Published : 16 Aug 2019 09:40 am

Updated : 16 Aug 2019 09:40 am

 

Published : 16 Aug 2019 09:40 AM
Last Updated : 16 Aug 2019 09:40 AM

தரைக்கு வந்த தாரகை 26: பதறிய படைப்பாளி... காப்பாற்றிய தம்பதி!

tharaiku-vandha-thaaragai

தஞ்சாவூர்க் கவிராயர்

பானுமதி ‘சுவர்க்கசீமா’வில் நடித்துக்கொண்டிருக்கும் போதே ‘தாசில்தார்’ படத்தில் நடித்து முடித்துவிட்டார். இரண்டிலும் இவர் ஏற்று நடித்த கதாபாத்திரங்கள் (நகரத்துப் பெண்ணாகவும், கிராமத்துப் பெண்ணாகவும்) வெவ்வேறு பரிமாணங்களில் மின்னின. ‘சுவர்க்கசீமா’ முடியாமல் இழுத்துக்கொண்டிருந்ததற்குக் காரணம் எல்லாப் படத் தயாரிப்பாளர்களும் நியூடோன் ஸ்டுடியோவையே நம்பியிருந்ததுதான்.

நியுடோனின் முக்கியமான ஜாம்பவான் கேமராமேன் ஜித்தன் பானர்ஜி. பானுமதி அம்மையார் அவரைப் பற்றிச் சுவாரசியமாகச் சொல்லத் தொடங்கினார். “ஒலிப்பதிவாளர் தின்ஷா, இன்னும் சில பெரிய தொழில்நுட்பக் கலைஞர்கள் எல்லோரும் அந்த ஸ்டுடியோவின் பங்குதாரர்கள். ஜித்தன் பானர்ஜி, எம்.எஸ்.சுப்புலட்சுமி நடித்த ‘மீரா’ படத்தின் ஒளிப்பதிவாளர். கதாநாயகியின் முகம் எப்படி இருந்தாலும் சரி, அதைத் திரையில் அழகுபடத் தோன்றச் செய்வதில் அவர் கில்லாடி. ஆனாலும், அவரை வம்புக்கார மனிதராகவே பலரும் கருதினார்கள். ஸ்டுடியோவில் படத்துக்கு செட் போடுவதற்கு முதலில் அனுமதி கொடுப்பார். பிறகு அதை ரத்துசெய்வார். கால்ஷீட் விஷயத்திலும் அவர் சினிமா தயாரிப்பாளர்களை இம்சித்து வந்தார்.

நியூடோன் ஸ்டுடியோவுக்குள் ஏராளமான மரங்கள் இருந்தன. ஜித்தன் பானர்ஜி ஒரு பெரியமர நிழலில் உட்கார்ந்துகொண்டு பழச்சாறு பருகுவார். அவருக்கு முன்னால் ஸ்டுடியோவுக்கும் கால்ஷீட்டுக்கும் அனுமதிகேட்டு படத் தயாரிப்பாளர்கள் நிற்பார்கள். எல்லோருக்கும் முன்னால் தன்கையில் பழச்சாறு நிரம்பிய கோப்பையை உயர்த்தி, ஆங்கிலத்தில் ‘இதோ நான் குடிப்பது தயாரிப்பாளர்களின் ரத்தம்’ என்பார் கர்வம் தொனிக்க.

மகிழ்ச்சியும் கவலையும்

இயக்குநர் பி.என்.ரெட்டிக்கு ஜித்தன் பானர்ஜியின் இப்படிப்பட்ட செய்கைகள் பிடிக்கவில்லை. ‘சுவர்க்கசீமா’வின் முக்கால்வாசிப் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. சில நடனக் காட்சிகள், கொஞ்சம் ‘பேட்ச் ஒர்க்’ மட்டும் எஞ்சியிருந்தன. என் கணவர் பொறுமை இழந்து பி.என். ரெட்டியிடம் ‘எப்போதான் சார் படத்தின் வேலைகள் முடிப்பீங்க?’ என்று கேட்டுவிட்டார். என் கணவர் பணிபுரிந்த ‘செஞ்சுலட்சுமி’ படவேலைகள் முடிந்துவிட்டன. பிறகு அவர் ‘தியாகையா’ என்ற படத்தில் இணை இயக்குநராகச் சேர்ந்தார். என்னை நாகையாவின் ஜோடியாக நடிக்க அழைத்தார்கள்.

‘சுவர்க்கசீமா’வோடு சரி. இனி அவளுக்கு சினிமாவே வேண்டாம்’ என்று கூறிவிட்டார் என் கணவர்.
அப்போதுதான் என் வாழ்வின் இனிய நாள் ஒன்றினை இறைவன் எனக்கு அருளினான். ஆமாம் அன்றுதான் டாக்டர் என்னைப் பரிசோதித்துவிட்டு நான் விரைவில் தாயாகவிருப்பதாகத் தெரிவித்தார். எங்கள் வீட்டில் மகிழ்ச்சி கரைபுரண்டது. கூடவே எனக்குள் ஒரு கவலையும் மூண்டது. ‘சுவர்க்கசீமா’வில் மீதமிருக்கும் நடனக்காட்சிகளை பி.என்.ரெட்டி எப்படி எடுக்கப் போகிறார்?’
மனசுக்குள் ஊடாடிய சஞ்சலத்தை மறைத்துக்கொண்டு எங்களுக்கு மனமார வாழ்த்துச் சொன்னார் பி.என்.ரெட்டி.

‘கவலைப்படாதீங்க. படத்தைச் சீக்கிரமே முடிச்சுடுவோம். லாங் ஷாட் எல்லாம் டூப் போட்டு எடுத்துரலாம். க்ரூப் டான்ஸ்தான்; லைட்டா மேக்-அப் போட்டு குளோ-அப் ஷாட்ஸ் கொஞ்சம் எடுத்துரலாம். அம்மாயி சம்மந்தப்பட்ட முக்கியமான காட்சிகள் எல்லாம் முன்னாடியே எடுத்தாகிவிட்டது. கடவுளுக்குத்தான் நன்றி சொல்லணும்!’ என்றார்.
நான் எட்டுமாதக் கர்ப்பிணியாக இருந்தபோது, ‘சுவர்க்கசீமா’ படக்காட்சிகளை நடித்துக் கொடுத்தேன். என் கணவர் ‘தியாகையா’ படப்பிடிப்புக்காக திருவாரூர் புறப்பட்டுப் போனார். பிரசவத்துக்கு உதவியாக என் மாமியார் என்னுடன் வந்து இருந்தார். நான் ஆஸ்பத்திரி என்றாலே நடுங்குவேன். வீட்டிலேயே பிரசவத்தை வைத்துக் கொண்டோம். என் பையன் பரணி பிறந்தான்.

‘சுவர்க்கசீமா’ வெற்றிப்படமாக அமைந்தது. தமிழ் நாட்டில் 100 நாட்கள் ஓடியது அப்படம். இந்த நேரத்தில் முருகன் டாக்கீஸ் நிறுவனத்தினர் என்னை வைத்துத் தமிழ்ப் படம் ஒன்றை எடுக்க முன்வந்தார்கள். வேறுசில தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்களும் என் கணவரை மொய்த்துக் கொண்டார்கள். ஆம்! தமிழ்த் திரைப்பட உலகம் என்னை இருகரம் நீட்டி வரவேற்றது!.

நான்கு ஆண்டுகள்.. ஒரு படம்

அக்காலத்தில் பாய்ஸ் கம்பெனி நாடகக் குழுவினர் தமிழகம் முழுக்க அரங்கேற்றிய நாடகங்கள் பிரபலமாக இருந்தன. இந்த நாடகங்களில் நடித்த பாலையா, சிவாஜிகணேசன், தங்கவேலு எனப் பலர் தமது நடிப்பாலும் வசன உச்சரிப்பாலும் மக்கள் உள்ளங்களைக் கொள்ளை கொண்டார்கள். பின்னர் திரைப்படங்களில் அவர்கள் என்னுடன் நடித்தபோது ‘சுவர்க்க சீமா’ படத்தைப் பத்து, பதினைந்து தடவைகள் பார்த்ததாக என்னிடம் சொல்வார்கள். பரணி பிறந்த கையோடு நான் ‘ரத்னகுமார்’ படத்தில் நடிக்கச் சம்மதித்தேன்.

படம் வெளிவந்தபோது பரணிக்கு வயது நான்கு வயது என்றால், படத்தை எடுத்து முடிக்க எவ்வளவு காலம் எடுத்துக் கொண்டார்கள் என்று பாருங்கள். இதற்குப் பல காரணங்கள். முக்கியமான காரணம் ஒன்றும் இருந்தது. இயக்குநர்களான கிருஷ்ணன் – பஞ்சு இருவரும் அந்தப் படத்தின் கதாநாயகன் பி.யு.சின்னப்பாவிடம் ஒரு விஷயத்தைக் கண்டிப்பாகச் சொல்லிவிட்டார்கள். ‘படப்பிடிப்புக்கு வரும்போது நீங்கள் குடித்துவிட்டு வரக் கூடாது. குறிப்பாக பானுமதியுடன் நடிக்கும்போது அப்படி ஒரு நிலையில் வரவே கூடாது’ என்றார்கள். அப்படிச் சொன்னது போதாதென்று, ‘பானுமதிக்கு முன்கோபம் அதிகம்.

அவருக்குக் கோபம் வந்தால் யாராக இருந்தாலும் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை. பிறகு செட்டை விட்டு வெளியே போய் விடுவார்’ என்று சொன்னது பி.யு.சின்னப்பாவுக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை. அவரால் குடிக்காமல் இருக்க முடியாது. என்னுடன் நடிக்க வேண்டிய பல கால்ஷீட்டுகளுக்கு அவர் வருவதே இல்லை. அதனால் படம் இழு..இழு.. என்று இழுத்துக்கொண்டிருந்தது.

கர்நாடக சங்கீத மெட்டுக்களில் அமைந்த பல நல்ல பாடல்களை இந்தப் படத்தில் பாடி இருக்கிறேன். படத்தின் இசை அமைப்பாளர் சி.ஆர். சுப்பராமன். இப்படத்தில் எம்.ஜி.ஆர். சிறிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருப்பார்” என்று பானுமதி அம்மையார் பேசுவதை நிறுத்திவிட்டு, “இந்தாருங்கள்” என்று ஒரு இனிப்பு பீடாவை நீட்டினார். அவர் வாழ்ந்த காலத்தின் தித்திப்பாய் ருசித்தது அது.

100 நாள் படம்

“மற்றொரு புறம் என் கணவர் பரணி பிச்சர்ஸ் என்ற பெயரில் ஒரு பட நிறுவனம் தொடங்கி எங்களது கன்னி முயற்சியாக ‘ரத்னாவளி’ என்ற படத்தை எடுக்க முற்பட்டார். ரத்னாவதி கதையைக் கேட்டவர்கள் கதைக்கரு ஏதோ அபசகுனம் போல் தொனிக்கிறது வேண்டாம் என்று என் கணவரைத் தடுத்தார்கள்”. என் கணவரும் வேறு கதை தேடத் தொடங்கினார். என் தாயார் சிறுவயதில் எனக்குச் சொன்ன ‘ரத்னமாலா’ என்ற புராணக் கதையை நான் சொன்னேன். இது மாதிரி புராணக் கதைகள் படமாக எடுக்கப்பட்டு பெண்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற காலம் அது. நான் சொன்ன கதை எல்லோருக்கும் பிடித்துப்போய்விட்டது.

ஒரு நல்ல நாளில் பாடல் பதிவுடன் படத்துக்குப் பூஜை போட்டோம். சுப்பராமன்தான் படத்தின் இசையமைப்பாளர். ராஜேஸ்வர ராவ், கண்டசாலா, நான் எல்லோரும் ஆளுக்கொரு பாடல் பாடினோம். ‘ரத்னமாலா’ நியூடோன் ஸ்டுடியோவில் படமாக்கப்பட்டது. இன்றைய விஜயா கார்டன் அமைந்திருக்கும் இடம்தான் அன்று நியூடோன் ஸ்டுடியோ. படத்தில் வருகிற ப்ருஹதாரண்யம் என்ற வனப்பகுதியாகச் சித்தரிக்கப்பட்ட இடம் அந்த ஸ்டுடியோவுக்குள் இருந்த பசுமை அடர்ந்த பகுதிதான். ஜித்தன் பானர்ஜி ஒளிப்பதிவாளர். நாங்கள் எதிர்பார்த்தது போலவே படம் 100 நாள் ஓடி சாதனை படைத்தது.

ஒரு படைப்பாளி காப்பாற்றப்பட்டார்!

‘ரத்னமாலா’ தொடங்கப் பட்டபோதே திரு. எல்.வி.பிரசாத் இயக்கத்தில் (படத்தின் கதாநாயகரும் அவர்தான் கூட) ‘கிரஹப்பிரவேசம்’ படம் எடுக்க பூர்வாங்க ஏற்பாடுகள் தொடங்கிவிட்டன. என் கணவரும் எல்.வி.பிரசாத்தும் நெருங்கிய நண்பர்கள். நான்காயிரம் அடி படம் எடுக்கப்பட்ட நிலையில் படம் மிக நன்றாக வந்து கொண்டிருந்த நேரத்தில் எல்.வி.பிரசாதை அந்தப் படத்திலிருந்து நீக்கிவிட சிலர் முயன்றார்கள். இதைக் கேள்விப்பட்ட எல்.வி.பிரசாத், நள்ளிரவில் எங்களைத் தேடி ஓடிவந்தார்.

‘இந்த இக்கட்டிலிருந்து என்னைக் காப்பாற்றுங்கள், இல்லாவிட்டால் பம்பாய்க்கே திரும்பிப்போய்ப் பழைய வாழ்க்கையைத் தொடர்வதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை’ என்று பதறினார். என் கணவர் படத் தயாரிப்பாளர்களைச் சந்தித்து எல்.வி.பிரசாத் இல்லையென்றால் பானுமதிக்குக் கொடுத்த முன்பணத்தைத் திருப்பித் தந்து விடுகிறோம் அவளும் நடிக்க மாட்டாள் என்று கூறிவிட்டார். பிரச்சினை தீர்ந்தது. அஸ்தமிக்க இருந்த ஒரு சூரியனின் விடியலைக் கண்ட திருப்தி எங்களுக்கு.

‘கிரஹப் பிரவேசம்’ வெற்றிப்படமாக அமைந்தது. தொடர்ந்து ஏ.டி. கிருஷ்ணசாமி இயக்கத்தில் ராஜயோகி படத்தில் நடிக்க ஒப்பந்தம் கையெழுத்தாயிற்று. இந்தப் படத்தில் நான் பாடிய பாட்டுக்கள் மிகுந்த வரவேற்பைப் பெற்றாலும் படம் ஏனோ வெளிவரவே இல்லை. ஏறத்தாழ இந்த நேரத்தில்தான் எம்.கே.தியாகராஜ பாகவதர், என்.எஸ். கிருஷ்ணன் இருவரும் லட்சுமி காந்தன் கொலை வழக்கில் சிறை சென்று விடுதலை ஆனார்கள்.

அவ்வளவுதான் தமிழ்நாட்டுத் திரைப்படத் தயாரிப்பாளர்கள் அப்படியே அவர்களை மொய்த்துக் கொண்டார்கள். தங்கள் படத்தில் அவர்களை நடிக்க வைக்க துடியாய்த் துடித்தார்கள். பாகவதர் என்ன செய்தார் தெரியுமா?” என்று கூறித் தொடராமல் நிறுத்தினார் பானுமதி. நான் ஆர்வத்தை மட்டுப்படுத்த முடியாமல் ‘இப்போதே சொல்லிவிடுங்கள்’ என்றேன். அவரோ, தனக்குள் இருந்த கதைசொல்லியைக் காத்துக்கொள்ளும்விதமாக “நாளைக்குச் சொல்கிறேன்” என்றார் அவருக்கே உரிய புன்முறுவலுடன்.

(தாரகை ஒளிரும்)
தொடர்புக்கு:- thanjavurkavirayar@gmail.com
படங்கள் உதவி: ஞானம்


தரைக்கு வந்த தாரகைபடைப்பாளிதம்பதிபானுமதிகவலைஒரு படம்தாசில்தார்100 நாள் படம்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

cartoon

தளை அறுந்தது!

வெற்றிக் கொடி