சிம்மக் குரலோன் 90: காட்சியை வெட்ட மறுத்த திருலோகச்சந்தர்!

சிம்மக் குரலோன் 90: காட்சியை வெட்ட மறுத்த திருலோகச்சந்தர்!
Updated on
3 min read

முரளி ஸ்ரீ நிவாஸ்

தெய்வ மகன் 50 ஆண்டுகள் (05.09.1969)

மாற்றுத் திறனாளி மனிதர்களைக் கேலி செய்தோ, மக்களின் அனுதாபத்தை வேண்டியோ தாழ்வு மனப்பான்மையோடு அவர்களைச் சித்தரித்த காலகட்டம் அது. அதிலிருந்து வேறுபட்டு, தோல் குறைபாட்டின் காரணமாக விகார முகத்தோற்றம் கொண்ட தந்தை, மகன் கதாபாத்திரங்கள் பார்வையாளர்களை நிமிர்ந்து உட்கார வைத்தன.

முதல் மகன் இறந்துவிட்டான் என்ற நினைப்பில் வாழும் தாய், அழகு மன்மதனாய் இளைய மகன் என நான்கு பேரின் பாசப் போராட்டத்தைக் கதைக் களமாகக் கொண்டு உருவான அந்தப் படம் 1969-ல் வெளியான ‘தெய்வ மகன்’. தமிழ் சினிமாவிலிருந்து சிறந்த அயல்மொழிப் படத்துக்கான ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட முதல் படம்.
வங்கத்தில் விளைந்த கதை, தமிழுக்கும் அழகாய் பொருந்திப்போன ரசவாதம் நிகழக் காரணமாக இருந்த மூலவர் சிவாஜி கணேசன். துணை நின்ற உற்சவர்கள் ஏ சி திருலோகச்சந்தரும் ஆரூர்தாஸும்.

தந்தையின் தவிப்பு

முதல் காட்சியிலேயே பிறந்த கைக்குழந்தையைக் கொன்றுவிடச் சொல்லும் குரூரப் பணக்காரராக அறிமுகமாகும் தந்தையின் கதாபாத்திரம் சிக்கலானது. தனது விகார முகம், தனக்குத் தேடித் தந்த அவமானம் எதுவும் மகனுக்கும் நேரக் கூடாது என்ற நோக்கம், முதலில் டாக்டர் நண்பனாலும் பின்னாட்களில் அந்த மகனாலுமே தவறாகப் புரிந்து கொள்ளப்படும்போது தலை குனிந்து நிற்கையில் ஓர் உணர்வுப் பரிமாணம் காட்டுவார்.

மனைவியிடம் காட்டும் அதீத அன்பும் இளைய மகன் வாழ்க்கையை விளையாட்டாக எடுத்துக்கொள்வதை ஒவ்வொரு முறையும் கடிந்து பேசுவதன் மூலம் அவன் மீது வாஞ்சையை வெளிப்படுத்தும்போது அதற்குரிய உணர்வு நிலையை வெளிப்படுத்துவார். படிக்கட்டுகளில் இறங்கிவரும்போது சீரான நடையில் கண்ணியமும் ஒழுக்கமும் மிக்க தொழிலதிபருக்கான உடல் மொழி இப்படித்தான் இருக்குமோ என்று எண்ண வைத்துவிடுவார். நண்பனின் வீட்டில் சிதார் இசை கேட்டு மகனைப் பார்க்கத் துடிக்கும் அந்தத் தவிப்பு ஒரு கவிதை.

மூத்த மகனாக ஒரு முத்திரை

மூத்த மகன் கண்ணன். சிறு வயது முதல் முரட்டுத்தனமும் மூர்க்கமும் கொண்டவன். தனக்கு வேண்டியவற்றைச் சாதித்துக்கொள்ளும் குணம். தனது பெற்றோரைத் தெரிந்துகொள்ள டாக்டரை மிரட்டும் குரூர குணம், துப்பாக்கித் தோட்டாவுக்கும் எதிர்நின்று பெற்றோரையும் தம்பியையும் பார்க்கச் செல்லும் துணிச்சல், தோற்றத்தில் குறையுள்ள ஆண் மகனையும் பெண்கள் விரும்புவார்கள் என்ற ‘ஒதெல்லோ’ கதை கேட்கும்போது டாக்டரின் கையைப் பிடித்துக்கொள்ளும் நெகிழ்ச்சி, வில்லன் குழுவை வெறும் கைகளால் காலி செய்யும் ஆவேசம், கோயிலில் ஒளிந்திருந்து தனது தாயைப் பார்க்கும் அந்தப் பார்வை, என உள்ளம் உடையும்போது உடைந்து, உண்மையை உணரும்போது உணர்ந்து, வலி, நெகிழ்வு மகிழ்வு எனத் தான் உணரும் உணர்வுகளின் கலவையை நமக்குக் கடத்தி கதாபாத்திரமாகவே வாழும் அந்த மூத்த மகன், தெய்வ மகனாக நடிப்பில் பதிக்கும் முத்திரை நடிகர் திலகத்துக்கு மட்டுமே உரியது.

உள்ளத்திலும் அழகன்

இளைய மகன் விஜய் தோற்றத்தில் அழகன். குறும்புத்தனமும் அப்பாவித்தனமும் விளையாட்டுக் குணமும் ஒன்றிணைந்த வார்ப்பு. நகத்தைக் கடித்துக்கொண்டே நிற்பது, நடப்பது என்று சற்றே பெண்மையின் நளினம் எட்டிப் பார்க்கும் ஒரு கத்தி முனை கதாபாத்திரம். அதை எந்தச் சேதாரமும் இல்லாமல் தனது நடிப்பு மொழியில் வடிவமைத்திருப்பார் அதே சிவாஜி. அப்பாவிடம் பயம், அவர் இல்லை என்று நினைத்துக்கொண்டு 'டாடி ஒரு ஜப்பான் பொம்மை' எனும் குறும்பு, அம்மாவின் செல்லம், காதலிக்கும் பெண்ணிடம் சின்ன ஊடல்கள், தொழிலில் கூட்டுச்சேர்ந்த நண்பனின் சதியைப் புரிந்துகொள்ளாத ஏமாளி என வெகு எளிதாக ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துவிடுவார்.

ஆரூர்தாஸ் வசனங்களால் பலம் சேர்த்திருப்பார். "நீங்கக் கூப்பிட்டு நான் தெரிஞ்சுக்க வேண்டிய பெயரை, நான் சொல்லி நீங்க புரிஞ்சுக்க வேண்டிய நிலைமை", "நான் குற்றவாளிக் கூண்டிலே,கடந்த காலம் சாட்சிக் கூண்டிலே, நீ நீதிபதி ஸ்தானத்திலே" போன்றவை சில பளிச் உதாரணங்கள். மூன்று கதாபாத்திரங்களும் ஒரே காட்சியில் தோன்றுவது படத்தின் சிகரமான ஒன்று. அது பற்றி இயக்குநர் திருலோகச்சந்தர் ஒன்றை மனம் விட்டுப் பகிர்ந்து கொண்டிருக்கிறார். “அந்தக் காட்சியின் நீளம் ஏழு நிமிடங்கள்.

நீளத்தைக் குறைக்க வேண்டும் என்று எடிட்டர் பிடிவாதமாக நின்றபோது, அதை நானே இரண்டு மூன்று முறை போட்டுப் பார்த்துவிட்டு எடிட்டரிடம் சொன்னேன்.. ‘மூன்று பேருமே அருமையாகப் பண்ணியிருக்கிறார்கள், இதில் யாரைக் குறைப்பது எனக் கேட்டேன். கேட்ட பிறகே எனக்கு உறைத்தது.. மூன்று கதாபாத்திரங்களும் தனித் தனியாகத் தெரியும்படி சிவாஜி நடித்ததால்தானே யாரைக்
குறைப்பது என்று என்னால் கேட்க முடிந்தது!” என்றார்.

படத்தின் இயக்குநரே மூவரும் ஒருவர் என உணர முடியாதபோது பார்வையாளர்கள் மட்டும் விதிவிலக்கா? படத்துக்கு ‘உயிரோவியம்’ என முதலில் வைக்கப்பட்ட பெயருக்கேற்ப சங்கர், கண்ணன், விஜய் இந்த மூவரையும் மூன்று வெவ்வேறு உயிரோவியங்களாக நமது ஆழ்மனதில் செதுக்கிய உன்னத நடிப்புக் கலைஞன் சிவாஜியின் நடிப்பாளுமைக்குச் சான்றாக விளங்கும் ‘தெய்வமகன்’ தலைமுறைகள் கடந்தும் வியக்க வைக்கும்.

தொடர்புக்கு: t.murali.t@gmail.com
படங்கள் உதவி: ஞானம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in