

திரை பாரதி
திரைப்படங்களைத் தயாரிப்பதைவிட அவற்றைத் திரையிடுவது பெரும் சவாலாகியிருக்கும் காலம் இது. பெரும்பாலான திரையரங்குகள் அவற்றின் உரிமையாளர்களால் குத்தகைக்கு விடப்பட்டுவிட்டன. பெரிய நடிகர்களின் படங்களைத் திரையிடுவதிலேயே குத்தகைதாரர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை பெரிய நடிகர்களின் படங்கள் எப்போதும் தங்கள் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்க வேண்டும்; அப்போதுதான் கூட்டம் அதிகமாக வரும்; அப்படி வந்தால்தான் கேண்டீனில் வியாபாரம் நடக்கும் என்பதில் குறியாக இருக்கிறார்கள்.
குத்தகைதாரர்களின் இந்த மனப்பாங்கைப் பயன்படுத்திக்கொண்ட சிலர், ‘உங்களுக்குப் பெரிய கதாநாயகர்களின் படம் எப்போதும் கிடைக்கிற மாதிரி நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். ஆனால், நீங்கள் எங்கள் அனுமதியில்லாமல், வினியோகஸ்தர்களுக்கோ நேரடியாகப் படத்தை வெளியிட வரும் தயாரிப்பாளர்களுக்காக தியேட்டர் போட வருபவர்களுக்கோ திரையரங்கைத் தராமல் எங்களுடன் ஒரே அணியில் நிற்க வேண்டும் என்று கூறி ‘தியேட்டர் சிண்டிகேட்’ முறையை உருவாக்கினார்கள் என்று தெரிகிறது. இதனால் இன்று தமிழ்நாட்டில் உள்ள விநியோகப் பகுதிகளில் உள்ள பெரும்பாலான திரையரங்குகள் வெகுசிலரின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டன. இதன் விளைவாகச் சிறு படங்களைத் திரையரங்குகளில் வெளியிடுவது பெரும் சவாலாகியிருக்கிறது.
பார்வையாளர்களின் மனநிலையும் தேர்வும்
இந்த இடத்தில் பார்வையாளர்களின் மனதைத் திரையரங்கை நடத்துபவர்களும் சிண்டிகேட் செய்பவர் களும் புரிந்துகொள்ளவே இல்லை என்கிறது ரசிகர்களின் தரப்பு. படம் பார்க்க வரும் மக்களில் பெரும்பாலானவர்கள் திரையரங்கு தூய்மையாக இருக்கிறதா, அங்கே ஒலியமைப்பு, திரையிடல் தரம் ஆகியவை நவீனமாக இருக்குமா, ஒரு குறிப்பிட்ட திரையரங்குக்குச் சென்றால் அது நமக்குக் கவுரவமாக இருக்குமா என்று பார்க்கிறார்கள்.
இதன் காரணமாகப் பெரிய நகரங்கள் தொடங்கி சிறுநகரங்கள் வரை, திரையரங்குகள் தங்களுக்கென்று வாடிக்கையான ரசிகர்களைக் கொண்டிருக்கின்றன. சரிவரப் பராமரிக்க மனமில்லாத பல சுமாரான திரையரங்குகளில் பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகும்போது ரசிகர்கள் வேண்டா வெறுப்பாகச் சென்று பார்க்கிறார்கள். ‘எங்களது மற்றொரு மனப்பாங்கையும் திரையரங்கை நடத்திவருபவர்கள் புரிந்துகொள்ளவில்லை’ என்பது பார்வையாளர்களின் குற்றச்சாட்டு.
‘தரமான சிறிய படங்கள், சிறு முதலீட்டில் தயாரிக்கப்படும் பொழுதுபோக்குப் படங்களை நாங்கள் பார்க்க வரமாட்டோம் என்று நினைப்பது தவறு’ என்கிறார்கள். ஆக, பார்வையாளர்களின் திரையரங்கத் தேர்வையும் படங்களின் தேர்வையும் குறைத்து மதிப்பிட்டு, சிறிய படங்களைத் திரையரங்குகள் முற்றாகப் புறக்கணித்துவிட்டன. அதனால்தான், இன்று சிறு படங்களை டிஜிட்டல் தளத்தில் பார்த்துக்கொள்ளலாம் என்ற நடைமுறைக்கு ரசிகர்கள் மாறிக்கொண்டிருக்கிறார்கள். இந்தப் போக்கினால், பெரிய திரைக்காகத் தயாரிக்கப்பட்ட சின்ன படங்களை டிஜிட்டல் தளத்தில் வெளியிட வேண்டிய கட்டாயம் உருவாகிவிட்டது. இந்த இடத்தில் தயாரிப்பாளர் சங்கம் சிறு படங்களைக் காப்பாற்றியிருக்க வேண்டும். ஆனால், அதைச் செய்யத் தவறிவிட்டது.
செய்யத் தவறிய நிர்வாகம்
விஷால் தலைமையில் வென்ற தயாரிப்பாளர் சங்க அணி, திரையரங்குகளில் சிறு படங்களுக் கான இடத்தை உறுதிசெய்ய, பட வெளியீட்டு ஒழுங்குமுறைக் குழுவை அமைத்தது. அக்குழு படங்களின் வெளியீட்டைக் கட்டுப்படுத்தத் தொடங்கியது. அதில் உறுதியாக நிற்க முடியாத நிலையில், விஷால் தலமையிலான அணி அதில் தோற்றுப்போனது என்றே சிறுபடத் தயாரிப்பாளர்கள் கொந்தளித்தார்கள். ஒரு கட்டத்தில் தயாரிப்பாளர் சங்கத்தைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த தமிழக அரசு, சங்கத்தை நிர்வகிக்க தனி அதிகாரி ஒருவரை நியமித்தது. அவருக்கு ஆலோசனை வழங்க ‘பாரதிராஜா, தயாரிப்பாளர்கள் ஜே.எஸ்.கே, டி.சிவா, எஸ்.வி.சேகர், தியாகராஜன், ராஜன் உள்ளிட்ட பலர் அடங்கிய தனிக் குழு ஒன்று அமைக்கப்பட்டது.
இக்குழு தற்போது தயாரிப்பாளர்களின் நலனுக்காகச் சில அதிரடி முடிவுகளை எடுத்து அதைச் செயல்படுத்தி வருகிறது. அதில் ஒன்றுதான் பெரிய நடிகர்கள் நடித்து வெளியாகவிருக்கும் புதிய படங்களுக்கான டிஜிட்டல் படப் பிரதிகளின் எண்ணிக்கையை, அதிரடியாகக் குறைத்திருக்கும் நடவடிக்கை. ஒரு திரைப்பட விநியோக ஏரியாவில் உள்ள எல்லாத் திரையரங்குகளிலும் பெரிய நடிகர்களின் படத்தை இனி, குவிக்க முடியாது. இப்போது சிறு படங்களுக்குத் தலையீடுகள் இல்லாமல் தன்னிச்சையாகவே திரையரங்குகள் கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
இந்த நடவடிக்கையின் முதல் கட்டமாக, 110 திரையரங்குகள் உள்ள சேலம் விநியோகப் பகுதியில், அஜித் நடிப்பில் இன்று வெளியாகியிருக்கும் ‘நேர்கொண்ட பார்வை’ 48 திரையரங்குகளில் மட்டுமே வெளியாகிறது.
கொங்கு மண்டலத்தில் விதை ஊன்றப்பட்ட ‘தியேட்டர் சிண்டிகேட்’ முறைக்கு, அங்கிருந்தே மூடுவிழாவைத் தொடங்கியிருக்கிறது தயாரிப்பாளர் சங்க ஆலோசனைக் குழு. பெரிய படங்களின் டிஜிட்டல் பிரதிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தி, சிண்டிகேட் முறை ஒழிப்பைத் தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தி முடிக்கும்போது, தரமான சிறு படங்களைத் தயாரிக்க நினைப்பவர்கள் சுதந்திரமாக உணர்வார்கள். அவற்றைத் திரையரங்குகளில் கண்டுகளிக்க விரும்பும் ரசிகர்களும் இழந்த திரையரங்க அனுபவத்தைத் திரும்பப் பெறுவார்கள். அதற்கு, நூற்றுக்கணக்கான திரையரங்குகளைத் தங்கள் கட்டுக்குள் வைத்து சிண்டிகேட் செய்யும் வெகுசிலருக்குப் பெரிய நடிகர்களின் படங்களின் விநியோக உரிமையை விற்காமல் இருப்பதும் அவசியம். அதையும் கட்டுப்படுத்துமா தயாரிப்பாளர் சங்க ஆலோசனைக் குழு?
தொடர்புக்கு:jesudoss.c@hindutamil.co.in