Published : 09 Aug 2019 11:09 AM
Last Updated : 09 Aug 2019 11:09 AM

மறக்க முடியாத திரையிசை: தொலைத்தவளின் மன வரிகள்

பி.ஜி.எஸ்.மணியன்

ஒருவனுக்கு ஒருத்தி என்பது இந்தியப் பண்பாடு. இருந்தாலும், கட்டிய மனைவியைக் கண்கலங்க வைத்துவிட்டு இன்னொருத்தியுடன் தொடர்பு வைத்துக்கொள்ளும் ஆண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். காலப்போக்கில் மனம் மாறி மனைவியுடன் முன்னைவிட இறுக்கமாக இணைந்து வாழ்வதும் உண்டு.

ஆனால்.. இடையில் அவனை நம்பி வாழ்க்கையையே தொலைத்த அப்பாவிப் பெண்ணின் நிலை? கள்ளமே இல்லாமல் ஆணின் ஆசைக்குப் பலியானது ஒன்றுதானே அவள் செய்த தவறு?
களங்கத்தையும் பழிச்சொல்லையும் மட்டுமே சுமந்து வாழும் அந்தப் பெண்ணின் எண்ண ஓட்டங்களை இதுவரை யாருமே சிந்தித்ததில்லை; கவியரசர் கண்ணதாசனைத் தவிர.

1967-ம் ஆண்டு புதுமை இயக்குநர் ஸ்ரீதர் தயாரித்து இயக்கிய ‘நெஞ்சிருக்கும் வரை' படத்துக்காக கவியரசரின் கைவண்ணத்தில் பிறந்த இந்தப் பாடலுக்கு ஒரு தனித்தன்மை உண்டு.
கதைப்படி மது, மாது என்று கட்டிய மனைவியை ஒதுக்கிவைத்துவிட்டு வாழும் கணவன் வீட்டுக்கே இன்னொரு பெண்ணைக் கூட்டி வந்து நடனமாடச் சொல்கிறான்.

இந்த இடத்தில்தான் கவியரசர் அந்தப் பெண்ணை ஒரு போகப்பொருளாகப் பார்க்காமல், வாழ்வை அதன் போக்கில் எதிர்கொள்ளும் புதுமைப் பெண்ணாகப் பார்க்கிறார். பாடலின் ஒவ்வொரு சரணத்திலும் முத்தாய்ப்பாக வரும் கடைசி வரிகள் அதிர வைக்கின்றன. அனுதாபப்பட வைக்கின்றன. பிரமிக்க வைக்கின்றன.
அந்தப் பாடல்தான் இசைக்குயில் எஸ். ஜானகி அவர்கள் பாடிய 'நினைத்தால் போதும் பாடுவேன்' என்று தொடங்கும் பாடல். இந்தப் பாடலை ஹம்சானந்தி ராகத்தில் எம்.எஸ்.விஸ்வநாதன் செதுக்கி எடுத்திருக்கிறார் என்றால் அது மிகை அல்ல. இப்படிக்கூட மெல்லிசையில் ராகத்தின் ஜீவன் முழுவதையும் வெளிக்காட்ட முடியுமா என்று வியக்க வைக்கும் ஹம்சானந்தி!

ஜானகி அம்மா பாடலைப் பாடியிருக்கும் விதம், வெளிப்படுத்தி இருக்கும் பாவங்கள், குரலில் பிறக்கும் கமகங்கள், செய்திருக்கும் ராக சஞ்சாரங்கள் பற்றி பக்கம் பக்கமாக எழுதிக்கொண்டிருக்கலாம். ஒரு துளிக்கூடப் பிசிறே இல்லாத.. இனிமையைத் தவிர எதுவுமே செவிகளில் பாயாத வகையில்.. பாட வைத்திருக்கிறார் மெல்லிசை மன்னர்.
‘நினைத்தால் போதும் பாடுவேன்.
அணைத்தால் கையில் ஆடுவேன்.
சலங்கை துள்ளும் ஓசையில்
கலங்கும் கண்ணை மாற்றுவேன்’
முதல் சரணத்தில், தன்னால் என்னென்ன செய்ய முடியும் என்று சொல்பவள், “இப்படி எல்லாம் நீ இழுத்த இழுப்புக்கெல்லாம் ஆடுவதால் என்னைக் கேவலமாக நினைத்துவிடாதே. பொதுவாகப் பெண்களின் மென்மையைக் குறிப்பிடும்போது இதமாக வருடிச் செல்லும் தென்றல் காற்றுடன் ஒப்பிட்டுச் சொல்வதுண்டு.

பாலின் நிறமும் பனியின் மென்மையும் கொண்ட நான், அந்தத் தென்றல் காற்றைவிட மேலானவள். எப்படித் தெரியுமா? தென்றல் காற்று, இடம், பொருள், ஏவல் பார்க்காமல் எல்லா இடத்திலும் பறந்து செல்லும். நானோ ஏக்கம், தவிப்பு எதுவானாலும் சரி உன்னைத் தவிர எல்லாரிடமும் சொல்லிக்கொண்டு அலைய மாட்டேன்.” என்கிறாள்.
'பாலின் நிறம்போல உருவான பெண்மை
பனியில் விளையாடும் கனிவான மென்மை
எங்கும் பறந்தோடும் இளம்தென்றல் அல்ல
ஏக்கம் வரும்போது எல்லோர்க்கும் சொல்ல..'
இந்த இடத்தில் தன்னையும் அறியாமல் கவியரசர் கையாண்டிருக்கும் ’வேற்றுமை அணி நயம்’ வியக்கவைக்கிறது. உவமை சொல்லும் பொருளைவிட - உவமைக்கு எடுத்துக்கொள்ளப்படும் பொருளை உயர்வாகச் சித்தரிப்பதுதான் வேற்றுமை அணி. தென்றலுக்கு உவமை சொல்லப்படும் பெண்ணை அந்தத் தென்றலைவிட உயர்வாகக் காட்டி இருக்கிறார் கவியரசர்.

சரணங்களுக்கு இடையில் வரும் இணைப்பிசையில் மெல்லிசை மன்னர் கூட்டி இருக்கும் வயலின்களின் விறுவிறுப்பு, இணைப்பிசை முடியும் இடத்தில் தபேலாவின் தாளக்கட்டு, ஒரு ராகத்தை மெல்லிசையில் எப்படிக் கையாள வேண்டும் என்பதற்கு இந்தப் பாடல் ஒரு பாடம்.

தொடரும் சரண வரிகள் லேசான அதிர்வை மனசுக்குள் ஏற்படுத்துகின்றன. ‘காலம் எப்போதும் சீரான ஒழுங்குக்குள் இருப்பதில்லை. நான் உன்மீது கொண்ட காதலும் தவறான ஒன்றல்ல. நாளையே நீ மாறி உன் மனைவியுடன் இணைந்து வாழ நேரிடலாம். ஆனால், நானோ இருவரும் இணைந்திருந்த இன்ப நினைவுகளை மட்டுமே சுமந்து வாழ்ந்தாக வேண்டும்' என்று வாழ்க்கையின் யதார்த்தத்தை உணர்ந்த பெண்ணின் குரலாகக் கவியரசர் ஒலிக்க வைத்திருக்கிறார்.
‘காலம் எந்நாளும் முறையானதல்ல
காதல் எந்நாளும் தவறானதல்ல
நாளை இந்நேரம் நீ மாறக்கூடும்
நடந்த நினைவோடு நான் வாழ நேரும்'
கடைசி சரணத்திலோ சாட்டையடி கொடுப்பது போன்ற வார்த்தைப் பிரயோகங்கள். “கேள்வி என்று ஒன்று வந்தால் பதில் என்று ஒன்று வந்துதான் தீர வேண்டும். அந்தப் பதில் மனதுக்கு இசைவானதாகத்தான் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. மனத்தைக் காயப்படுத்தவும் செய்யும். ஆகவே, எதையும் கேட்க நினைக்காமல், வாழ்வைச் சுகமாக நீ வாழும்போது உன் மனைவிக்கும் மனம் என்று ஒன்று இருக்கும் என்பதை நினைவில்கொண்டு, அதை முடிந்தால் காயப்படுத்தாமல் வாழப் பார்." என்று நறுக்கென்று அறிவுரை கூறி முடிக்கிறாள் அவள்.

'கேள்வி வரும்போது பதில் ஒன்று வேண்டும்
கேட்க நினைக்காத மனம் ஒன்று வேண்டும்
வாழ்வை சுகமாக நீ வாழ வேண்டும்.
மனதை மனதாக நீ காண வேண்டும்’.
வாழ்க்கையைத் தொலைத்த பெண்ணின் மனக்குமுறல் பாடல் முடிந்த பிறகும் பலத்த அதிர்வைக் கூட்டுகிறதே. அதுவே பாடலின் வெற்றிக்கு ஒரு சாட்சி.

தொடர்புக்கு: pgs.melody@gmail.com
படம் உதவி ஞானம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x