

சிம்மக் குரலோன்-90, வீரபாண்டிய கட்டபொம்மன்-60
தமிழ்த் திரையில் தன்னிகரற்ற சாதனைகள் படைத்த மாபெரும் கலைஞர், “சிவாஜி கணேசன். அவரது
90-வது பிறந்த தினத்தை, ‘சிம்மக் குரலோன்-90’ என்ற தலைப்பில் சென்னையிலும் கோவையிலும் கோலாகலமாகக் கொண்டாடியது ‘இந்து தமிழ்’. தற்போது, மதுரையில் மையம் கொள்ளவிருக்கிறது ‘சிம்மக் குரலோன்–90’ கலை விழா.
‘சிம்மக் குரலோன்’ என்ற பட்டத்தையும் உலகின் சிறந்த நடிகர் என்ற விருதையும் நடிகர் திலகத்துக்குக் கொண்டு வந்து சேர்த்த திரைக் காவியம் ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’.
அத்திரைப்படம் வெளி யாகி 60 ஆண்டுகள் நிறைவடை கின்றன. சிம்மக் குரலோன்-90 கொண் டாட்டத்துடன் ‘வீரபாண்டிய கட்ட பொம்மன்’ படத்தின் 60-ம் ஆண்டு விழாவை சிவாஜி மன்றங்களுடன் இணைந்து, மதுரையில் இருபெரும் திரை விழாவாக வரும் 14.09.2019 சனிக்கிழமை மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை நடத்துகிறது இந்து தமிழ்.
நம் காலத்தின் நடிப்புப் பல்கலைக் கழகத்துக்கான கொண்டாட்டத்தில் பங்கேற்க நடிகர் திலகத்துக்குத் தங்கள் இதயக் கமலத்தில் இடமளித்திருக்கும் அவரது அபிமான ரசிகர்களையும் வாசகர் களையும் பெரு மகிழ்வுடன் அழைக்கிறது இந்து தமிழ்.
சிறப்பு அம்சங்கள்
‘வீரபாண்டிய கட்டப்பொம்மன்’ படத்தில் ஜாக்சன் துரையாக நடித்த 89 வயது முதுபெரும் நடிகர் சி.ஆர்.பார்த்திபன் சிவாஜியுடனான தனது நினைவுகளைப் பகிர்ந்துகொள்ளும் சிறப்புக் காணொலி, சிவாஜியின் கலை வாழ்க்கையை ஆய்வு செய்து, சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர் தரும் வியப் பூட்டும் தகவல் துளிகள் அடங்கிய சிறப்புக் காணொலி, சிவாஜியின் நவரச நடிப்பாளு மையை அங்குலம் அங்குலமாக அலசும் சிறப்புக் காணொலி, இவற்றுக்கெல்லாம் முத்தாய்ப்பாக ‘தி இந்து கண்ட சிவாஜி ராஜ்ஜியம்’ என்ற ஆவணக் கருவூலம் என உங்கள் நேரத்தை அர்த்தமும் ஆனந்தமுமாக மாற்ற இருக்கிறது இருபெரும் திரைவிழா.
சிறப்பு விருந்தினர்கள்
இந்த விழாவின் பெருமைமிகு சிறப்பு விருந்தினர்கள், நடிகர் திலகத்தின் அபிமானி களாகிய நீங்கள்தாம். அதேநேரம் இன்றைய திரையுலகில் அவரது தொடர்ச்சியாக இயங்கி ரசிகர்களைக் கவர்ந்து வரும் பிரபலங்கள் பலர் பங்கேற்க, நடிகர் திலகத்தின் குடும்பத்தினர், மதுரை உள்ளிட்ட தென் மாவட்ட சிவாஜி மன்றத்தினர் என விழாவுக்கு அர்த்தம் கூட்ட இருப்பவர்களும் உங்களை ஆச்சரியப்படுத்த இருக்கிறார்கள்.
ரசிகர்களின் இதய சிம்மாசனத்தில் வாழும் நடிகர் திலகத்தைக் கொண்டாட இது மைல்கல் தருணம். செப்டம்பர் 14-ல் முத்தமிழ் வளர்த்த மதுரையில் கலைத் தாயின் தலைமகனைக் கொண்டாட வாருங்கள்.. வரவேற்கக் காத்திருக்கிறோம்..
- ஆசிரியர்