செய்திப்பிரிவு

Published : 30 Aug 2019 11:48 am

Updated : : 30 Aug 2019 11:48 am

 

மற்றும் இவர்: சண்டை கற்றுத் தந்த நடிப்பு!

actor-turned-stunt-man-azhagu-profile
தொரட்டி படத்தில்

சினிமாவில் முரட்டு அடியாளாக அறிமுகமாகும் எல்லோருக்குமே நிலையான இடம் கிடைத்துவிடுவதில்லை. வெகுசிலரே ரசிகர்களின் மனத்திலும் சினிமாவிலும் தங்களுக்கென ஒரு இடத்தைப் பிடித்திருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் நடிகர் அழகு. அடியாளாகவும் வில்லனாகவும் திரை வாழ்க்கையைத் தொடங்கிய அழகு, இன்று குணச்சித்திரக் கதாபாத்திரங்களில் மிளிர்ந்துவருகிறார். அண்மையில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற ‘தொரட்டி’யில் குணச்சித்திரக் கதாபாத்திரத்தில் ஆத்மார்த்தமாக வாழ்ந்துகாட்டியிருந்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள கொளத்துப்பட்டிதான் இவரின் சொந்த ஊர். சிறுவயதிலேயே பெற்றோரை இழந்ததால், தேவக்கோட்டையில் இருந்த தாத்தா வீட்டில் வளர்ந்தார். பள்ளிப் படிப்பை முடித்ததும் 1969-ல் சென்னைக்கு ரயிலேறிவிட்டார். சென்னை வட பழனியில் வேலை பார்த்த அழகுக்கு, கராத்தே கற்றுக்கொள்ள விருப்பம். வேலை செய்யும் இடத்துக்கு அருகிலேயே வசித்துவந்த கோபாலன் குருவிடம் சேர்ந்து களரி, கராத்தே, சிலம்பம் உள்ளிட்டத் தற்காப்புக் கலைகளைக் கற்றுக்கொண்டார்.

சினிமாவில் அழகு வாய்ப்பு பெற்றது தற்செயல்தான். அப்போது சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் தற்காப்புக் கலை நிகழ்ச்சி நடைபெற்றிருக்கிறது. அதில் பங்கேற்று, தனது திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார். விளைவு, இரு நாட்கள் கழித்து சினிமா சண்டை இயக்குநரான மாதவனின் ஆட்கள் அழகுவின் வீட்டைத் தேடி வந்திருக்கிறார்கள். ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றதால் தனக்குச் சினிமா வாய்ப்பு தேடி வந்ததை நம்மமுடியாத அழகு, தயக்கத்துடன் தனது குருவான கோபாலனிடம் அனுமதி கேட்டிருக்கிறார். ‘எல்லோருக்கு இது கிடைப்பதில்லை; வாய்ப்பை விடாதே’ என்று வழிகாட்ட 1975-ல் வெளியான ‘துணிவே துணை’ படத்தில் நாயகன் ஜெய்சங்கருடன் நேருக்கு நேராக மோதும் சண்டைக் காட்சியில் அறிமுகமானார் அழகு.

சண்டைக் கலைஞருக்கு திருப்புமுனை

அந்தப் படத்தைத் தொடர்ந்து சிவாஜி கணேசனுக்கு ‘டூப்’பாக நடித்த தைப் பெருமையாகச் சொல்கிறார் அழகு. “அந்தக் காலகட்டத்தில் ஸ்டண்ட் யூனியனில் உறுப்பினராக இருந்தால்தான் நடிக்க முடியும். முதல் படத்தில் நடிக்கவே எனக்குச் சிறப்புச் சலுகை வழங்கினார்கள். 1978-ல்தான் முறைப்படி சங்கத்தில் சேர்ந்தேன். அதன்பிறகு ‘நாம் பிறந்த மண்’ படத்தில் சிவாஜி கணேசனுக்கு ‘டூப்’ போட அழைத்தார்கள். அவ்வளவு பெரிய நடிகருக்கு ‘டூப்’ போட்டது வாழ்க்கையில் மறக்கவே முடியாதது” என்கிறார்.

இந்தப் படத்துக்கு பிறகு ரஜினி, கமல், விஜயகாந்த், அமிதாப், பிரேம்நசீர், என்.டி.ஆர். சிரஞ்சீவி எனத் தொடர்ச்சியாக சினிமாவில் சண்டைக் கலைஞராகப் பலருடன் சண்டை போட்டிருக்கிறார் அழகு. சுமார் 13 ஆண்டுகள் சண்டைக் கலைஞராக மட்டுமே திரையில் வந்துகொண்டிருந்த அழகுக்கு, 1988-ல் வெளியான ‘செந்தூரப்பூவே’ திருப்பு முனையாக அமைந்தது. “சினிமாவில் யாரிடமாவது வாய்ப்பு கேட்க வேண்டும் என்றாலே எனக்குக் கூச்சமாக இருக்கும். ரொம்ப யோசிப்பேன். 1986-ல் ஆபாவாணன் இயக்கத்தில் ‘ஊமை விழிகள்’ படத்தில் நடித்திருந்தேன்.


சினிமாவில் இளைஞர்கள் வந்த காலம் அது. அப்போதுதான் இயக்குநர் ஆபாவாணனிடம் எனக்கேற்ற கதாபாத்திரம் ஏதாவது இருந்தால் கொடுங்கள் என்று வாய்ப்பு கேட்டேன். ஆறு மாதங்கள் கழித்து ஒரு நாள் இரவு 11 மணிக்கு ஆபாவாணனின் மேனேஜர் வீட்டுக்கு வந்தார். கையோடு ‘செந்தூரப்பூவே’ சூட்டிங்குக்கு அழைத்துச் சென்றார். பரமேஸ்வரன் என்ற கதாபாத்திரத்தில் விஜயலலிதாவோடு சேர்ந்து வில்லத் தனம் செய்து நடித்தேன்.

அந்தப் படம் எனக்கு மிகப் பெரிய பிரேக் கொடுத்தது. அதற்கு முன்புவரை அடிவாங்குற ஆள் என்று என்னைச் சொன்னவர்கள்கூட ‘செந்தூரப்பூவே’ படத்தில் நடித்தவர் என்று சொல்வதைக் கேட்ட தருணத்தை இப்போதும் மறக்க முடியாது. என் சினிமா பாதையை தலைகீழாக மாற்றியவர் ஆபாவாணன்தான்” என்று உருகுகிறார் அழகு.

‘செந்தூரப்பூவே’ படத்துக்குப் பிறகு சண்டைக் கலைஞராக நடிப்பதை நிறுத்திக்கொண்ட அழகு, நடிக்க வாய்ப்புள்ள கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து நடிக்கத் தொடங்கினார். தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஒடியா என 6 மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் அழகு, சண்டைக் கலைஞர்கள் பற்றிய பார்வையையும் பகிர்ந்துகொள்கிறார்.

நடிப்பை காட்டும் கலை

“பொதுவாக, சண்டைக் கலைஞர்கள் என்றாலே, அவர்களுக்கும் நடிப்புக்கும் சம்பந்தம் கிடையாது என்றே நினைக்கிறார்கள். ஆனால், சண்டைக் கலைக்கும் கலைஞருக்கும் நடிப்பு முக்கியம். சண்டைக் காட்சியில் அடிக்கும்போது கோபத்தை ரியாக்‌ஷனாகக் காட்ட வேண்டும். அடி வாங்கும்போது வலியை வெளிப்படுத்த வேண்டும். சண்டைக்குள்ளும் நடிப்பு இருக்கு. வசனம் எதுவும் இல்லையென்றாலும் முக பாவனையில் சண்டைக் கலைஞர்கள் நடித்துதான் ஆக வேண்டும்.

இன்று நான் நடிக்கிறேன் என்றால், அதற்கு அடிப்படைக் காரணமே சண்டைக் காட்சிகள்தான்” என்கிறார் அழகு, அண்மையில் வெளியான ‘தொரட்டி’ படத்தின் தெற்கத்தி சீமையின் முதிய கீதாரி ஒருவரைப்போல கதாபாத்திரமாக மாறிக் காட்டியிருந்தார்.

எழுபது வயதாகிவிட்ட அழகு, தற்போதும் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார். சினிமாவில் கெட்டவனாக நடித்திருந்தாலும் அவருக்கு எந்தக் கெட்ட பழக்கமும் கிடையாது. சினிமாவில் புகழ் வெளிச்சத்துக்காகக் காத்திருக்கும் நூற்றுக்கணக்கான சண்டைக் கலைஞர்களுக்கு அழகு ஓர் அபூர்வ உதாரணம்!

பிடித்த வில்லன்?

ரகுவரன். கதாநாயகனாக அவரிடம் அடிவாங்கி இருக்கிறேன். வில்லனாக அவருக்காகச் சண்டை போட்டிருக்கிறேன்.

சாதித்தது?

1975-லிருந்து சினிமாவில் இருப்பதே சாதனைதான்.

விருப்பம்?

நகைச்சுவைக் கதாபாத்திரத்திலும் நடிக்க ஆசை.

பாராட்டு?

‘தொரட்டி’ படத்தைப் பார்த்துவிட்டு இயக்குநர் இமயம் பாராட்டியது.

அடுத்த படம்

தனுஷின் ‘பட்டாசு’.

- டி. கார்த்திக்

நடிகர் அழகுசண்டைக் கலைஞர் அழகுஸ்டண்ட் க;லைஞர் அழகுமற்றும் இவர்தமிழ் சினிமா நடிகர்கள்துணை நடிகர்கள் கதை
Popular Articles

You May Like

More From This Category

More From this Author