Published : 23 Aug 2019 10:37 AM
Last Updated : 23 Aug 2019 10:37 AM

திரைக்குப் பின்னால்: டிஜிட்டல் என்பது மாபெரும் சுதந்திரம்!

ஜெயந்தன்

ஜெயம் ரவி நடிப்பில், பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் ‘கோமாளி’. அதில் இடம்பெற்றிருக்கும் வெள்ளக் காட்சிகள் உட்படப் படத்தின் ஒட்டுமொத்த ஒளிப்பதிவுக்காகவும் பாராட்டப்படுபவர் ரிச்சர்டு எம்.நாதன். ‘அங்காடித் தெரு’ படத்தின் மூலம் அறிமுகமாகி ‘கோமாளி’ வரை சுமார் 15 வெற்றிப் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருக்கும் அவருடன் உரையாடியதிலிருந்து ஒரு பகுதி…

வரவேற்பு பெற்றுவிட்ட இயக்குநரின் படத்தில் முதல் வாய்ப்பு என்பது எல்லா ஒளிப்பதிவாளர்களுக்கும் அமைந்துவிடுவதில்லை. ‘அங்காடித் தெரு’ எந்தப் பின்னணியில் உங்களது அறிமுகப்படமாக அமைந்தது?

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நெடுமரம் என்ற கிராமம்தான் எனது சொந்த ஊர். மணிப்பூரில் பிறந்து சென்னையில் வளர்ந்தேன். சினிமாவுக்கும் எனது குடும்பத்துக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. லயோலா கல்லூரில் விஸ்காம் படித்து முடித்தபின் ஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்திடம் உதவியாளராகச் சேர்ந்து சில படங்களில் பணிபுரிந்தேன். ஷங்கரின் ‘சிவாஜி’ படத்துக்கு அவர் ஒளிப்பதிவு செய்தபோது நான் அவரது உதவியாளன். அந்தப் படம் மிகப் பெரிய அனுபவமாக அமைந்தது. இதுவரை கிடைத்த அனுபவங்கள் போதும் என முடிவெடுத்து, தனியாகப் பணிபுரியும் முயற்சியைத் தொடங்கியபோது இயக்குநர் வசந்தபாலனைச் சந்தித்தேன்.

அவர், ‘அங்காடித் தெரு’ படத்தின் பெரும்பகுதியை, அன்றாடம் லட்சக்கணக்கான மக்கள் வந்துபோகும் சென்னை, தி.நகரின் ரங்கநாதன் தெருவில் படமாக்கலாம் என்பது எனது திட்டம். உங்களால் முடிந்தால் ரங்கநாதன் தெருவை வீடியோவில் பதிவு செய்து காட்டுங்கள்’ என்றார். அதைச் சவாலாக எடுத்துக்கொண்டு, ஊரிலிருந்து என்னைப் பார்க்க வந்திருந்த என் நண்பனை அழைத்துக்கொண்டு ரங்கநாதன் தெருவுக்குச் சென்றேன். அங்கிருந்த கடைகள், ரயில் நிலையம் என்று பல இடங்களில் ஒரு கதாபாத்திரம்போல் அவனை உட்கார வைத்து, உலவ விட்டு 24 மணிநேரம் ஷூட் செய்தேன்.

பின்னர் எடிட் செய்து வசந்தபாலனிடம் கொடுத்தேன். அதைப் பார்த்தவர், ‘என்னங்க.. திரைக்கதையில் நான் எழுதி வைத்திருக்கும் பல ஷாட்களை எடுத்திருக்கிறீர்கள். நீங்கள் கொடுத்திருக்கும் வீடியோவில் எனது கதையின் பத்து சதவீதம் இருக்கிறது’ என்று ஆச்சரியப்பட்டார். நான் கொடுத்த வீடியோவிலிருந்து ஸ்கிரீன் ஷாட்கள் எடுத்துவந்து படப்பிடிப்பின்போது இதேபோல் ஷாட் வேண்டும் என்று கேட்டு வாங்கினார். இப்படித்தான் ‘அங்காடித் தெரு’ படத்தில் அறிமுகம் நடந்தது.

நீங்கள் ஒளிப்பதிவு செய்த ‘பாணா காத்தாடி’யில் அறிமுகமான சமந்தாவும் அதர்வாவும் இன்று பிரபலமான நட்சத்திரங்கள். அவர்களுடன் நட்பு தொடர்கிறதா?

நட்சத்திரங்களின் உலகம் வேறு. அதற்குள் பிரவேசிக்க நான் எப்போது விரும்புவதில்லை. படப்பிடிப்புத் தளத்தில் கதாபாத்திரங்களாக அவர்களை ஒளியில் எப்படிக் காட்டுவது என்பதில் மட்டுமே கவனம் செலுத்துவேன். வேலை முடிந்ததும் நேரே வீட்டுக்கு வந்துவிடும் ஆள் நான். படப்பிடிப்பு இல்லாத இடங்களில் தெரிந்த நட்சத்திரங்களைப் பார்க்க நேர்ந்தால் ஒரு ‘ஹலோ’ சொல்லிக் கொள்வதோடு சரி.

உங்களது ஒளிப்பதிவில் விஷால் நான்கு படங்களில் நடித்திருக்கிறார். அவரை வைத்துப் படம் இயக்கும் எண்ணம் உண்டா?

நமக்குத் தெரியாத விஷயத்தைச் செய்யக் கூடாது என்பதில் ஆழமான நம்பிக்கை வைத்திருக்கிறேன். அதிக படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துவிட்டதால் மட்டும் ஒரு படத்தை இயக்க முடியும் என்று நான் நினைக்கவில்லை. திரை இயக்கம் என்பது மிகக் கடினமான கிரியேட்டிவ் புராசெஸ்.

‘கோ’ படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய உங்கள் குருவே அழைத்தாரா?

கண்டிப்பான ஆசிரியருக்கும் மாணவருக்குமான உறவுதான் எனக்கும் கே.வி.ஆனந்துக்கும் இடையில் இருப்பது. அவரைப் பார்த்தாலே நடுங்குவேன். அப்படிப்பட்டவர் ‘அங்காடித் தெரு’ படத்தில் நான் எப்படி ஒளிப்பதிவு செய்திருக்கிறேன் என்பதை விசாரித்துத் தெரிந்துகொண்டு, என்னை அவரது அலுவலகத்துக்கு அழைத்தவர், ‘டேய் நான் ஒரு படம் பண்றேன்.. நீ கேமரா பண்றியா?’ என்றார். அவரைத் திருப்திப்படுத்த முடியாது என்று தோன்றியதால் பயந்து மறுத்தேன்.

கோபமான அவர், ‘உனக்குப் படம் தருவது நீ திறமைசாலி என்பதற்காக இல்லை; உனது சின்சியாரிட்டிக்காகத்தான்’ என்றார். ‘அங்காடித் தெரு’, ‘பாணா காத்தாடி’ ஆகிய இரண்டு படங்களுமே ரிலீஸ் ஆகியிருக்காத நேரத்தில் கூப்பிட்டு அவர் வாய்ப்புக் கொடுத்தது அவரது பெருந்தன்மைக்கு எடுத்துக்காட்டு. இந்தியாவின் தலைசிறந்த ஒளிப்பதிவாளர்களில் ஒருவர். அவருடைய மாணவன் என்பதில் எனக்கு எப்போதுமே பெருமை.

படச்சுருள் மறைந்து, டிஜிட்டல் நுழைந்த காலகட்டத்தில் ஒளிப்பதிவாளர் ஆனவர் நீங்கள்? பிலிம், டிஜிட்டல் இரண்டிலும் உங்கள் அனுபவம் என்ன?

‘அங்காடித் தெரு’, ‘பாணா காத்தாடி’, ‘கோ’ ஆகிய மூன்று படங்களையும் படச்சுருளில்தான் ஒளிப்பதிவு செய்தேன். பிலிம் என்பது பொற்காலம். படச்சுருள் காலத்தில் ஒளிப்பதிவாளர் ஒருவரிடம் உதவியாளராகச் சேர்ந்துதான் நீங்கள் கேமரா கற்றுக்கொள்ள முடியும். காரணம் அது அன்று ‘எக்ஸ்பென்ஸிவ் மீடியம்’. பிலிம் கேமராவைத் தொட்டுப் பார்க்கவே விட மாட்டார்கள். ஒரு ஒளிப்பதிவு உதவியாளனாகப் படச்சுருளை கேமராவில் ‘லோட்’ செய்யக் கற்றுக்கொள்ளவே எனக்கு இரண்டு படங்கள் பிடித்தன.

ஆனால், இன்று டிஜிட்டல் மீடியத்தைக் கையாள்வது மிக மிக எளிதாகிவிட்டது. டிஜிட்டலில் ஒரு குருவின் உதவி இல்லாமலேயே காட்சிகளைப் படம்பிடித்துவிட முடியும். படச்சுருள் எக்ஸ்போஸ் செய்யப்பட்டு, ‘பொம்மை’ எப்படி வந்திருக்கிறது என்பதைக் காணும் வரை பதைபதைப்பும் இருக்கும். டிஜிட்டல், எதற்காகவும் காத்திருக்க வேண்டிய அவசியமில்லாத மாபெரும் சுதந்திரத்தைத் தந்து விட்டது. என்றாலும் கற்பனைத் திறன் இருந்தால் மட்டுமே இரண்டிலுமே காலூன்றி நிற்க முடியும்.

அடுத்த படம்?

ராதாமோகன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய ஒப்புக்கொண்டிருக்கிறேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x