Published : 09 Aug 2019 09:58 am

Updated : 09 Aug 2019 09:58 am

 

Published : 09 Aug 2019 09:58 AM
Last Updated : 09 Aug 2019 09:58 AM

தரைக்கு வந்த தாரகை 25: ஓ...ஹோ...ஹோ...பாவு ரமா!

tharaiku-vandha-tharagai

தஞ்சாவூர்க் கவிராயர்

விருப்பம் இல்லாமல் நடிக்க வந்த பானுமதியை சினிமா நட்சத்திரமாக்கிவிட்டது. இயக்குநர்கள் சிலர், தாம் தேர்ந்தெடுக்கும் அல்லது எழுதும் திரைக்கதைகளில் உலவும் கதாபாத்திரங்களை தங்களைக் கவர்ந்த நட்சத்திரங்களை வைத்தே சிருஷ்டிக்கிறார்கள். அப்படித்தான் அக்காலத்தின் ஜாம்பவான் இயக்குநர் பி.என்.ரெட்டியும் பானுமதியை மனத்தில் வைத்து ஒரு கதையை எழுதிவிட்டார். படமாக்குவதற்கு முன் இயக்குநர் மனதுக்குள் ஓட்டிப் பார்த்த சினிமாவுக்குள் பானுமதிதான் இருந்திருக்கிறார். பானுமதி இருந்தால் அந்தப் படம் திரைக்காவியம் ஆகிவிடும் என்று நம்பியிருக்கிறார்.


அதற்காக லிங்கமூர்த்தி என்பவரை பானுமதியின் வீட்டுக்கு அனுப்பினார். லிங்கமூர்த்தியை வெறுங்கையுடன் அனுப்பிவைத்தார்கள் பானுமதியும் ராமகிருஷ்ணாவும். மதராஸில் இருந்தால்தானே இதுபோன்ற தொல்லைகள். என்று இருவரும் அன்றிரவு முடிவெடுத்தனர். அதுவரை தனது வாழ்க்கையைப் பகிர்ந்திருந்த பானுமதி தொடர்ந்தார்...
“மறுநாள் காலை எனது மாமியார், அவரது அக்காவின் குழந்தைகள் சகிதம் வந்து எங்கள் வீட்டின் கதவைத் தட்டுவார் என்று நான் கனவிலும் எதிர்பார்க்கவேயில்லை. எங்கள் திருமணத்தில் பங்குபெற முடியாமல் போனவர்கள் குடும்பமாக வந்திருப்பதைப் பார்த்து எனக்குச் சந்தோஷமாக இருந்தது.

வீடே கலகலப்பாகிவிட்டது. பெரிய மாமியாரின் வீடு திருவல்லிக்கேணியில் இருந்தது. நாங்கள் எல்லோரும் அவர் வீட்டில் ஒருவாரம் தங்கி வருவோம் என்று புறப்பட்டுப் போனோம். பெரிய மாமியார், அவர் வீட்டிலிருந்த நகைகளை எல்லாம் எனக்கு அணிவித்து அழகு பார்த்தார் ‘இந்த அலங்காரத்தோடு உன்னை ஏதோ ஒரு சினிமாவில் பார்த்திருக்கிறேனே!’ என்றார் என் கணவரின் அத்தை. ‘கிருஷ்ண பிரேமா’ என்று சொல்லிவிட்டுத் தலையைக் குனிந்துகொண்டேன்.

சமையல் செய்வதற்கா?

‘சினிமாவில் நீ போட்டிருந்த தெல்லாம் நிஜமான நகைகளா, கவரிங்கா? சொல்லேன்’ என்று கேட்டார். ‘சினிமா என்ற வார்த்தை காதில் விழுந்ததுமே என் கணவர் எரிச்சலுடன் ‘பெத்தம்மா இதையெல்லாம் ஏன் கேட்கிறீர்கள்?’ என்றார். ‘அவனுக்கு சினிமா என்ற வார்த்தையைக் கேட்டாலே கோபம் வந்துவிடும்’ என்றார் என் மாமியார்.
‘இத பார்றா.. ஏன் கேட்கக் கூடாது? நீயும் சினிமாவில் தானே வேலை பார்க்கற. சினிமா என்றால் கேவலமா? எப்பேர்பட்ட கலை அது! உனக்குத் தெரியுமா. உன் மனைவி பாடுவதைக் கேட்டு நான் என்ன வேண்டுமானாலும் தருவேன்! மருமகளே வா. எங்களுக்காக ஒரு பாட்டுப் பாடு’ என்றார் அத்தை. எல்லோரும் அவர் சொன்னதை கோரஸாக ஆமோதித்தார்கள்.

‘பெத்தம்மா, சினிமா என்ற ரகளையிலிருந்து தப்பிச்சுதான் இங்கே வந்தோம். நீங்க என்னடான்னா அதே பல்லவியைப் பாடறீங்க’ என்று சொல்லிவிட்டு என்னைப் பார்த்து ‘உன் அலங்காரத்தை எல்லாம் கழற்றி வச்சுட்டு வா போகலாம்’ என்றார். ‘சரியாப் போச்சு. இவ சினிமாவில் நடிக்கலேன்னா இவளோட தெய்விகக் குரலை மக்கள் எப்படித்தான் கேட்பாங்க?’ அத்தைக்கு சங்கீதம் என்றால் உயிர். அவர் கேள்விக்கு என் கணவரால் பதில் சொல்ல முடியவில்லை.
பெரிய மாமியார் கத்தியே விட்டார்! ‘ராமு! என்னடா இது? இவளோட அப்பா எவ்வளவு கஷ்டப்பட்டு இவளுக்கு சங்கீதம் கத்துக் கொடுத்திருப்பார். நன்றாகப் பாடுகிறாள். நடிக்கிறாள். இதில உனக்கென்ன நஷ்டம்னு கேக்கறேன்’ என்று கடுங்குரலில் கேட்டார். ‘பெத்தம்மா! சினிமாவில் எவ்வளவோ படுகுழிகள்... அதெல்லாம் உங்களுக்குத் தெரியாது!’ என்று சமாளித்தார் கணவர்.

‘இதெல்லாம் நீ எனக்குச் சொல்ல வேண்டாம். சங்கீதம்கறது சரஸ்வதி கடாட்சம்டா.. எவ்வளவு காசு கொடுத்தாலும் வராது. பூர்வஜன்ம பூஜா பலன் இருந்தால்தான் வரும். எம்.எஸ்., டி.கே.பட்டம்மாள் பாடல்களைக் கேட்கிறேதானே.. தப்பு பண்ணிட்டேடா.. சினிமா நட்சத்திரங்கள் பத்தி வதந்திகள் எவ்வளவோ வரத்தான் செய்யும். இவளோட அப்பா இவளை எப்படிக் கண்டிப்பாக வளர்த்தார்னு கேள்விப்பட்டிருக்கேன். இவ பாடற பாட்டு மக்களைச் சந்தோஷப்படுத்தும். இதைக் கெடுத்தா அது பாவம்டா. அவளை சமையல்காரியாகவே வைத்திருக்கலாம்னு எண்ணமோ?’ எனக் கேட்டார். கணவரிடம் பதில் இல்லை.

வீடு புகுந்த நண்பர்கள்

என் கணவர் மீது மாமியார் இருவரும் தங்கள் கருத்துகளைக் கொட்டி அனுப்பி வைத்தார்கள். போதாக்குறைக்கு ராமகிருஷ்ணாவின் தங்கைகளும் பிடித்துக்கொண்டார்கள். என் கணவர் முகத்தில் ஏதோ சிந்தனைச் சுருக்கங்கள். டாக்ஸியில் வீடு திரும்பும்போது நாங்கள் ஏதும் பேசிக்கொள்ளவில்லை. டாக்சி வீட்டருகே நின்ற அதேநேரம் எங்களுக்கு முன்னால் வீட்டு வாசலில் ஒரு கார் நின்றது. அதிலிருந்து லிங்கமூர்த்தி அண்ணா, சமுத்ராலு ராகவாச்சாரி, பி.என்.ரெட்டி எல்லோரும் இறங்கிக்கொண்டிருந்தார்கள். வீட்டுக்குள் திபுதிபுவென்று நுழைந்த நண்பர்களை ராமகிருஷ்ணாவால் தடுக்க முடியவில்லை. பேச்சு எங்கெல்லாமோ சுற்றிக் கடைசியில் என்னிடம் திரும்பியது.

குறும்பை குறைக்கச் சொல்!

‘பிரதர் நீ முடியாதுன்னு சொல்லிடாதே. இந்தப் பெண்ணுக்கு எந்த விஷயத்திலும் மரியாதைக் குறைவு ஏற்படாமல் கண்ணியமாக நடத்த நான் உத்தரவாதம். எங்க மகளாச்சே அவள். குறும்பு மட்டும் கொஞ்சம் பண்ண வேணாம்னு சொல்லி வையுங்க’ என்றார் பி.என்.ரெட்டி. (அப்போதே படப்பிடிப்புத் தளத்தில் நான் செய்யும் குறும்புகள் பிரசித்தம்)
என் கணவர் என்னைப் பார்த்து ‘என்ன சொல்றே?’ என்றார். ‘உங்க இஷ்டம் எதுவோ அதுவேதான்’ என்றேன். ‘எல்லோரும் சொல்கிறீர்கள். கேட்டுக்கறேன். ஆனால், படப்பிடிப்பைச் சீக்கிரம் முடிச்சுக்கணும்’ என்றார். உகாதி புதுவருடப் பிறப்பு அன்று ‘சுவர்க்க சீமா’ பட வேலைகள் தொடங்கின. வாஹினி ஸ்டுடியோவுக்குள் மீண்டும் காலடி வைத்தேன். எங்கிருந்தோ தபேலா ஒலித்தது. ஹார்மோனியம் ரீங்கரித்தது.

திரையுலகில் நீண்ட நாட்களுக்குப் பிறகு நுழைந்த என்னை பாடல் ஒன்று பாடச் சொல்லி பதிவு செய்யப்பட்டது. மாலை வீடு திரும்பும்போது என் கணவர் சொன்னார். ‘ராணி உன் குரல் ரொம்ப இனிமை. பாட்டும் ரம்மியமாக இருந்தது’. என் கணவரின் வாயால் பாராட்டுக் கிடைத்ததில் எனக்கு ரொம்பப் பெருமை.

வீடுதேடி வந்த தாசில்தார்

மறுநாள் நான் நடிக்கத் தொடங்கிவிட்டதைக் கேள்விப்பட்டு எங்கள் வீட்டுக்கு ஒய்.வி.ராவ் வந்தார். அவர் அப்போது ‘தாசில்தார்’ என்ற படத்தைத் தயாரித்துக் கொண்டிருந்தார். ஒய்.வி.ராவ் என் கணவர் வழியிலும் அப்பா வழியிலும் என் சொந்தக்காரர்தான். அவர் படத்தில் நான் நடிக்க வேண்டுமென்று ஒற்றைக்காலில் நின்றார். ‘சுவர்க்க சீமா’வில் மட்டும்தான் நடிப்பேன். வேறு படங்களில் நடிப்பதாக இல்லை என்னைத் தொந்தரவு செய்யாதீர்கள்.

எனக்குப் பிடிக்கலை’ என்றேன். அவர் நான் சொல்வதைக் காதில் போட்டுக் கொண்டால்தானே?
‘சுவர்க்க சீமா’வை தயாரித்து முடிப்பதற்கு முன்னதாகவே ‘தாசில்தார்’ படத்தை தயாரித்து முடித்து ரிலீஸ் செய்வதாகச் சவால் விட்டார். தாசில்தாரின் மனைவி ஒரு அப்பாவிப் பெண். இப்போது நீ இருக்கும் இதே உடை, உருவத்துடன் வந்து நடித்துக் கொடுத்தால் போதும் என்றார். எனக்குச் சிரிப்புதான் வந்தது. என் கணவரும் வேறு வழியின்றி ஒப்புக்கொண்டார்.

‘சுவர்க்க சீமா’ படப்பிடிப்பு வேலைகள் நடந்து கொண்டிருந்தன. ஒரு நாள் ‘ப்ளட் அண்டு ஸான்ட்’ படத்தைப் பார்க்க படக் குழுவினரோடு சென்றேன். அதில் ரீட்டா ஹேவொர்த்தின் நடிப்பு என்னைக் கவர்ந்தது. அவர் பாடிய பாடலின் மெட்டு அப்படியே என் மனசுக்குள் ஒட்டிக்கொண்டது. ‘சுவர்க்க சீமா’வில் சுஜாதா என்ற நவநாகரிகப் பெண்ணாக நடித்தேன். அதில் சுஜாதா பாடும் ரஜனி காந்தாராவ் இயற்றிய ‘ஓ...ஹோ...ஹோ..பாவு ரமா’ என்ற பாடலுக்கு இசையமைப்பு நடந்துகொண்டிருந்தது. நான் ரீட்டா ஹேவொர்த்தின் ஸ்பானிஷ் பாடல் மெட்டில் அதைப் பாடிக் காண்பித்தேன்.

இந்தப் பாடல் என் குரலில் பதிவுசெய்யப்பட்டபோது சி.ஆர்.சுப்பராமன், படத் தயாரிப்பாளர்கள் எல்லோரும் அதைக் கேட்டு ரசித்தார்கள். அது மிகப் பெரிய ஹிட் ஆகும் என்று சொன்னார்கள். அப்படியே நடந்தது.
அந்தப் படத்தில் ஒரு தெரு நாடகம். அதில் பாட ஒரு இளைஞரை அழைத்து வந்தார்கள். பாடுவதற்கு ரொம்பவும் கூச்சப்பட்ட அவரைப் பாடவைக்க நானே பாடிக்காட்டி உற்சாகப்படுத்தினேன். அவர்தான் பின்னாளில் பாடகராகவும், இசையமைப்பாளராகவும் புகழ் பெற்ற கண்டசாலா.” என்று பானுமதி நிறுத்தினார். நான் ஆச்சரியப்பட்டு ‘அடடே!’ என்றேன். இந்த மாதிரி நிறைய அடடேக்கள் எனக்காகக் காத்திருப்பதை அறியாமல்!.

(தாரகை ஒளிரும்)
தொடர்புக்கு:-
thanjavurkavirayar@gmail.com
படங்கள் உதவி: ஞானம்

தரைக்கு வந்த தாரகைபானுமதிசமையல்நண்பர்கள்குறும்புதாசில்தார்சினிமா

You May Like

More From This Category

More From this Author