

கா.இசக்கிமுத்து
“பத்து ஆண்டுகளுக்கு முன் ராஜுமுருகன், நான், வினோத் எல்லாம் ஒன்றாக சபரிமலைக் கோயிலுக்குப் போவோம். அப்போது அவர்கள் இயக்குநர்கள் ஆவார்கள், அவர்களுடைய படத்தில் நடிப்பேன் என்றெல்லாம் நான் யோசித்ததே இல்லை. காலம் என்ற சக்கரம் எப்படியோ எங்களை மீண்டும் சினிமாவில் இணைத்துள்ளது” என்று வார்த்தைகளிலேயே எடிட் செய்து பேசுகிறார் மைபா நாராயணன். அரசியல், புலனாய்வுப் பத்திரிகையாளர், இப்போது மேடைப் பேச்சாளர், நடிகர் எனப் பன்முகத் திறமைக் கொண்டவர். ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் சின்ன கதாபாத்திரம் என்றாலும், சட்டென்று நினைவில் கொள்ளக்கூடிய வகையில் கச்சிதமாக நடித்திருந்தார். அவரிடம் உரையாடியதிலிருந்து…
அஜித்தைப் படப்பிடிப்பில் சந்தித்தபோது எப்படி உணர்ந்தீர்கள்?
எந்தவொரு பிம்பத்திலும் நான் சிக்குவதில்லை. ஏனென்றால் ஜெயலலிதா, கலைஞர், வைகோ, விஜயகாந்த் எனப் பெரிய ஆளுமைகள் அனைவரையும் பார்த்துட்டேன். அனைவர் மீதும் பெரிய பற்று, மரியாதை உண்டு. ‘எத்தனை பெரிய பிம்பத்தைக் கண்டும் அசராதே’ என்று எனக்குள் சொல்லிக் கொள்வேன். அஜித்தைப் பற்றி நிறையக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், இந்தப் படத்தின் படப்பிடிப்பில் அவரைப் பார்த்தபோது வியந்துவிட்டேன். சக மனிதர்கள் மீதான மதிப்பு, ஈகோ கிடையாது எனச் சொல்லிக் கொண்டே போகலாம். அஜித்திடம் நிலையாமையைச் சரியாக புரிந்து வைத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்றேன். அவரோடு நிறையப் பேசும் வாய்ப்பு கிடையாது. ஆன்மிகம், அரசியல் எனப் பல விஷயங்களை அவரோடு பேசினேன்.
படத்தில் அஜித்தைத் திட்டி வசனம் பேசியுள்ளீர்களே?
அஜித்தின் கதாபாத்திரத்தைப் பார்த்துப் பயப்படாமல் பேசிவிட்டேன். ஆனால், திரையரங்கில் பயங்கரமாக அதற்குக் கத்தினார்கள். குடும்பத்துடன் அந்தப் படத்துக்குப் போய்விட்டு, இடைவேளையில் வெளியே வரவே இல்லை. ஏனென்றால் அஜித்தைக் கடவுள் மாதிரி அவரது ரசிகர்கள் பார்க்கிறார்கள். நான்கு காட்சிகளில்தான் நடித்துள்ளேன். என் நம்பரைப் பிடித்து எங்கெங்கிருந்தோ போன் பண்ணுகிறார்கள். காமராஜர் தேர்தலில் தோற்ற பிறகு தமிழ்நாட்டு அரசியலையே புரட்டிப் போட்டது சினிமா. திரைத்துறையின் கவர்ச்சி எவ்வளவு என்பதை அரசியல்வாதிகளுடைய பழகிய நான் இந்தப் படத்தில் உணர்ந்தேன்.
நீங்கள் சந்தித்த ஆளுமைகளில் அஜித் எப்படி?
பலரும் பேட்டியில் ஒன்று பேசுவார்கள், வெளியே வேறு மாதிரி இருப்பது எனக்குத் தெரியும். ஆனால் அஜித் சமநிலை கொண்ட மனிதர். அதனால் தான் அவர் அவராகவே இருக்க முடிகிறது. படப்பிடிப்பில் ஒவ்வொரு நாளும் நலம் விசாரிப்பார். ஒரு பெரிய ஸ்டார் என்ற மனநிலையே அவரிடம் இல்லை. சினிமாத்தனம் இல்லாத மனிதராக அஜித்தைப் பார்க்கிறேன். வாழ்க்கையிலும் உடம்பிலும் அவர் பார்க்காத விபத்து கிடையாது. அது எதுவுமே அவரைச் சோர்வடைய வைக்கவில்லை. அடுத்து என்ன, அடுத்து என்ன என ஓடிக்கொண்டிருக்கிறார். துப்பாக்கிச் சுடுதல், பைக் ரேஸ், கார் ரேஸ் என அனைத்துக்குமே தன்னை தயார்ப்படுத்திக்கொண்டு தான் இறங்குகிறார். கற்றுக் கொள்கிறார், கேட்கிறார் இதெல்லாம் அவருடைய இமேஜுக்குப் பெரிய விஷயம்.
ஒரு தேர்ந்த முன்னாள் அரசியல் பத்திரிகையாளர் என்ற வகையில் அஜித்திடம் அரசியல் ஆசை இருக்கிறதா என்பதைக் கண்டறிய முடிந்ததா?
அரசியல் தொடர்பா பேசினேன். கேட்டுக் கொண்டார். அநீதிகளைக் கண்டு கொதிக்கிறார். என் மனத்தில் என்ன தோன்றுகிறது என்றால், நல்ல தருணம், நல்ல களம் ஆகியவற்றுக்காகக் காத்திருக்கிறார். காத்திருத்தல் என்பது தள்ளிப் போடுவது அல்ல, தன்னைத் தயார்ப்படுத்திக் கொள்வதற்காகத் தான். சினிமா, பைக் ரேஸ், கார் ரேஸ், துப்பாக்கிச் சுடுதல் என அனைத்திலும் ஜெபித்து விட்டார். அரசியல் ரேஸிலும் ஆர்வமாக இருக்கிறார். அதிலும் ஜெயிப்பார் என்பது என் தனிப்பட்ட கருத்து. ஏனென்றால் அனைத்தையும் தெரிந்து கொள்கிறார். அவர் வருவாரா, மாட்டாரா என்பதைக் காலம்தான் தீர்மானிக்க வேண்டும். அவர் அநாவசியமாகப் பேசமாட்டார். அவர் செயல்படுவார். அவருக்கு அரசியல் ஆசையே இல்லை எனப் பலரும் சொல்கிறார்கள். ஆனால், அவருக்குள் சமூக தாக்கம் அனல் மாதிரி கொதிக்கிறது.
உங்களுடைய நண்பர்கள் ராஜூமுருகன், வினோத் குறித்து?
ராஜூமுருகன் நல்ல மனிதர். சமூகத்தின் மீதான அக்கறை அதிகம். ஜனாதிபதியைக் கிண்டல் பண்ணி எடுத்த படத்துக்கே, ஜனாதிபதி கையால் விருது வாங்கியவர். வினோத் ஒவ்வொரு கதையிலுமே தன்னை வித்தியாசப்படுத்திக் கொண்டே இருப்பவர். படப்பிடிப்புத் தளத்துக்கு அனைவருக்கும் முன் வந்துவிடுவார், அனைவரும் சென்ற பிறகே அவர் கிளம்புவார். அஜித் - வினோத் இணைப்பில் பணிபுரிந்ததே பெரிய விஷயம். இருவருமே நான் தொடங்கியிருக்கும் திரை வாழ்க்கையில் முக்கியமானவர்கள்.
உங்களது நடிப்பில் அடுத்து வரவிருக்கும் படங்கள்?
‘ஜிப்ஸி' படத்தில் முதல்வருக்கு ஆலோசகர் கதாபாத்திரம். தவிர, ‘கைதி', 'கசட தபற' உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கிறேன். ஒரு பக்கம் நடிப்பு, இன்னொரு பக்கம் பேச்சு, எழுத்து என ஓடிக் கொண்டிருக்கிறேன். அனுபவங்கள் போதாது என்று மனம் சொல்கிறது. இன்னும் கற்றுக் கொள்ள வேண்டியவை எவ்வளவோ இருக்கின்றன. காலத்தின் கைவிரல் பிடித்து ஓடிக்கொண்டிருக்கிறேன்.
படம்: பு.கா. பிரவீன்