செய்திப்பிரிவு

Published : 06 Sep 2019 10:57 am

Updated : : 06 Sep 2019 10:57 am

 

தரைக்கு வந்த தாரகை 29: அழகான பொண்ணு நான்!

beautiful-girl-i-am

தஞ்சாவூர்க் கவிராயர்

‘மிஸ்ஸியம்மா’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே அதிலிருந்து வெளியேறும்படி ஆகிவிட்டது. அப்படி என்னதான் நடந்தது? பானுமதி தொடர்ந்து சொல்லத் தொடங்கினார். “எனக்குத் திருமணம் ஆன நாள் தொட்டு ஒவ்வொரு வருடமும் வரலட்சுமி விரதம் இருப்பதை வழக்கமாக வைத்திருக்கிறேன். இதன் காரணமாக, ‘மிஸ்ஸியம்மா’ படப்பிடிப்புக்கு அன்று ஒரு மணிநேரம் தாமதமாக வரவேண்டியிருக்கும் என்று முன்பே சொல்லிவிட்டேன். ஆனாலும், பூஜையை முடித்துவிட்டுக் கையில் மஞ்சள் கயிற்றோடு நான் படப்பிடிப்புத் தளத்துக்குச் சென்றேன்.

ஆனால், என்னை மகளாகவே பாவிக்கும் வாஹினி நிறுவனத்தார், என்னை அன்று நடத்திய விதம் மனதளவில் காயப்படுத்திவிட்டது. காரணம், சக்ரபாணியின் சர்வாதிகாரப் போக்கு. வழக்கம்போல் எனக்குள் நானே தத்துவார்த்தமாக சமாதானம் செய்து கொண்டேன். ‘பாவம் சக்ரபாணிதான் என்ன செய்வார்? இறைவனின் சதுரங்க விளையாட்டில் அவர் ஒரு பகடைக்காய் அவ்வளவே. இப்படித்தான் நடக்க வேண்டும் என்பது விதியின் விருப்பம். நான் என்ன செய்வது?’ என என் கணவரும் இதனால் மனத்தளவில் பாதிக்கப்பட்டு, ‘விப்ர நாராயணா’ படப்பிடிப்பை இரண்டு மூன்று நாட்கள் நிறுத்திவிட்டார்.” என்று கூறி நிறுத்திய பானுமதி அம்மையார், கண்களைத் தியானிப்பதுபோல் மூடிக்கொண்டார்.

அரை நிமிடம் கரைந்தோடியிருக்கும். பிறகு முகத்தில் புன்சிரிப்பு தவழ “கடவுள் மீது பாரத்தைப் போட்டுவிட்டு என் வேலைகளைக் கவனித்துக்கொண்டிருந்தேன். புண்பட்டிருந்த என் மனசுக்கு ஆறுதலாக வேறொரு மகிழ்ச்சிக் கதவு எனக்காகத் திறந்தது. தென்னிந்தியாவின் முதல் கேவா கலர் படத்தை மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம் தயாரித்தது. ‘அலிபாபாவும் நாற்பது திருடர்களும்’ என்ற அந்தப் படத்தின் கதாநாயகியாக நடிக்க அழைப்பு வந்தது. கதையைக் கேட்டபோது ‘மிஸ்ஸியம்மா’ படத்தில் நான் செய்வதாக இருந்த கதாபாத்திரத்தை விடவும் இது சிறப்பாக இருந்தது.

குவிந்த வாய்ப்புகள்

இந்தப் பட வாய்ப்பு என்னைத் தேடி வந்ததும் மேலும் பல தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களில் நடிக்கவைக்க என்னை அணுகினார்கள். அந்த வேளையில்தான் தேவர் பிலிம்ஸ் எடுத்த ‘தாய்க்குப்பின் தாரம்’ படத்தில் எம்.ஜி.ஆரின் ஜோடியாக நடிக்க என்னை ஒப்பந்தம் செய்தார் தேவர் அண்ணன். பிறகு கிருஷ்ணா பிச்சர்ஸின் ‘மதுரை வீரன்’. இந்தப் படங்களில் எனக்கு மிகச் சிறப்பான கதாபாத்திரங்கள் கிடைத்தன.

எம்.ஜி.ஆருடன் நடித்த மூன்று படங்கள் வெள்ளி விழா கண்டன. சிவாஜிகணேசனுடன் நடிப்பதற்கும் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. ஒரு நல்ல படவாய்ப்பு நழுவியதற்கு ஈடாக இறைவன் அடுத்தடுத்து எனக்கு அளித்த படவாய்ப்புகள் நூறு நாள் படங்களாகவும் எனக்கு விருதுகளைப் பெற்றுத் தந்த படங்களாகவும் அமைந்துவிட்டன.

தெலுங்குப் படங்களில் நடிக்க முடியாமல் போகும் அளவுக்குத் தமிழ்ப் பட வாய்ப்புகள் வந்து கொண்டிருந்தன. நான் என்னைத் தமிழ்ப் பெண்ணாகவே உணரத் தலைப்படும் அளவுக்குத் தமிழ்த் திரைப்பட உலகம் என்னைக் கொண்டாடியது. இந்த நேரத்தில்தான் எங்களின் சொந்தத் தயாரிப்பான ‘விப்ர நாராயணா’வுக்குத் தேசிய விருது கிடைத்தது. ‘விப்ர நாராயணா’ படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போதே தேசிய விருது அமைப்பை நிறுவும் நிகழ்ச்சிக்காகத் தென்னிந்தியாவின் முக்கியத் திரை உலகப் பிரமுகர்களை டெல்லிக்கு அழைத்திருந்தனர். ஏவி. மெய்யப்பச் செட்டியார், லலிதா, பத்மினி, என் கணவர், நான் முதலானோர் அந்நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டிருந்தோம். குடியரசுத் தலைவர் மாளிகையில் அந்த நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சி முடிந்ததும் ஆக்ரா, பிருந்தாவனத்தில் ஒரு கோயில், பதேபூர் சிக்ரி ஆகிய ஊர்களைச் சுற்றிப் பார்த்தோம். டெல்லிக்கு அருகில் உள்ள மதுரா சென்றோம். இங்கே ஜெமினி வாசன் அவர்கள் மதிய விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். நான் நடித்த ஜெமினியின் ‘நிஷான்’, ‘மங்களா’ ஆகிய படங்கள் அப்போதுதான் வெளியாகியிருந்தன. இப்படங்களின் மூலம் அகில இந்திய நட்சத்திரம் ஆகிவிட்டேன். போகும் இடங்களில் எல்லாம் ரசிகர்கள் ‘மங்களா ஆயியே! மங்களா ஆயியே!’ (மங்களா வந்திருக்கிறாள்) என்று என்னைச் சூழ்ந்துகொண்டனர்.

லலிதாவின் குறும்பு

ராதைக்கும் கிருஷ்ணனுக்கும் மதுராவில் கட்டப்பட்டிருக்கும் கோயில் ஒரு காதல் மாளிகை. ஆக்ராவின் தாஜ்மகால் பற்றி என்னவென்று சொல்வது? பத்மினி, தாஜ்மகாலைப் பார்த்து மெய்மறந்து ‘ஆகா இங்கேயே தங்கிவிடலாம்போல் இருக்கே!’ என்றார். ‘அப்படித்தான் ஆகிவிடும் போலிருக்கு. உன் விமான டிக்கெட் இன்னும் கன்ஃபார்ம் ஆகவில்லை’ என்று லலிதா சொன்னாள். ‘ஐயையோ!’ என்று பத்மினி கத்தவும் ஒரே சிரிப்பு. லலிதாவின் குறும்புத் தனங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. அவரும் செட்டியாரும் சீட்டு விளையாடுவார்கள். செட்டியார் தோற்றுக்கொண்டே இருப்பார். ‘ஹோ’ வென்று பெண்களின் சத்தம் எழும்.

தென்னிந்தியாவின் முதல் கேவா கலர் படமான ‘அலிபாபாவும் நாற்பது திருடர்களும்’ பட வேலைகள் தொடங்கின. படத்தின் தயாரிப்பாளர் சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர். சுந்தரம். இதற்கு முன்பே பட்சிராஜா புரொடக்சன்ஸ் தயாரித்த ‘மலைக்கள்ளன்’ படத்தில் நடிப்பதற்காக சேலம் சென்றேன். கூடவே துணைக்கு மாமியாரும் வந்தார். பலர் முன்னிலையில் அவர் என்னுடன் பேச மாட்டார். ஆனாலும், வித்தியாசமாக ஏதேனும் இருந்தால் என் முதுகைச் சுரண்டுவார்.

எம்.ஜி.ஆர். நடித்த ‘மலைக்கள்ளன்’ படம் தெலுங்கில் ‘அக்கி ராமுடு’ என்ற பெயரில் என்.டி.ஆரை வைத்து எடுக்கப்பட்டது. இந்த இரண்டு படங்களுமே வெள்ளிவிழாப் படங்கள். பட்சிராஜா புரொடக்சன்ஸ் முதலாளி ராமுலு இந்த இரண்டு படங்கள் தந்த வெற்றியில் உற்சாகமடைந்தார். திலீப்குமாரையும், மீனா குமாரியையும் வைத்து இந்தியில் ‘ஆஸாத்’ எடுத்தார். அதுவும் வெள்ளி விழா கொண்டாடியது. தமிழ்நாட்டின் தலைசிறந்த கவிஞரான நாமக்கல் கவிஞர் இந்தப் படத்துக்கான கதாசிரியர்.

பிரபலப்படுத்திய பாடல்

சரி.. மறுபடி அலிபாபாவுக்கு வருவோம். ‘அலிபாபாவும் நாற்பது திருடர்களும்’ படத்தில் நான் பாடிய ‘அழகான பொண்ணு நான்’ என்ற பாட்டு தமிழ்நாட்டின் பட்டிதொட்டி எல்லாம் ஒலித்தது!
படத்தின் தயாரிப்பாளர் மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர். சுந்தரம் பிறவிப் பணக்காரர். இங்கிலாந்து சென்று படித்தவர். பயமில்லாதவர். அங்கே படித்த காலத்தில் ஒரு ஆங்கிலேயப் பெண்மணியைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டு நாடு திரும்பியவர். யாரைப் பற்றியும் கவலைப்பட மாட்டார். திரைப்பட நடிக நடிகர்களை ஏக வசனத்தில் பேசுவார். ‘டிசிப்ளின்’ அவருக்கு முக்கியம்.

என்னையும் என் மாமியாரையும் கெளரவமாக நடத்தினார். மாடர்ன் தியேட்டர்ஸ் அலுவலகத்திலேயே நானும் என் மாமியாரும் தங்க வசதிகள் செய்து கொடுத்திருந்தார். மற்ற கலைஞர்கள் ஸ்டுடியோ அருகில் இருந்த அறைகளில் தங்கவைக்கப்பட்டனர். எங்களுக்கு ஏதோ பக்கிங்ஹாம் அரண்மனையே கிடைத்துவிட்டதுபோல் எங்களைப் பார்த்து வியந்துபோனார்கள்! படப்பிடிப்பு இடைவிடாமல் நடைபெற்று வந்தது.

படப்பிடிப்பு இல்லாத ஒருநாளில் என்னிடம் வந்த சக பெண் நடிகர்கள் ‘அம்மா டி.ஆர். சுந்தரம் உங்கள் மீது மரியாதை வைத்திருக்கிறார். நாங்கள் தங்கியிருக்கிற அறைகளில் இருந்து பாத்ரூம் போவதற்கு வெளியே ரொம்ப தூரம் நடக்க வேண்டியிருக்கு. சங்கடமாக இருக்கு. அறைக்கு அருகிலேயே இருந்தால் நன்றாக இருக்கும். இதை நீங்கள்தான் அவரிடம் சொல்லி ஏற்பாடு செய்து தரவேண்டும்’ என்றார்கள்.
எனக்கு அந்தத் தகவல் அதிர்ச்சி அளித்தது. ‘இத்தனை நாள் என்ன பண்ணிக் கொண்டிருந்தீர்கள்; அவரிடம் உடனே சொல்வதற்கு என்ன?’ என்று அதட்டிக் கேட்டேன்.

‘ஐயோ அம்மா! அவர் கோபம் உங்களுக்குத் தெரியாது. ஒரு முறை ராஜபார்ட் நடிகர் பி.யு. சின்னப்பா படப்பிடிப்புக்குத் தாமதமாக வந்ததால் அவர் கொடுத்த தண்டனையை நினைத்துப் பயமாக இருக்கிறது!’ என்றார்கள். ‘அப்படி என்ன தண்டனை கொடுத்தார்?’ என்று நான் கேட்கப் போய், அந்தப் பெண்கள் சொன்னதைக் கேட்டுப் பகீரென்றது. அந்தத் தண்டனை பயங்கரமானது மட்டுமல்ல அநாகரிகமானதும்கூட!”
பானுமதி அம்மையார் விவரித்த அந்தச் சம்பவம்... ?

(தாரகை ஒளிரும்)
தொடர்புக்கு:
thanjavurkavirayar@gmail.com
படங்கள் உதவி: ஞானம்

தரைக்கு வந்த தாரகைஅழகான பொண்ணுமகள்குவிந்த வாய்ப்புகள்லலிதாகுறும்புபிரபலம்பாடல்
Popular Articles

You May Like

More From This Category

More From this Author