மீண்டும் ஓர் உண்மைக் கதை! - சுசீந்திரன் பேட்டி

மீண்டும் ஓர் உண்மைக் கதை! - சுசீந்திரன் பேட்டி
Updated on
3 min read

கா.இசக்கிமுத்து

பெரும்பாலும் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து எழுதும் திரைக்கதையைப் படமாக்கிக் கவனிக்கவைப்பவர் இயக்குநர் சுசீந்திரன். ‘வெண்ணிலா கபடிக்குழு’ வழியாக அறிமுகமான இவர், கிரிக்கெட் விளையாட்டில் புரையோடிக் கிடக்கும் கார்ப்பரேட் சாதி அரசியலை ‘ஜீவா’ படத்தின் மூலம் அழுத்தமாகச் சொன்னார். தற்போது கபடி விளையாட்டை மையப்படுத்தி ‘கென்னடி கிளப்’ படத்தை இயக்கி, தயாரித்திருக்கிறார். அவரிடம் உரையாடியதிலிருந்து..

‘கென்னடி கிளப்' உருவான கதையைக் கூறுங்கள்..

தமிழ்நாட்டில் 'வெண்ணிலா கபடி குழு', 'லெட்சுமி மில்ஸ்', 'கென்னடி கிளப்' ஆகியவை பல ஆண்டுகளாக இருக்கும் கபடி குழுக்கள்.. 'கென்னடி கிளப்' குழுவில் என் அப்பா ஏதாவது ஒரு பதவியில் இருந்துகொண்டே இருப்பார். இந்திய அணிக்காக விளையாடிய முருகானந்தம் இந்த கிளப் வீரர்தான். பல வருடங்களாகவே ‘கென்னடி கிளப்’பை முன்னிலைப்படுத்தி ஒரு படம் பண்ணனும் என்று அப்பா சொல்லிக்கொண்டே இருந்தார். பெண்கள் கபடி விளையாடி ஜெயிக்கிறார்கள் என்று சொல்லிவிட முடியாது. அதற்குள் வலுவான ஒரு கதையிருக்கணும் என்று அவரிடம் சொன்னேன். 2017-ல் ஓர் உண்மைச் சம்பவம் இந்த அணிக்குள் நடந்தது.

அதை எடுத்துக்கொள்வோம் என்று முடிவு பண்ணி இயக்கியிருக்கிறேன். வறுமையை எப்படி ஜெயிக்கிறார்கள், என்ன மாதிரியான அரசியலைச் சந்திக்கிறார்கள் என்று நிலைகளில் அணி எதிர்கொள்ளும் அனைத்தையுமே சொல்லியிருக்கேன். முக்கியமா இந்த விளையாட்டு காணாமல் போய்விடக் கூடாது என்பதையும் பதிவு பண்ணியிருக்கேன்.

கபடி விளையாட்டைப் பற்றிய உங்கள் பார்வை என்ன?

கபடி மீது தீராத காதல் இருந்தால் மட்டுமே விளையாட முடியும். அந்த விளையாட்டு வீரர்களிடம் பேசும்போதுதான் தெரிந்தது அவர்களுடைய குடும்பத்தில் யாராவது ஒருவர் கபடி வீரராக இருந்திருக்கிறார்கள். அதனால்தான் அவர்களுக்கு ஆர்வம் வந்திருக்கிறது. ஜல்லிக்கட்டு எப்படி நமது மண்ணின் விளையாட்டு என்று நினைக்கிறோமோ, அப்படித்தான் கபடியை இன்னும் கிராமங்களில் இந்த மண்ணின் விளையாட்டு என நினைக்கிறார்கள்.
இந்தியாவில் கபடி விளையாடும் வீரர்களில் 99% பேர் வறுமைக்கோட்டுக்குக் கீழே இருப்பவர்களே.

வசதியானவர்கள் யாருமே கபடி விளையாடுவது கிடையாது. ஏனென்றால், கோடு போட்டு விளையாடத் தொடங்கிவிடலாம். அது மட்டுமன்றி, பயங்கரமாக அடிப்பட வாய்ப்பிருக்கிறது. கலைஞனுக்கு எப்படி அவமானமோ, அப்படித்தான் விளையாட்டு வீரர்களுக்கு அடிபடுவது. அதையெல்லாம் தாங்கித்தான் விளையாடுகிறார்கள். தமிழ்நாட்டில் உருவான பராம்பரியமான விளையாட்டு கபடி. கிட்டத்தட்ட 32 நாடுகளில் தற்போது கபடி விளையாடுகிறார்கள்.

கபடி விளையாடும் காட்சிகளைப் படமாக்குவது எளிதாக இருந்ததா?

‘வெண்ணிலா கபடி குழு’ படத்துக்காக சினிமா மாதிரியே படப்பிடிப்பு நடத்தினோம். இந்தப் படத்தைப் பொறுத்தவரை கேமராவைக் கபடி விளையாடும் இடத்துக்குள்ளேயே கொண்டுபோகவில்லை. எங்கெல்லாம் உட்கார்ந்து கபடி விளையாட்டை ரசிப்பார்களோ, அங்கெல்லாம் கேமரா வைத்து ஷூட் செய்திருக்கிறோம். ஒரு நிஜமான கபடி விளையாட்டைப் பார்க்கிற எண்ணம்தான் வரும். உண்மையான கபடியை விளையாடுங்கள், இது சினிமா கிடையாது என்று புரியவைத்து ஷூட் செய்தோம். ‘தங்கல்', 'லகான்' போன்ற படங்கள்போல நம் மண்ணின் விளையாட்டை 'கென்னடி கிளப்' படமாகப் பதிவு பண்ணியிருக்கேன். நிஜ கபடி வீரர்களே நடித்திருப்பதால் விளையாட்டின் நேர்த்தியும் தொழில்நுட்பமும் வெளிப்பட்டிருக்கின்றன.

பாரதிராஜா – சசிகுமார் இருவரையும் இயக்கிய அனுபவம் எப்படியிருந்தது?

பாரதிராஜா அப்பாவுக்கு பெரிய இயக்குநருக்கான மரியாதையைக் கொடுத்துக்கொண்டே இருப்பேன். ஆனால், ஓர் இயக்குநராக அவரிடம் என்ன தேவையோ அதை வாங்கிவிடுவேன். அதில் சமரசம் செய்துகொள்ள மாட்டேன். இப்பவும் அடுத்த நாள் காட்சிக்கான வசனத்தை முந்தைய நாளே கேட்பார். வசனத்தை முழுமையாகப் படித்து உள்வாங்கி, ஒரே டேக்கில் நடித்துவிடுவார். சினிமா மீது அவர் வைத்திருக்கும் பிரியம், நேரம் தவறாமை எல்லாம் ரொம்பவே பிரமிப்பாக இருக்கும்.

அற்புதமான நடிகர், இயக்குநர். அவருடைய பலவீனத்தை அவரே வெளிப்படையாகச் சொல்வார். நான் கொஞ்சம் ஓவர் ஆக்ட் பண்ணிட்டேன் டா என்று ஒப்புக்கொள்வார்.
இயக்குநருடைய எமோஷனைச் சரியாகப் புரிந்து கொள்வார் சசிகுமார். ஹீரோவோட பணிபுரிகிறோம் என்ற எண்ணமே அவருடன் இல்லை. விஷ்ணு விஷாலுடன் பணிபுரியும்போது ரொம்பவே ரிலாக்ஸாக இருப்பேன். ஏனென்றால், அவன் என் பையன் மாதிரி, நான் சொல்வதைக் கேட்பான். அந்தவொரு சுதந்திரத்தை சசிகுமார் கொடுத்தார்.

ஒரே நேரத்தில் ‘ஏஞ்சலினா', ‘சாம்பியன்', ‘கென்னடி கிளப்' எனப் பணிபுரிந்தது கடினமாக இல்லையா?

‘ஏஞ்சலினா' படத்தை எட்டு மாதங்களுக்கு முன்பே முடித்துவிட்டோம். 'சாம்பியன்' படத்தின் காட்சிகள் அனைத்தும் படம்பிடிக்கப்பட்டு இரண்டு பாடல்கள் மட்டும் பாக்கியுள்ளன. நிதிப் பிரச்சினை சரியாகி விரைவில் அந்தப் படத்தை முடிப்பேன். ஒரே நேரத்தில் பல படங்களில் பணிபுரிவது கஷ்டமான விஷயம்தான். தொடர்ச்சியாக இரண்டு படங்களில் பணிபுரிய மாட்டேன். இடையே ஒரு குட்டி இடைவெளி விட்டுவிடுவேன். அப்போதுதான் புத்துணர்ச்சியாக இருக்கும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in