

மகராசன் மோகன்
‘‘கோடிகளில் முதலீடு செய்து எடுக்கும் ஒரு சினிமாவில் அதிகச் செலவு பிடிக்கிற துறை, ஆர்ட் டிபார்ட்மெண்ட் என்று சொல்லப்படுகிற கலை இயக்கம்தான். அதனாலேயே நாங்க ரொம்பவும் கவனமாக இருக்கணும். கலை இயக்குநர் ஒரு படத்துக்காகத் தேவையில்லாமல் செலவு செய்வது கிட்டத்தட்டப் பொருளாதாரக் குற்றம்தான்” என்று பேசத் தொடங்கிய கதிர், தமிழ் சினிமாவில் ‘ மோஸ்ட் வாண்டெட்’ கலை இயக்குநர். ‘சாமி’ திரைப்படம் வழியே அறிமுகமான இவருக்கு அஜித் நடிப்பில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் ‘நேர்கொண்ட பார்வை’ 58-வது படம். அவருடன் உரையாடியதிலிருந்து ஒரு பகுதி...
‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் கலை இயக்கத்துக்கு என்ன மாதிரியான வேலைகள் இருந்தன?
அந்தப் படத்தின் இயக்குநர் எச்.வினோத்தைச் சந்தித்தபோது, நேர்கொண்ட பார்வை’, ‘பிங்க்’ இந்திப் படத்தோட மறு ஆக்கம் என்கிறதால முதல்ல ஒரிஜினல் பிலிம்மைப் பார்த்துடுங்க என்றார். படத்தை இரண்டு முறை பார்த்தேன். வினோத் எழுதிய திரைக்கதையில் வரும் பெண்கள் சென்னைப் புறநகர்ப் பகுதியில் வசிப்பதுபோல் திரைக்கதை அமைத்திருந்தார். அஜித்தைப் பார்க்க அதிகக் கூட்டம் வரும் என்பதால், மூன்று பெண்கள் தங்கியிருக்கும் வீடு, அதன் எதிரிலேயே அஜித் தங்கியிருக்கும் வீடு, செங்கல்பட்டு நீதிமன்றம் போன்ற அமைப்பில் கோர்ட் ஆகிய செட்டுகளை ஹைதராபாத் ராமோஜி பிலிம் சிட்டியில் அமைத்துப் படமாக்கினோம்.
அஜித்துடன் உங்களுக்கு நட்பு உண்டா?
‘காதல் மன்னன்’ படத்தில் உதவிக் கலை இயக்குநராகப் பணிபுரிந்திருக்கிறேன். அந்தக் காலகட்டத்தை மறந்திருப்பார் என்று நினைத்திருந்தேன். அனால் படப்பிடிப்பின்போது அவராகவே அழைத்து, நீண்ட நேரம் பழைய விஷயங்களையெல்லாம் பேசிக்கொண்டிருந்தார். முன்பு எப்படிப் பார்த்தேனோ, அதே உணர்வோடு இருந்தார்.
பெரிய கதாநாயகன் படமென்றால் கலை இயக்கத்தில் அவர்கள் தலையிடுவதுண்டா?
விஜய், அஜித், சூர்யா நடித்த படங்களில் பணிபுரிந்து வருகிறேன். கலை இயக்கத்தில் பெரும்பாலும் ஹீரோக்கள் தலையிடுவது இல்லை. ஒரு இடத்தைப் பார்த்ததும் ‘அடடே. இது நல்லா இருக்கே!’ எனப் பாராட்டத்தான் செய்வாங்க. அதுவே இயக்குநர், ஒளிப்பதிவாளர் என்றால், அவர்கள் எதிர்பார்த்தது உருவாகவில்லை என்றால் முரண்பாடு வரும். வினோத் மாதிரியான இயக்குநரோடு பணிபுரிவது தெளிவான, குழப்பமில்லாத திட்டமிடலோடு இருக்கும். அவரது தேவை என்ன என்பதை முன்கூட்டியே சொல்லிவிடுவார். அது கலை இயக்கம் சார்ந்த குழுவுக்கு உபயோகமாக இருக்கும்.
ஒரு வெற்றிகரமான கலை இயக்குநர் எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும்?
என்னோட அனுபவத்தில் ஒரு கலை இயக்குநருக்கு வாசிப்பும் பயணமும் ரொம்பவும் முக்கியம். என்னோட பங்களிப்பை ஒவ்வொருமுறையும் புத்துயிர்ப்புடன் செய்ய வேண்டும் என்று நினைப்பேன். அதற்கு இந்த இரண்டு விஷயங்களும் உதவுகின்றன. கலை சார்ந்து இயங்கும்போது கட்டிடக் கலை தொடர்பான தேடல், ஆய்வுகள் எனப் பயணிக்க வேண்டிவரும். அப்படிச் செல்லும்போது, வரலாற்று விஷயங்கள், அது தொடர்பான ஆதாரங்கள் பற்றியெல்லாம் சேகரிக்க முடிகிறது. அதன் வழியே இலக்கியம், இதிகாசம் பற்றிய புரிதல் கிடைக்கிறது. அது கலை இயக்கத்தை இன்னும் அர்த்தமுள்ளதாகவும் நம்பகமாகவும் செய்ய உதவுகிறது. அதேபோல் நாம் கற்றுக்கொண்டது நம்முடன் தங்கி, தேங்கிவிடாமல் இருக்க மற்றவர்களுக்குப் பகிர்வதும் மகிழ்ச்சி அளிக்கிறது.
கலை இயக்கத்துக்குள் எப்படி வந்தீர்கள்?
சென்னை ஓவியக் கல்லூரியில் படிக்கும்போது, ‘உன்னோட ஆர்வதுக்கு சினிமா சரியாக இருக்கும்!’ என்று ஓவியர் சந்துரு சொன்னார். அதனால் சினிமாவில் அப்போது எனக்குப் பிடித்த கலைஞராக இருந்த இயக்குநர் தோட்டா தரணியைத் தேடி ஓடினேன். ‘தளபதி’ படத்தில் உதவி கலை இயக்குநராக வேலையைத் தொடங்கினேன். பின்னர் இயக்குநர்களால் நான் கவனிக்கப்பட்டபின், கலை இயக்குநராக ‘சாமி’, ‘திருமலை’, ‘போக்கிரி’, ‘சிங்கம்’, ‘பயணம்’, ‘காற்றின் மொழி’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’, ‘நேர்கொண்ட பார்வை’ எனத் தொடர்ந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். இப்போது மணிரத்னம் தயாரிப்பில் ஒரு படம், விஜய்மில்டன் படம் என ஓடிக்கொண்டே இருக்கிறேன். இன்றைக்கும் சினிமா படப்பிடிப்பு என்றாலே ஆர்வம் தீயாகப் பற்றிக்கொள்ளும். சினிமா மீது கொண்ட தனிப் பிரியத்தால் நடப்பதுதான் இதெல்லாம்.