செய்திப்பிரிவு

Published : 09 Sep 2019 11:30 am

Updated : : 09 Sep 2019 12:01 pm

 

யுடர்ன் 36: கிரைஸ்லர் - மாபெரும் சபைகளில் மாலைகள்!

evenings-at-great-congregations

எஸ்.எல்.வி. மூர்த்தி
slvmoorthy@gmail.com

நவம்பர் 2, 1978. “டெட்ராய்ட் ஃப்ரீ பிரஸ்” (Detroit Free Press) நாளிதழில், இரண்டு தலைப்புச் செய்திகள் அருகருகே:
கிரைஸ்லர் வரலாறு காணாத நஷ்டம். லீ அயக்கோக்கா கிரைஸ்லரில் சேருகிறார். ஃபோர்ட் கம்பெனியில் மாபெரும் வெற்றி கண்ட அயக்கோக்காவால் தங்கள் தலைவிதியை மாற்றி எழுத முடியும் என்னும் நம்பிக்கை கிரைஸ்லர் இயக்குநர்களுக்கும், அமெரிக்க அரசாங்கத்துக்கும் இருந்தது. தயங்கியவர் அயக்கோக்காதான். “ஏராளமான பணம், வசதிகள் அத்தனையும் இருக்கின்றன.

மறுபடி இன்னொருவரின் கீழ் வேலைக்குப் போனால், அவர்களும், இரண்டாம் ஃபோர்ட் போல அவமதிக்கலாம். அதுவும், கிரைஸ்லர் திவாலாகும் கம்பெனி. ஒவ்வொரு நாளும் மன அழுத்தம் இருக்கும். ஏன் இந்தச் சித்திரவதை? அன்பான மனைவி, இரண்டு பாசப் பெண் குழந்தைகள் ஆகியோரோடு வாழ்க்கையைச் செலவிடலாமே?” என்று குடும்பம், உறவினர் ஆலோசனைகள்.

அயக்கோக்கா ஆலோசித்தார். அவர்கள் சொல்வது சரிதான். அதே சமயம், வயது 54 தான். மீதி வாழ்க்கையில் சும்மா இருந்து துருப்பிடிக்கக் கூடாது. இன்று அவர் தோற்றுப் போனவர். இந்தக் களங்கத்தைத் துடைத்தேயாக வேண்டும். வாரிசுகள் தன்னைச் சாதனையாளராகப் போற்றும் முத்திரைப் பதிக்க வேண்டும். தன்னை அவமானப்படுத்திய இரண்டாம் ஹென்றி ஃபோர்டைக் கார் விற்பனையில் தோற்கடிக்க வேண்டும். கிரைஸ்லர் சி.இ.ஓ. பதவிக்குச் சம்மதம் சொன்னார்.

அயக்கோக்கா எதிர்பார்த்ததை விட நிலைமை மோசமாக இருந்தது. ஒவ்வொரு இலாகாவும் தனித்தனித் தீவுகளாக இயங்கினார்கள். இலாகாக்கள் சேர்ந்து செய்ய வேண்டிய வேலைகளில் கூட, அவர்களைக் கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையான முடிவுகள் எடுத்தார்கள்.

குறிப்பாக, வடிவமைப்பாளர்களுக்கும், உற்பத்தி அதிகாரிகளுக்குமிடையே ஒருங்கிணைப்பு சுத்தமாக இல்லை. இதேபோல், தாங்கள் தயாரிப்பதை மார்க்கெட்டிங் விற்க வேண்டும் என்று உற்பத்தி அதிகாரிகள் நினைத்தார்கள். இவை டீலர்களிடம் தேங்கின. இலாகாக்களுக்குள் அடிக்கடி மீட்டிங் நடக்க வேண்டும் என்று அயக்கோக்கா வலியுறுத்தினார். செயல்படுத்தினார். எல்லா இலாகாக்களிலும், கட்டுப்பாடுகளே இல்லாமல் ஆளாளுக்குச் செலவு செய்தார்கள். ஃபைனான்ஸ் துறை உயர் அதிகாரிகள் கேள்விகளே கேட்கவில்லை. பொம்மைகளாக இருந்தார்கள். அயக்கோக்காவின் ஆணைகளையும் மதிக்கவில்லை. அவர்களை மாற்றினார். புதிய வைஸ் பிரசிடென்டை நியமித்தார்.


கார்களின் விற்பனைச் சங்கிலியில் டீலர்கள் மிக முக்கியம். கிரைஸ்லர் இந்த உறவை வளர்க்கவேயில்லை. உதாசீனம் செய்தார்கள். பல டீலர்கள் ஜெனரல் மோட்டார்ஸுக்கும், ஃபோர்டுக்கும் மாறினார்கள். அயக்கோக்கா டீலர் மேம்பாட்டுக்கெனத் தனி உயர் அதிகாரியை நியமித்தார். இதேபோல், கார்களின் தரமும் தரை மட்டம். புதிய வைஸ் பிரசிடென்ட் வந்தார். தினமும் தொழிற்சாலையின் வெவ்வேறு பகுதிகளுக்குப் போவார். புதிய டொயோட்டா காரைப் பிரித்துப் பார்த்து, கிரைஸ்லர் தயாரிப்புகளோடு ஒப்பிடச் சொல்லுவார். நெத்தியடி. தங்கள் கார்களில் முன்னேற்றம் செய்தேயாக வேண்டும் என்னும் விழிப்புணர்வு தொழிலாளிகளுக்கு வந்தது.

நம் ஊர் லோக் சபா, ராஜ்ய சபா போல் அமெரிக்காவில் காங்கிரஸ், செனட் என்னும் இரு அவைகள். நிறுவனங்களுக்கு அரசின் நிதி உதவி தேவைப்படும் போது இரு சபைகளும் அமைக்கும் கமிட்டி முன்னால் தங்கள் வேண்டு கோளை முன்வைத்துக் கடன் கேட்பவர் வாதாட வேண்டும். இந்தக்கமிட்டி முடிவெடுக்கும். எதிர்ப்புறமிருந்து பறந்து வந்தன கேள்விக் கணைகள். ``அமெரிக்கா தனியார் தொழில்முனைவின் இருப்பிடம். அரசாங்கம் பிசினஸில் தலையிடுவதை எதிர்க்கும் தேசம். லாபம் பார்க்கும்போதெல்லாம், அரசாங்கத்தை விலகி நிற்கச் சொல்லும் அயக்கோக்கா போன்ற தொழில் அதிபர்கள் நஷ்டம் வரும்போது, அரசின் உதவியைக் கேட்பது ஏன்?” அயக்கோக்கா பேச்சுத் திறமையில் வல்லவர். அற்புதமாக வாதாடினார்.

``கிரைஸ்லர் அமெரிக்காவின் பத்தாவது பெரிய நிறுவனம். கார்த் தொழிலில் மூன்றாவது. 54 வருடப் பாரம்பரியப் பெருமை கொண்டது. அரசு உத்தரவாதமாக நின்றால், வங்கிகள் தேவைப்படும் 150 கோடி டாலர்கள் (அன்றைய மதிப்பில் சுமார் 1,200 கோடி ரூபாய்) தருவார்கள். 3,60,000 தொழிலாளிகளின் வேலை, பல்லாயிரம் உதிரி பாகங்கள் தயாரிப்பாளர்களின் வருங்காலம், M 1 ராணுவ டாங்கிகள் தயாரிப்பு ஆகியவற்றைக் காப்பாற்ற இதுதான் ஒரே வழி. இப்போது கம்பெனியை வழி நடத்துவது கார்த் தொழில் மேதைகளின் அணி. அரசு உத்தரவாதம் கொடுத்தால், பத்தே வருடங்களில் வங்கிகளின் 150 கோடி டாலர்கள் கடனை கிரைஸ்லர் நிச்சயமாகத் திருப்பித் தருவதாக உறுதிமொழி தருகிறேன்.“

அமெரிக்கத் தலைநகரான வாஷிங்டன் நகரத்தில் வாரம் இருமுறை விசாரணை. அயக்கோக்கா நேரடியாக ஆஜராக வேண்டும். ஒவ்வொரு நாளும் 8 முதல் 10 மீட்டிங்குகள். இதற்கு நடுவில், கம்பெனியைத் தலைதூக்க வைக்கும் முயற்சிகளையும் தொடர்ந்து செய்ய வேண்டும். உடல், மன உளைச்சல்களோடு சமாளித்தார். அதே சமயம், டீலர்களைப் பல குழுக்களாக, காங்கிரஸ், செனட் அங்கத்தினர்களைச் சந்தித்து, கிரைஸ்லர் தரப்பு நியாயங்களை விளக்கச் சொன்னார். பொதுமக்களின் ஆதரவைப் பெற, கம்பெனிக்கு அரசு உத்தரவாதம் எத்தனை அத்தியாவசியம் என்னும் பல முழுப்பக்க விளம்பரங்கள். அயக்கோக்கா குடியரசுத் தலைவர் ஜிம்மி கார்ட்டரையும் நேரடியாகச் சந்தித்து ஆதரவுகேட்டார். அவரும் உதவிக்கரம் நீட்டினார்.

காங்கிரஸ், செனட் இரு சபைகளிலும், கிரைஸ்லருக்கு 15 கோடி டாலர்கள் அரசு உத்தரவாதம் தரும் மசோதா கொண்டுவரப்பட்டது. கடுமையான விவாதங்கள். இரண்டு சபைகளிலும் வாக்குகள் விவரம்: காங்கிரஸ்; ஆதரவு – 271 வாக்குகள்; எதிர்ப்பு – 136 வாக்குகள். செனட்; ஆதரவு – 53 வாக்குகள்; எதிர்ப்பு – 44 வாக்குகள். ஆமாம், அயக்கோக்காவின் இமாலய முயற்சிகள் ஜெயித்தன. தெளிவான நோக்கும், திடமான நெஞ்சும் கொண்ட தலைவர், அவர் ஆணையை நனவாக்கத் துடிக்கும் திறமை நிறைந்த படை, தேவையான பணம் - கிரைஸ்லருக்கு விடிவுகாலம் தொடங்கிவிட்டது. ஆனால், இன்னும் சில தடைக்கற்கள். கிரைஸ்லர், அமெரிக்க வங்கிகளில் மட்டுமல்ல, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து, ஈரான், ஜெர்மனி போன்ற பல்வேறு நாடுகளின் இருபதுக்கும் அதிகமான வங்கிகளிலிருந்து கடன் வாங்கி இருந்தார்கள். இவர்களுக்கு கிரைஸ்லர் மறுவாழ்வு பெறும் என்னும் நம்பிக்கை கொஞ்சம் கூட இல்லை.

ஆகவே, அமெரிக்க அரசின் உத்தரவாதம் இருந்த போதிலும், கொடுத்த கடனை உடனே திருப்பிக் கேட்டார்கள். நிதி வைஸ் பிரசிடென்ட் அவர்களிடம் சாம, தான, பேத, தண்ட முறைகளைப் பயன்படுத்தினார். பல மாத முயற்சிகள். அதிகக் கடன் தரச் சம்மதித்தார்கள். எந்தக் கம்பெனியிலும் லாபம் பார்க்கவேண்டுமானால், வரவைக் கூட்ட வேண்டும், செலவைக் குறைக்க வேண்டும். வரவை அதிகமாக்கப் புது மாடல் கார்கள் உருவாக்க வேண்டும். அதற்கான முயற்சிகளை அயக்கோக்கா தொடங்கினார். இந்த முயற்சி அறுவடை தர ஓரிரு வருடங்களாகும். ஆகவே, செலவைக் குறைக்கும் நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை தந்தார்.

தானே முன்னுதாரணம் காட்டினார். அவர் மாதச் சம்பளம் 30,000/- டாலர்கள். இதை விட்டுக் கொடுத்தார். கம்பெனி நிதி நிலைமை முன்னேறும் வரை 1 டாலர் மட்டுமே வாங்கப்போவதாக அறிவித்தார். இதே பாதையில், உயர் அதிகாரிகள் தங்கள் ஊதியத்தை 10 சதவிகிதம் குறைக்கச் சம்மதித்தார்கள். இந்தப் பின்புலத்தோடு, தொழிற்சங்கத் தலைவர்களோடு பேச்சு வார்த்தை நடத்தினார். தங்கள் சம்பளத்திலும் 10 சதவிகித வெட்டுக்கு ஒப்புக்கொண்டார்கள். ஆண்டுக்குப் பல மில்லியன் டாலர்கள் மிச்சம்.

அடுத்ததாக அயக்கோக்கா செய்தது ஒரு மாபெரும் புரட்சி. கம்பெனிகளில் மேனேஜர்களுக்கும், தொழிலாளிகளுக்கு மிடையே ஒரு தடுப்புச் சுவர் உண்டு. ஒருவரை ஒருவர் நம்பவே மாட்டார்கள். லாபம் வரும் போது தங்கள் சாதனைகளாகத் தம்பட்டம் அடிப்பார்கள். நஷ்டம் வரும்போது மற்றவரைப் பழிப்பார்கள். கிரைஸ்லர் மீண்டு வர, இரு தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டுமென்று அயக்கோக்கா நினைத்தார். யூனியன் தலைவராக இருந்த டக் பிரேஸர் என்பவரை இயக்குநர் குழு அங்கத்தினராக நியமித்தார். அமெரிக்க பிசினஸ் வரலாற்றில், யூனியன் தலைவர் டைரக்டராவது இதுவே முதல் முறை. தொழிலாளிகளின் உந்துதலுக்கும், அர்ப்பணிப்புக்கும், இந்த நியமனம் கணிசமாக உதவியது.

இந்தக் கூட்டுறவின் பலன் – அக்டோபர் 1980–ல், அதாவது, அயக்கோக்கா கைகளில் கடிவாளம் கிடைத்த இருபத்து மூன்றே மாதங்களில், ஏரீஸ் (Aries), ரிலையன்ட் (Reliant) என்னும் இரு மாடல்கள் அறிமுகம். இரண்டும் மாபெரும் வெற்றி. ஆச்சரியமோ ஆச்சரியம். கம்பெனி ஒரு மில்லியன் டாலர் லாபம். சின்னத் தொகைதான். ஆனால், கும்மிருட்டில் முதல் வெளிச்சக் கீற்று. 1983. லாபம் 925 மில்லியன் டாலர்கள். பொழுது விடிந்துவிட்டது. 1990 –ல் மொத்தக் கடன்களையும் திருப்பிக் கொடுப்பதாக அயக்கோக்கா வாக்குறுதி கொடுத்திருந்தார். 1983–ல், அதாவது, குறிப்பிட்ட தேதிக்கு ஏழு வருடங்கள் முன்பாகவே தந்துவிட்டார். அமெரிக்க வரலாற்றில், முன்னதாகக் கடனைத் திருப்பி அடைத்த முதல் நிறுவனம்.

அமெரிக்கப் பொதுமக்களுக்கு இப்போது, அயக்கோக்கா ஒரு சூப்பர் ஸ்டார், நிஜ வாழ்க்கை ஹீரோ. ஏறும் மேடையெல்லாம் ஆரவார வரவேற்பு. 1984 அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தலில் அவர் போட்டியிட வேண்டும், அமெரிக்காவை உலக மகா வல்லரசாக்க வேண்டும் என்று நாடெங்கும் ஒலித்தன. அயக்கோக்கா மறுத்துவிட்டார். 1978–ல், வேலையை விட்டுத் துரத்தப்பட்ட அவமானம். ஆறே ஆறு வருடங்களில், நாடளாவிய பாராட்டுகள். இதற்கு மேல் ஒரு மனிதருக்கு வேறென்ன அங்கீகாரம் வேண்டும்? (அயக்கோக்கா 1992 வரை கிரைஸ்லர் சேர்மெனாகத் தொடர்ந்தார். இதற்குப் பிறகு, பல சமூகநல அமைப்புகளில் சேவை. ஜூலை 2, 2019 அன்று, தன் 95 –ம் வயதில், வாழ்வாங்கு வாழ்ந்த முழுத் திருப்தியோடு அமரரானார்.)
(புதிய பாதை போடுவோம்!)

யுடர்ன்மாபெரும் சபைகள்மாலைகள்கிரைஸ்லர்கார்களின் விற்பனைடீலர்கள்பெரிய நிறுவனம்ராணுவ டாங்கிகள்தொழில் மேதைகள்விளம்பரங்கள்தொழிற்சங்கத் தலைவர்கள்
Popular Articles

You May Like

More From This Category

More From this Author