டிஜிட்டல் மேடை: உள்ளங்கவர் கொள்ளையர்!

டிஜிட்டல் மேடை: உள்ளங்கவர் கொள்ளையர்!
Updated on
2 min read

எஸ்.எஸ்.லெனின்

பரபரவென நகரும் சுவாரசியமான க்ரைம் திரில்லர் வகையில் ரசிகர்களை மகிழ்விக்க வந்திருக்கிறது ‘லா கசா டி பேப்பல்’ என்ற ஸ்பானிஷ் வலைத்தொடர். நெட்ஃபிளிக்ஸில் வெளியான ஆங்கிலம் அல்லாத வலைத்தொடர்களில் அதிகப் பார்வையாளர்களை வசீகரித்திருக்கும் இத்தொடர், ‘மணி ஹெய்ஸ்ட்’ என்ற தலைப்பில் ஆங்கிலத்திலும் மொழியாக்கம் பெற்றுள்ளது. 2017-ல் தொடங்கி, வருடத்துக்கு ஒரு பாகமாக என்று வெளியாகிவரும் இந்த வலைத்தொடரின் மூன்றாம் பாகம் ஜூலை மத்தியில் வெளியானது.

பேராசிரியர் என்று தன்னை அறிமுகம் செய்துகொள்ளும் நபர், முன்பின் அறிமுகமில்லாத நபர்களை ஒரு குற்றச்செயலுக்காக ஒருங்கிணைக்கிறார். கொள்ளைச் சம்பவங்களில் கைதேர்ந்த இவர்கள் அனைவரும் சேர்ந்து, ஸ்பெயின் வரலாற்றில் அதுவரையில்லாத மிகப் பெரும் கொள்ளைச் சம்பவத்தை அரங்கேற்றத் திட்டமிடுகிறார்கள். குழுவின் சூத்திரதாரியான ‘பேராசிரியர்’ வெற்றிகரமான கொள்ளைக்காக, பல மாதங்களுக்கு நீடிக்கும் பயிற்சிப் பட்டறையை நடத்துகிறார். முதல் பாகத்தின் முதல் அத்தியாயமே அதிரடியான கொள்ளைச் சம்பவத்துடன் தொடங்குகிறது.

வழக்கமான வங்கிக் கொள்ளைக்கு அப்பால், யூரோ கரன்சிகளை அச்சடிக்கும் மையத்தில் நாள் கணக்கில் பதுங்கியிருந்து, மணிக்குப் பல லட்சம் டாலர்கள் என பில்லியன் கணக்கில் சுடச்சுட அச்சடித்து அவற்றைச் சூறையாடுகிறார்கள். அச்சகப் பணியாளர்கள், சுற்றுலா வந்த பள்ளி மாணவர்கள் என 67 பணயக் கைதிகள் கொள்ளையர் வசமிருப்பதால் வெளியிலிருந்து போலீஸார் நகம் கடிக்கின்றனர். கொள்ளைச் சம்பவத்தின் மூளையான ’பேராசிரியர்’, சம்பவ இடத்துக்கு அப்பாலிருந்து கொள்ளையர்களை வழிநடத்துவதுடன் போலீஸாரின் கவனத்தைத் திருப்பும் கண்ணாமூச்சி விளையாட்டையும் தொடங்கி வைக்கிறார்.

இந்தக் கொள்ளையர்- போலீஸார் ஆடுபுலி ஆட்டம், பணயக் கைதிகள்-கொள்ளையர் இடையிலான சச்சரவு, கொள்ளையர் மத்தியிலான ஆதிக்கப் போட்டி ஆகியவற்றுடன் ஒவ்வொரு அத்தியாயமும் உச்சகட்ட விறுவிறுப்புடன் செல்கின்றன. கொள்ளையருக்கு நெருக்கடி நேரும்போதெல்லாம் பிளாஷ்பேக்கில் மேற்படி சூழலை எதிர்கொள்வதற்கான பயிற்சிப் பட்டறை வகுப்பு காட்சிகளின் சமயோசித வியூகங்கள் வந்து செல்கின்றன.

மேலடுக்கில் குற்றச்செயல் குறித்த கதையாகத் தெரிந்தாலும், தேர்ந்த ரசிகர்களுக்கான பல குறியீடுகளைத் தொடர் முழுக்க அள்ளித் தெளித்திருக்கிறார்கள். குறிப்பாகக் கொள்ளையர்கள் அணிந்திருக்கும் ஸ்பானிஷ் சர்ரியலிச ஓவியர் சல்வடோர் டாலி ‘முகமூடி’ அதிகம் ‘பேசுகிறது’. சமூக அமைப்பின் சரி, தவறுகளைத் தனது படைப்பின் வழியே விமர்சித்த டாலியின் கருத்தியலுடன் கதையின் சம்பவங்கள், கதாபாத்திரங்கள் பலவும் ஊடாடிச் செல்கின்றன. அடுத்ததாக, கொள்ளையரின் கதாபாத்திரச் சித்தரிப்புகள் கவனம் பெறுகின்றன.

தங்கள் அடையாளத்தை மறைப்பதற்காக பெர்லின், மாஸ்கோ, நைரோபி, டோக்யோ எனப் பிரபல நகரங்களின் பெயர்களில் வலம் வரும் இவர்களின் முன்கதையும் அவ்வப்போது சொல்லப்படுகிறது. குற்றச்செயலில் இறங்கியபோதும் பணயக் கைதிகளின் உயிரைப் பாதுகாக்கவும், தங்களது கண்ணியத்தைக் காப்பாற்றவும் என அவர்கள் பலகட்ட விதிகளை வகுத்து அவற்றைக் கடைப்பிடிக்கும் காட்சிகள் உணர்வுபூர்மாகக் கடக்கின்றன.
கடத்தல்காரர்களுக்கும் பணயக்கைதிகளுக்கும் இடையே உளவியல் ரீதியிலான நெருக்கத்தால் நேரும் ‘ஸ்டாக்ஹோம் சிண்ட்ரோம்’ பல கோணங்களில் வருகிறது. பேராசிரியர் கதாபாத்திரத்தின் நுணுக்கமான சித்தரிப்பு தனித்து நிற்கிறது.

அறிவியல் மற்றும் உளவியல் பூர்வமாகப் பிரச்சினைகளை நேர்த்தியாக அணுகவும் திட்டமிடவும் செய்யும் பேராசிரியரின் காய் நகர்த்தல்களும் அத்தனை களேபரங்களுக்கு மத்தியில் காவல்துறை அதிகாரியுடன் அவருக்கு அரும்பும் காதலும் தனியான தளங்களில் பயணிக்கின்றன. விசித்திரமான சிரிப்பொலியுடன் வரும் டென்வர், கர்ப்பிணி பணயக் கைதியுடன் அவனுக்கு வரும் மையல், நோய் முற்றி சாவின் விளிம்பிலிருந்தபடி கொள்ளையர் கும்பலை வழிநடத்தும் பெர்லின், தொடர் முழுக்கக் கதையை விவரிக்கும் பின்னணிக் குரலுடன், ஆண்களின் சாகசங்களை விஞ்சும் டோக்யோவின் அதகளங்கள் என கொள்ளையர் கதாபாத்திரங்களின் விவரிப்பு முழுமையான பொழுதுபோக்கு அனுபவத்தைக் கொடுக்கின்றன.

திரில்லர் கதைக்குத் தூணாகத் தோள் கொடுக்கிறது பின்னணி இசை. இடையிடையே இடம்பெறும் பாடல்களும் ரசிக்க வைக்கின்றன. குறிப்பாகப் பல காட்சிகளில் இடம்பெறும் ‘பெல்லா சாவ்’ பாடல் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது. இரண்டாம் உலகப் போரின்போது ஆட்சியாளர்களுக்கு எதிராகக் கிளர்ந்த இத்தாலி மக்களால் அதிகம் இசைக்கப்பட்ட இந்தப் பழங்குடியினப் பாடல், இன்றைக்கும் பாசிச எதிர்ப்புக்காக உலகமெங்கும் பல போராட்டக் களங்களில் இசைக்கப்படுகிறது. அதுபோலவே அத்தியாயம் தோறும் அறிமுகப் பாடலாக வரும் ‘மை லைஃப் இஸ் கோயிங் ஆன்’ குரலும் இசையும் மனதை மயக்குகிறது.

முன்னோட்டம் காண இணையச்சுட்டி:

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in