

டோட்டோ
வெகு காலமாகக் கல்லூரி வாழ்க்கையைப் பெரும்பாலும் தவறாகவே சித்தரித்து வந்திருக்கிறது இந்தி சினிமா. ‘வோஹ் தின்’, ‘குச் குச் ஹோத்தா ஹை’,‘3 இடியட்ஸ்’ என வெகு சில திரைப்படங்களே யதார்த்தத்தை மீறியபோதும் கல்லூரி வாழ்வை நேர்மையாகச் சித்தரித்திருக்கின்றன. 2016-ல் வெற்றியைக் கொண்டாடும் மல்யுத்த விளையாட்டைக் களமாகக் கொண்டு சிறப்பானதொரு படைப்பைக் கொடுத்தவர் இயக்குநர் நிதேஷ் திவாரி. இம்முறை தோல்வியை எதிர்கொள்வது பற்றி மற்றுமொரு சிறந்த படத்தைத் தந்திருக்கிறார்.
பள்ளிப் படிப்பு , அதைத் தொடரும் நுழைவுத் தேர்வு , அதன் அழுத்தம் காரணமாகப் பள்ளியிறுதிப் படிப்பு முடித்த மாணவன் ராகவ் ஒரு சிக்கலில் மாட்டிக்கொண்டு, ஓர் அசாதாரணமான சூழலில் சிக்கித் தவிக்கிறான். அந்நேரம் அவனது தந்தை, மனைவியைப் பிரிந்து தனியே வாழும் அன்னி எனப்படும் அனிருத் பாதக், தன் இளமைக் கால கல்லூரி, விடுதி வாழ்வு, தோல்விகள், ‘லூசர்ஸ்’ என்று அழைக்கப்பட்ட தன் நண்பர்கள் குழு பற்றி விவரிக்கிறார். விஷயமறிந்த அதே நண்பர்கள் ஒன்று சேர்ந்து கடந்த காலப் பதிவுகளை ராகவ்விடம் கூட்டாகச் சொல்லி வாழ்வின் உன்னதத்தை உணர்த்துகின்றனர். சம கால உயிரின் போராட்டம், கடந்த காலக் குதூகலமான ஹாஸ்டல் வாழ்வு என மாறி மாறி, பயணிப்பதுதான் படத்தின் கதை.
கதை முதல் ஐந்து நிமிடங்களிலேயே தொடங்கிவிடுகிறது. கதையில் நடக்கும் தீவிர அறுவை சிகிச்சையும் அதைத் தொடரும் விளைவுகளும் ஒரு புறம். கடந்த காலக் கல்லூரி வாழ்வில் நடக்கும் கலகலப்பான சம்பவங்கள் மறுபுறம் என வேகமெடுக்கிறது திரைக்கதை. விடுதியில், முதல் வருடத்தில் அன்னி, செக்சா, ராகி, ஆசிட் , மம்மி, டெரக், பெவ்டா உள்ளிட்டோரைக் கொண்ட குழுவில் ஒரே ஒரு பெண்ணாக மாயா சேர்வது, அவர்கள் ஒவ்வொருவராகக் குழுவில் சேரும் நிமிடத்திலிருந்து முழுக்க ரகளையாக நகர்வது எல்லாமே கலகலப்பான தருணங்கள். நடிகர்கள் அனைவருமே சிறந்த பங்களிப்பைத் தந்திருக்கிறார்கள்.
ஒவ்வொரு பட்டப் பெயரின் ரகசியங்கள், ரசமான ஹாஸ்டல் வாழ்வின் தருணங்கள் ஆகியவற்றுடன் கொஞ்சம் சஸ்பென்ஸுடன், வலிந்து புகுத்திய சோகத்தையும் மிகப் பிரமாதமான ஒரு கருத்தையும் சரிவிகிதத்தில் திரைக்கதையின் போக்கில் கலந்திருக்கிறார்கள். பிள்ளை வளர்ப்பின் ஒரு பகுதியாக நம் குழந்தைகள் தோற்று விழ வேண்டியதையும் அதே நேரம் விழுந்தே கிடக்காமல் வாழ்வதற்காக எழுந்து போராட வேண்டியதையும் இந்தப் படம் மிக நேர்த்தியாகச் சொல்லிவிடுகிறது.
ஆங்கிலத்தில் வெளிவந்த ஆடம் சாண்ட்லர்ஸின் ‘குரோன் அப்ஸ்’ படத்தை அதிகம் நினைவுபடுத்துகிறது. தவிர ‘3 இடியட்ஸ்’ படத்தின் உயரத்துக்கு இந்தப் படம் பயணிக்கவில்லை. சின்ன சுவாரசியமான பாடல்களுக்கு ப்ரிதமும் பின்னணிக்கு சமீர் உத்தினும் இசையமைத்திருக்கிறார்கள். வயதான கதாபாத்திர ஒப்பனையில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம்.
இரண்டு மணி நேரம் சிரித்து, அந்தப் பதின்வயது சிறுவனுக்காக வருந்தி, விளையாட்டுப் போட்டிகளில் சுவாரசியம் நுழைத்து இந்தப் படம் சொல்ல வருவது ஒன்றே ஒன்று தான்.வாழ்வில் அதிமுக்கியம் ஜெயிப்பதோ தோற்பதோ அல்ல; தோற்றே போனாலும் தொடர்ந்து வாழ்வை ஒரு வரமாக வாழ்வது தான்.