ஈடுபாட்டை என்றைக்கும் மறக்க மாட்டோம்” என்கிறார். மகிழ்கிறார்.
இருபெரும் திரைவிழாவுக்கான ஒருங்கிணைப்பில் ஓடிக்கொண்டிருந்த மற்றொருவர் மதுரை சிவாஜி பைன் ஆர்ட்ஸ் தலைவரும் சூர்யா மூவிஸ் என்ற திரைப்பட வெளியீட்டு நிறுவனத்தை நடத்தி வருபவருமான குணசேகரன்: அவர் கூறும்போது "இப்படி ஒரு விழா நடை பெறப்போகிறது என்றதும் அந்த சமயத்தில், நவீன காலத்துக்கு ஏற்ப டிஜிட்டல் காவியமாக மாறியிருக்கும் ‘வீரபாண்டியக் கட்டபொம்மன்’ படத்தை ஏன் மீண்டும் திரையிடக் கூடாது என்ற எண்ணம் தோன்றியது. உடனே முயற்சிகள் மேற்கொண்டோம். திரையரங்கினர் பலரும் பெரிய ஆர்வம் காட்டினார்கள்.
எனவே செப்டம்பர் 13 முதல் மதுரை நகரில் அண்ணாமலை, மிட்லண்ட், வெற்றி ஆகிய திரையரங்குகளிலும் திண்டுக்கல் ஆர்த்தி கார்னிவல், சிவகாசி காசி, தளவாய்புரம் கிருஷ்ணா திரையரங்குகளிலும் படத்தை வெளியிடுகிறோம். இருபெரும் திரை விழாவிற்கு வருபவர்கள் அதன் தொடர்ச்சியாகத் திரைப்படத்தையும் பார்த்து ரசிப்பார்கள் என நினைக்கிறோம். குறிப்பாக இன்றைய மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திப் படத்தை பார்த்தால் நம்முடைய சுதந்திர வரலாற்றின் தியாகங்களை உணர்வார்கள்" என்று நம்பிக்கை தெரிவித்தார்.