ஹாலிவுட் ஜன்னல்: திரைக்கதையாளர் ஸ்டோலன்!

ஹாலிவுட் ஜன்னல்: திரைக்கதையாளர் ஸ்டோலன்!
Updated on
1 min read

சுமன்

ஹாலிவுட் படவுலகின் ஆக்‌ஷன் சூப்பர் ஸ்டார்கள் மத்தியில், தனது இருப்பைத் தக்கவைத்துக்கொள்ள ‘ராம்போ: லாஸ்ட் பிளட்’ திரைப்படம் வாயிலாக மீண்டும் களமிறங்குகிறார் 73 வயதாகும் சில்வஸ்டர் ஸ்டோலன். ஸ்டோலனின் ‘ராம்போ’ திரைப்பட வரிசையின் முதல் படமான ‘ஃபர்ஸ்ட் பிளட்’ 1982-ல் வெளியானது. வியட்நாம் போரில் அனுபவம் பெற்ற அமெரிக்க முன்னாள் ராணுவ வீரனான ஜான் ராம்போவின் அதகளமாக, 1972-ல் அதே பெயரில் வெளியான பிரபல நாவலைத் தழுவி ‘ஃபர்ஸ்ட் பிளட்’ வெளியானது. படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மூன்றாண்டுகள் இடைவெளியில் அடுத்தடுத்த மூன்று ராம்போ திரைப்படங்கள் வெளியாகின.

இந்த வரிசையில் நான்காம் திரைப்படமான ‘ராம்போ’ சில்வஸ்டர் ஸ்டோலனின் இயக்கத்தில் 2008-ல் வெளியானது. தொடர்ந்து அடுத்த ஆண்டே அறிவிக்கப்பட்டு, பலமுறை கிடப்பில் போடப்பட்ட ஐந்தாம் ராம்போ பத்தாண்டுகளுக்குப் பின்னர் தற்போது வெளியாகிறது. முந்தைய நான்கு ராம்போ படங்களுக்கும் திரைக்கதை அமைத்த சில்வஸ்டர் ஸ்டோலன், ஐந்தாவதிலும் இணைந்திருக்கிறார். நடிப்புடன் தனது ஆக்‌ஷன் படங்களுக்கு திரைக்கதை அமைப்பதில் கெட்டிகார நடிகர் இவர்.

தாய்லாந்து, வியட்நாம், மியான்மர், ஆப்கானிஸ்தான் எனத் தனது சாகசங்களில் தனித்துவத் தடம் பதித்த ராம்போ, இம்முறை மெக்சிகோ செல்கிறார். கடத்தலுக்கு ஆளான நண்பருடைய மகளை மீட்பதற்காக எல்லை தாண்டிச் செல்லும் ராம்போ, மெக்சிகோவின் மிகப் பெரும் கடத்தல் தலைவனை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. 1999-ல் வெளியான ‘ஹண்டர்’ என்ற நாவலைத் தழுவி, புதிய ராம்போவின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. முந்தைய ராம்போ திரைப்படங்கள் அனைத்தும் வசூலில் சாதனை படைத்தவை என்பதால், சில்வஸ்டரின் தற்போதைய வயதைப் பொருட்படுத்தாது ஆக்‌ஷன் காட்சிகளில் மெனக்கெட்டிருக்கிறார்கள்.

இது ராம்போ வரிசையின் கடைசித் திரைப்படம் என வெளியான செய்திகளை மறுத்திருக்கும் சில்வஸ்டர், ‘லாஸ்ட் பிளட்’ வெற்றியைத் தொடர்ந்து அடுத்த ராம்போவை அறிவிபபோம் என கான் திரைப்பட விழாவில் உறுதியளித்திருக்கிறார். பாஸ் வேகா, அட்ரியானா பஸாரா, செர்ஜியோ பெரிஸ் உள்ளிடோர் உடன் நடிக்க, அட்ரியன் க்ரன்பெர்க் இயக்கியிருக்கும் ‘ராம்போ: லாஸ்ட் பிளட்’ திரைப்படம் செப்டம்பர் 20 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

முன்னோட்டத்தைக் காண :

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in