ஹாலிவுட் ஜன்னல்: கோபத்துக்குக் கொம்பு முளைத்தால்...

ஹாலிவுட் ஜன்னல்: கோபத்துக்குக் கொம்பு முளைத்தால்...
Updated on
1 min read

சுமன்

ஏஞ்சலினா ஜூலி பிரதான வேடத்தில் நடிக்க, அனிமேசன் படங்களுக்கு பெரும்புகழ் பெற்ற டிஸ்னியின் லைவ் ஆக்‌ஷன் படமாக வெளிவர இருக்கிறது ‘மெலபிசன்ட்: மிஸ்ட்ரஸ் ஆஃப் ஈவில்’ (Maleficent: Mistress of Evil) திரைப்படம். 1959-ல் அனிமேஷனில் வெளியான தனது ‘ஸ்லீப்பிங் பியூட்டி’ திரைப்படத்தின் கதாபாத்திரங்களுடன், குழந்தைகளுக்கான இன்ன பிற கற்பனைக் கதைகளின் அம்சங்களைப் புகுத்தி, டிஸ்னி 2014-ல் வெளியிட்ட திரைப்படம் ‘மெலபிசன்ட்’.

மூர்ஸ் என்ற மந்திர வனமும் விசித்திர ஜந்துக்களும் நிறைந்த தேசத்தின் செல்லமாக ‘மெலபிசன்ட்’ என்ற சிறுமி வளர்கிறாள். தலையில் முளைத்த கொம்புகளும், பரந்த இறக்கைகளுமாக வளையவரும் அவள், மனிதர்கள் வசிக்கும் பக்கத்து தேசத்தின் விவசாய சிறுவன் ஸ்டீஃபன் மீது காதல் வயப்படுகிறாள். இடையே அந்த நாட்டின் மன்னனுக்கும் மெலபிசன்டுக்கும் மோதல் முளைக்கிறது.

மெலபிசன்டின் இறக்கையைக் கவர்ந்து செல்லும் ஸ்டீஃபன், அவளைக் கொன்றதாக மன்னனிடம் பொய் சொல்லி பரிசாக நாட்டை பெறுவதுடன் இளவரசியையும் மணக்கிறான். அவர்களுக்கு மகளாக அரோரா பிறக்க, அவள், மெலபிசன்டின் சாபத்துக்கு ஆளாகிறாள். எதிர்பாராத விதமாகக் கடைசியில் அரோரா மீது பாசத்தைப் பொழியும் தாயாகவும் மாறுகிறாள். மெலபிசன்டாக ஏஞ்சலினா ஜூலி நடித்த இந்தத் திரைப்படம், அவரது திரைப் பயணத்தில் அதிகம் வசூலித்த சாதனையும் படைத்தது.

தற்போது முதல் படத்தின் பிரமாண்டத்தை விஞ்சும் வகையில் ‘மெலபிசன்ட்: மிஸ்ட்ரஸ் ஆஃப் ஈவில்’ திரைப்படம் உருவாகியிருக்கிறது. சில ஆண்டு கழித்துத் தொடங்கும் கதையில் இளவரசி அரோராவை இளவரசன் ஃபிலிப் மணக்க விரும்புகிறான். இதற்குத் தொடக்கத்தில் மறுப்புத் தெரிவிக்கும் மெலபிசன்ட், ஃபிலிப்பின் தயாரும் ராணியுமான இங்ரித்தின் உள்நோக்கம் அறிந்ததும் புதிதாய் முளைக்கும் மாய எதிரிகளை வழக்கம்போல துவம்சம் செய்யக் கிளம்புகிறார்.

ஏஞ்சலினா ஜூலியுடன், மேரி ஃபானிங், சாம் ரிலி உள்ளிட்டோர் நடித்திருக்கும் திரைப்படத்தினை ஜோகிம் ரானிங் இயக்கி இருக்கும் இப்படம் அக்டோபர் 18-ல் திரையரங்குகளை முற்றுகையிட வருகிறது.

முன்னோட்டத்தைக் காண:

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in