Published : 30 Aug 2019 11:48 AM
Last Updated : 30 Aug 2019 11:48 AM

இயக்குநரின் குரல்: இது டபுள் மாஸ்! - சங்கத்தமிழன் விஜய் சந்தர்

கா. இசக்கிமுத்து

நீங்கள் பிடிவாதமான கமர்ஷியல் இயக்குநர். விஜய் சேதுபதி உங்கள் கதையை எப்படி ஓகே செய்தார்?

வித்தியாசமான கதைக்களங்கள், கதாபாத்திரங்கள் என்று அவரது வழி இருந்தாலும் ரசிக்கிற மாதிரியான மாஸ் கேரக்டர்ஸ் பண்ணிக்கிட்டுதான் இருக்கார். இந்தக் கதையைக் கேட்டவுடனே, ‘பண்ணலாம் தலைவா’ என்று பளிச்சென்று சொன்னார். சில படங்களில் கதை தனியா இருக்கும். மாஸ் காட்சிகள் தனியா இருக்கும். ஆனால், கதையுடனே கமர்ஷியல் இருக்கணும். ‘சங்கத்தமிழன்’ல அதான் ஸ்பெஷல். அதோடு சமூகத்துக்கான ஒரு கருத்தையும் சொல்லியிருக்கோம். விஜய் சேதுபதி சார் இந்தக் கதையை ‘டிக்' அடிக்க அதுதான் காரணம். குடும்பம், காமெடி, எமோஷன் எல்லாமே இருக்கிற கதை விஜய் சேதுபதி மாதிரியான சிறந்த நடிகரை ஈர்க்கிறதுல ஆச்சரியம் இல்ல.

படத்தின் டீஸரைப் பார்த்தால், விஜய் சேதுபதியைப் பெரிய மாஸ் கதாநாயகன் ஆக்கியே தீருவேன் என்பதுபோல் தெரிகிறதே?

அப்படியல்ல. அவர் ஏற்கெனவே மாஸ் கதாநாயகன்தான். இந்தக் கதையின் தேவையே ஒரு மாஸ் ஹீரோதான். எவ்வளவு தரமான கதாபாத்திரம் என்றாலும் அது விஜய் சேதுபதி கைக்குப் போய்விட்டது என்றால், அதற்கு மாஸ் தானாகவே வந்துவிடும். அதுவே மாஸ் கதை என்றால் அந்தப் படம் டபுள் மாஸ் ஆகிவிடுவது இயல்புதானே..

படத்தின் கதைதான் என்ன?

செய்தித்தாளில் சில பிரச்சினைகளைப் பார்த்தவுடனே கோபம் வரும். அந்தக் கோபத்தை வெளிப்படுத்தி, தட்டிக் கேட்கிற தைரியம் ஒருத்தனுக்கு இருக்கு. அவன்தான் ‘சங்கத்தமிழன்'. ராஷி கண்ணா, நிவேதா பெத்துராஜ் என இரண்டு நாயகிகள். சும்மா பாட்டுக்கு மட்டும் வந்துட்டுப் போறது மாதிரி இல்லாமல், ரொம்பவே முக்கியமான ரோல் பண்ணியிருக்காங்க. சூரி காமெடியும் நல்லா வந்துருக்கு. நாசர் சார், ரவி கிஷன் சார், மன் சார் எனப் படம் முழுக்க ஒரு குடும்பமாகவே இருக்கும்.


படப்பிடிப்பில் விஜய்சேதுபதியுடன் இயக்குநர்

விஜய் சேதுபதியுடன் உங்கள் நட்பு…

நல்ல உள்ளம் படைத்தவர். அவரைப் பார்த்தாலே சந்தோஷமும் நம்பிக்கையும் வரும். காலையில் அவர் வந்தவுடனே கேராவேனுக்குச் செல்வேன். கை கொடுத்து இன்றைக்கு இதுதான் சார் காட்சிகள் என்று கூறியவுடன், சூப்பர் பண்ணிடலாம் என அவ்வளவு உற்சாகமாகச் சொல்வார். அந்த உற்சாகம் நம்மை இன்னும் படுவேகமாக ஓடவைக்கும். எப்போதும் பாசிடிவ்வாக மட்டுமே பேசுவார். நெகடிவ்வா பேசவே மாட்டார். அவருடைய நட்பை என்னுடைய திரையுலக வாழ்க்கையில் மிக முக்கியமானதாகப் பார்க்கிறேன்.

உங்களுடைய முதல் படத்தின் நாயகன் சிம்பு. அவரைப் பற்றி இப்போது நிறையச் சர்ச்சைகள் பரபரக்கிறதே...

சிம்பு சார் நல்ல மனிதர். ’வாலு’ படத்தின் கதை சொல்வதற்காக அவரைச் சந்தித்தபோது எப்படிச் சந்தித்தேனோ, இப்போதும் அப்படியேதான் பார்க்கிறேன். ‘வாங்க விஜய்... உட்காருங்க... டீ சாப்பிடுங்க’ என்று மரியாதையுடன் பேசுவார். மற்றவர்களிடம் எப்படி இருக்கிறார் என்பதைப் பற்றி நான் எப்படிக் கருத்துச் சொல்ல முடியும்.

படத்தின் தயாரிப்பாளர் மறைந்தவுடன் நிறையப் பேர் இந்தப் படம் கைவிடப்பட்டதாகச் சொன்னார்களே?

அவருடைய ஆசை கடைசிவரை சினிமா பண்ணிக்கொண்டிருக்க வேண்டும் என்பதுதான். அவர் மறைந்த ஐந்தாம் நாள் அடுத்த கட்டப் படப்பிடிப்புக்குப் போய்விட்டோம். அந்த அளவுக்குத் தயாரிப்பு நிறுவனம் நம்பிக்கையாக இருந்தது. வெங்கட்ராம ரெட்டி அவ்வளவு நல்ல மனிதர். சீன், பாட்டு என எதைக் காட்டினாலும் 'சூப்பர் விஜய்' என்று அவ்வளவு உற்சாகமும் நம்பிக்கையும் கொடுப்பார். அவரது மறைவை இன்னும் என்னால் ஜீரணிக்க முடியவில்லை.

விஜய் நடிப்பில் வெளிவரவிருக்கும் ‘பிகில்' படத்துக்குப் போட்டியாகத் தீபாவளிக்கு வருகிறீர்களே?

யாருக்கும் 'சங்கத்தமிழன்' போட்டி கிடையாது. சரியான வெளியீட்டுத் தேதிக்காகக் காத்திருந்தோம். ஏதேனும் விழாக் காலத்தில் குடும்பத்துடன் கொண்டாட்டமாகப் பார்க்க வேண்டிய படம் இது. அதனால்தான் அறிவித்துள்ளோம்.

‘சங்கத்தமிழன்' படப்பிடிப்பில் விஜய் சேதுபதி ஆமிர் கான் சந்திப்பு நடந்ததே..

ஆமா. விஜய் சேதுபதி ‘இன்றைக்கு ஆமிர்கான் வர்றாங்க தலைவா. நீங்களும் வாங்க' என்று கூப்பிட்டார். மெலோடி திரையரங்கில் ஆமிர்கான் படத்தைப் பார்த்த ஞாபகங்கள் எல்லாம் வந்தன. 'தங்கல்' படமெல்லாம் பார்த்துக் கண் கலங்கினேன். ரொம்ப எளிமையான மனிதர். அவர் வந்து விஜய் சேதுபதியைச் சந்தித்தது சந்தோஷமாக இருந்தது. அப்படிப்பட்ட ஹீரோவுடன் நான் படம் பண்ணியிருக்கேன் என்பது கூடுதல் மகிழ்ச்சி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x