Published : 06 Sep 2019 10:58 am

Updated : 06 Sep 2019 10:58 am

 

Published : 06 Sep 2019 10:58 AM
Last Updated : 06 Sep 2019 10:58 AM

வீரபாண்டிய கட்டபொம்மன் 60: அந்நிய மண்ணில் அங்கீகரிக்கப்பட்ட இசை!

veerapandiya-kattabomman

பி.ஜி.எஸ். மணியன்

மறக்க முடியாத திரையிசை

‘வீரபாண்டிய கட்டபொம்மன் படம் நடிகர் திலகத்துக்கு மட்டும் கெய்ரோ பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றுத்தரவில்லை, சிறந்த இசை அமைப்பாளர் விருதையும் பெற்றுத்தந்தது. விருது பெற்ற இசைச் சக்கரவர்த்தி ஜி. ராமநாதன் இசையில் காலம் மறக்காத அனைத்துப் பாடல்களையும் எழுதியவர் கவிஞர் கு. மா. பாலசுப்ரமணியம்.

அனைத்து அம்சங்களிலும் ஒன்றை ஒன்று விஞ்சி நிற்கும் ஜி.ராமநாதனின் இசை, நினைத்துப் பார்க்கும்போதே பிரமிக்க வைப்பது. பாடல்களுக்காக அவர் தேர்ந்தெடுத்த பாடகர்கள் அனைவரும் பாராட்டுகளையும் விருதுகளையும் அள்ளிக் குவித்தார்கள்.

கள்ளர் கூட்டத்தை அடக்க கட்டபொம்மன் தன் தம்பியுடனும் வீரர்களுடனும் மாறுவேடத்தில் செல்லும்போது இடம்பெறும் ‘மாட்டுவண்டி பூட்டிக்கிட்டு மாமனையும் சேத்துக்கிட்டு’ அப்பட்டமான கிராமிய மணம் வீசும் பாடல். சங்கராபரணம் ராகத்தின் ஸ்வரங்களை எளிமையிலும் எளிமையாகக் கையாண்டு மரபிசைக்குப் புது வடிவம் கொடுத்திருக்கிறார் ஜி. ராமநாதன்.

சிவாஜி கணேசனுக்கு சௌந்தரராஜனையும் பெண் குரலுக்கு டி.வி. ரத்னத்தையும் பாடவைத்தார். பெண் குரலுக்கு வாயசைத்து நடித்திருப்பவர் நகைச்சுவை நடிகர் ஏ.கருணாநிதி. கட்டபொம்மனின் அரசவை தொடங்கும் முன்பாக வரும் தொகையறா ‘சீர் மேவும் பாஞ்சை நகர்’. வி.என்.சுந்தரத்துடன் இணைந்து பாடியவர் ஜி. ராமநாதனின் உதவியாளர் வி.டி.ராஜகோபால்.

‘அஞ்சாத சிங்கம் என் காளை’ பி.சுசீலாவின் குரலும், ஜி.ராமநாதனின் இசையும் வெகு அற்புதமாக இணைந்த பாடல். இணைப்பிசையில் வரும் ஷெனாய் வாத்தியத்தைப் பொதுவாகச் சோகத்துக்கு என்றே பயன்படுத்துவார்கள். இந்தப் பாடலில் உற்சாகத்துக்கு அழகாக இணை சேர்த்திருக்கிறது அந்த வாத்தியம். அடுத்து கு.மா.பாவின் பெயர் சொல்லும் ‘இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே’ பாடல். பி.பி. ஸ்ரீனிவாஸும் பி. சுசீலாவும் இணைந்து பாடிய முதல் பாடல் என்ற பெருமையைக் கொண்டது. ‘பீம்ப்ளாஸ்' ராகம் வெண்ணிலாவின் குளிர்ச்சியோடு தென்றலின் மென்மையும் பொங்க, இருவர் குரலிலும் வெளிப்படும் இனிமை அபாரம்.

உயர்வு நவிற்சி அணி வகையை அற்புதமாகக் கையாண்டு பாடலை வடிவமைத்திருக்கிறார் கவிஞர் கு.மா.பா. ‘அன்பில் ஊறும் மெய்க்காதல்’ வயப்பட்ட காதலர்கள் இப்படித்தான் பாடுவார்களோ என்று வியக்க வைக்கிறது பாடல். ‘கறந்த பாலையும்’ ஜாக்சன்துரையைச் சந்திக்க கட்டபொம்மன் அணிவகுத்துச் செல்லும்போது டி.எம்.எஸ். குழுவினருடன் பாடும் இந்தப் பாடல் ஒரு ராணுவ அணிவகுப்புப் பாடல்.

பாஞ்சாலங்குறிச்சியின் வரலாறு ‘முசலும் நாயைக் கடிந்திடுமே வெகு முனைப்புள்ள பாஞ்சால நாட்டினிலே’ என்ற எளிமையான வரிகளில் அழகாகப் பொருந்த அந்த அழகு சற்றும் கெடாதவாறு இசை அமைந்திருக்கிறது. ‘சிங்காரக்கண்ணே உன் தேனூறும் சொல்லாலே
தீராத துன்பங்கள் தீர்ப்பாயடி’ - பிருந்தாவன சாரங்காவில் நடிகை எஸ். வரலக்ஷ்மியின் குரலில் ஒரு அருமையான இனிமை நிறைந்த பாடல்.

“சிங்காரக் கண்ணேன்னு கட்டபொம்மன் படத்துலே ஒரு பாட்டு பாடியிருப்பேன். ரொம்ப “மெலடியா”, ரொம்ப “ஸ்வீட்டா” அமைஞ்ச பாட்டு அது. ராத்திரி கேட்டாலும் நல்லா இருக்கும். பகல்லே கேட்டாலும் நல்லா இருக்கும். அப்படிப்பட்ட ராகத்துலே அழகா அமைச்சிருக்கார் ராமநாதன். அதனாலே அந்தப் பாட்டுக்கு அப்படி ஒரு வரவேற்பு கெடைச்சது. என் மனசெல்லாம் நெறைஞ்ச பாட்டு அது” என்று மனநிறைவோடு ஒரு பேட்டியில் குறிப்பிட்டார் எஸ்.வரலக்ஷ்மி.

‘வெற்றிவடிவேலனே’ என்று கம்பீரக் குரலில் வி.என்.சுந்தரம் தொடங்க, ‘மனம் கனிந்தருள் வேல்முருகா’ என்று கனிந்த குரலில் குறிஞ்சி ராகத்தில் அமைக்கப்பட்ட இப்பாடலில் ஒவ்வொரு முறை பல்லவிக்கு வரலக்ஷ்மி வரும் போதெல்லாம் ஒவ்வொரு புதிய சங்கதி வெளிப்படும். இறுதியில் வரும் விறுவிறுப்பான வயலின்களின் சேர்க்கை முடியும்போது வரலக்ஷ்மியின் குரல் உச்சம் தொடும். அழகும் அமைதியாகத் தொடங்கி வேகமாக முடியும் இப்பாடலில் ஜி.ராமநாதனின் இசை மேதமை பளிச்சென்று வெளிப்பட்டிருப்பதைக் கேட்டு உணர முடியும். அதேபோல் அவரது இசை சாம்ராஜ்யத்துக்குப் பொருத்தமான இசையரசியாக வரலக்ஷ்மி ஜொலிக்கும் பாடலாகவும் இது அமைந்துவிட்டது.

விடுகதைப் பாடலான ‘டக்கு டக்கு என அடிக்கடி துடிக்கும்’ பி.சுசீலா, ஏ.பி. கோமளா, எஸ்.வரலக்ஷ்மி மூவரின் குரல்களும் இணைந்த உற்சாகமான பாடல். போருக்குப் புறப்படும் வெள்ளையத்தேவனை அவன் மனைவி தான் கண்ட கனவைச் சொல்லித் தடுக்கும் பாடல் ‘போகாதே போகாதே என் கணவா பொல்லாத சொப்பனம் நானும் கண்டேன்’. அதைப் பாடியவர் ஏ.ஜி. ரத்னமாலா. அவலச்சுவை நிறைந்த பாடல் என்றாலும் நினைவில் நிற்கத் தவறவில்லை.

தங்கள் குல தெய்வமான ஜக்கம்மாவிடம் மக்கள் கட்டபொம்மனின் வெற்றிக்காக வேண்டிப் பாடும் பாடல் ‘ஜக்கம்மா வேறில்லை திக்கம்மா’. இந்தப் பாடலின் நோக்கம், காட்சிக்கேற்ற மன நிலையைக் காண்பவர் மனதிலும், கேட்பவர் நினைவிலும் பிரதிபலிக்கும்படி இருக்க வேண்டும். அதை சீர்காழி கோவிந்தராஜனால் மட்டும்தான் முடியும் என்று நம்பி பாட வைத்தார் ராமநாதன். பாடினார் சீர்காழி என்று சொல்வதைவிடக் கேட்பவரைச் சூழ்நிலையுடன் ஒன்றவைத்தார் என்று சொல்லலாமா? இந்தப் பாடலின் சிறப்பை விளக்க முடியவில்லை. ராமநாதனின் இசை சிகரத்தை எட்டியது இந்தப் பாடலில்.

இறுதியில் கட்டபொம்மன் தூக்கிலிடப் பட்டதும் ‘வீரத்தின் சின்னமே’ என்ற சீர்காழியின் விருத்தத்தோடு படம் முடிவடைகிறது. அதன் பாதிப்பு, இன்றுவரை நினைவை விட்டு அகல மறுக்கிறது. உண்மை வரலாறு திரைப்பட வடிவம் பெறும்போது, கற்பனையின் அம்சமாக இருக்கும் இசையும் பாடல்களும் கதையின் ஓட்டத்தையும் கதாபாத்திரங்களின் உணர்வு நிலைகளையும் எந்த அளவுக்கு தாங்கி, வெளிப்படுத்த முடியும் என்பதற்கு ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ மிகச் சிறந்த உதாரணம். அதனால்தான், தமிழ் மொழி தெரியாத எகிப்து மண்ணில் இப்படத்தின் இசை சிறந்தது என விருது பெற்றது.

தொடர்புக்கு: pgs.melody@gmail.com


வீரபாண்டிய கட்டபொம்மன்அந்நிய மண்அங்கீகாரம்இசைநடிகர் திலகம்நடிகர் விருதுஅஞ்சாத சிங்கம்பாஞ்சாலங்குறிச்சிதூக்குதிரையிசைஇசை அமைப்பாளர்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like


More From This Category

More From this Author