

ஜெயந்தன்
பன்முகத் திறன்களின் அடையாளமாகத் தன்னைத் தக்க வைத்துக் கொண்டவர் ரேவதி. நடிகர், இயக்குநர், நடனக் கலைஞர், செயற் பாட்டாளரான ரேவதி, தற்போது திரையில் அம்மா, டாக்டர், போராளி போன்ற கதாபாத்திரங்களுக்கு அப்பால் நகைச்சுவை வேடங்களை ஏற்கத் தொடங்கியிருக்கிறார். அவருடன் உரையாடியதிலிருந்து ஒரு பகுதி…
நடிக்க வந்த இரண்டாம் வருடத்திலேயே ‘புதுமைப் பெண்’ படத்தில் நடித்ததை இப்போது நினைத்துப் பார்ப்பதுண்டா?
அந்தப் படத்தில் நடித்தபோது எனக்குப் பதினேழு வயது. அந்தக் கதையில் நடிக்கிற அளவுக்கு அன்றைக்கு எனக்கு வயதும் இல்லை; வாழ்க்கை அனுபவமும் இல்லை. நான் 20 ஆண்டுகளுக்குப் பின் நடித்திருக்க வேண்டிய படம் அது. பாரதிராஜா நடித்துக் காட்டியதை திரும்ப நடித்தது நன்றாக நினைவில் இருக்கிறது. எனக்கென்று சிந்தனை ஏதுமில்லாத சிறிய வயதில் நடித்த அந்தப் படத்தை அசலான பெண்ணியப் படம் என்பேன்.
நான் சினிமாவில் நுழைந்த நேரத்தில் எனக்குக் கிடைத்த முதல் பத்துப் பன்னிரண்டு படங்கள் எனது அதிர்ஷ்டம். அவையே தமிழ் சினிமாவில் திடமான அஸ்திவாரத்தை எனக்குப் போட்டுக்கொடுத்தன. தொடக்கத்திலேயே பாரதிராஜா, மகேந்திரன், மணிரத்னம் எனச் சாதனை படைத்தவர்களின் படைப்புகளில் எனக்கு இடம் கிடைத்தது. என்னை நடிக்க வைத்த ஒவ்வொரு பெரிய இயக்குநருமே தங்களுக்கென்று ஒரு பாணியைக் கொண்டவர்கள். அவர்களிடம் பயின்றதால்தான் பின்னால் இயக்குநராகவும் பரிமாணம் அடைய முடிந்தது. எனக்கானதைத் திரை உலகில் என்னால் செய்ய முடிந்தது. அந்த வகையில் தமிழ் சினிமா எனக்குக் கொடுத்தது நிறையதான்.
பெண் மையப் படங்கள் பெருகியிருக்கும் காலம் இது. இவற்றைப் பலர் பெண்ணிய சினிமா என்று பிரச்சாரம் செய்வதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
என்னைப் பொறுத்தவரை பெண்ணிய சினிமா என்பது ஒரு கற்பனை. ஒரு பெண் மையக் கதாபாத்திரத்தைக் கொண்ட படத்தில் சில பெண்ணியக் கருத்துக்கள் இடம்பெறுவதால் அதைப் பெண்ணிய சினிமா என்று சொல்ல முடியாது. அதேபோல நாயகனுக்கான எல்லா சினிமா குணங்களையும் ஒரு பெண் கதாபாத்திரத்தில் ஏற்றிக் கூறுவது ரசிக்கத்தக்க பொழுதுபோக்குப் படமாக இருக்கலாம்; அவ்வளவுதான். பெண்களை இந்த அளவிலாவது இன்றைய இந்திய சினிமா பொருட்படுத்துகிறதே என்று அதிகபட்சமாக சந்தோஷப்பட்டுக்கொள்வோம்.
ரேவதி என்றாலே தீவிரத் தன்மை கொண்ட கதாபாத்திரங்களில் வந்து முத்திரை பதிப்பார் என்று பதிவாகியிருக்கிறது. ஆனால் ‘பவர் பாண்டி’, ‘குலேபகாவலி’ இப்போது ‘ஜாக்பாட்’ என்று நகைச்சுவைக் கதாபாத்திரங்களுக்கு மடைமாறி இருக்கிறீர்களே?
இது திடீரென்று நடந்ததுபோல் தோன்றும். ஆனால் ‘அரங்கேற்ற வேளை’ படத்திலேயே நகைச்சுவை நடிப்புக்கான சவால் தொடங்கிவிட்டது. சீரியஸ் கதாபாத்திரங்கள் என் மீது சுமத்தப்பட்டதற்கு நீங்கள் கூறியதுபோல் ‘புதுமைப்பெண்’ படம் போட்டுத்தந்த பாதையும் ஒரு காரணம். ஆனால் இயல்பில் நடனத்தையும் நகைச்சுவை உணர்வையும் அதிகமும் நேசிப்பவள் நான். என்னிடம் சேமிக்கப்பட்ட நகைச்சுவை உணர்வு இருப்பதைக் கண்டுபிடித்தவர் இயக்குநர் கல்யாண்தான்.
சிறந்த நகைச்சுவை என்பது வார்த்தையாலோ உடல்மொழியாலோ யாரையும் துன்புறுத்துவதாக இருக்கக் கூடாது. இயக்குநர் கல்யாண் இதில் அக்கறையுடன் எழுதுபவராக இருக்கிறார். ‘அரங்கேற்ற வேளை’ படத்தில் நான் ஏற்ற மாஷாவின் தொடர்ச்சியாகத்தான் ‘குலேபகாவலி’ படத்தில் அவர் என்னைச் சித்தரித்திருந்தார். தனக்கு என்ன வேண்டும் என்பதிலும் தனது கதாபாத்திரங்களை எத்தகைய சூழ்நிலைகளில் நிறுத்தவேண்டும் என்பதிலும் இயக்குநர் கல்யாண் மிகத் தெளிவானவர்.
அதனால்தான் அவர் கேட்டதுமே ‘ஜாக்பாட்’ படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன். மற்றொரு முக்கியமான காரணம்; ஜோதிகாவும் படத்தைத் தயாரிக்கும் அவரது கணவர் சூர்யாவும். இருவரையுமே எனக்கு மிகவும் பிடிக்கும். கமல் சார் எப்படிக் கதாபாத்திரமாகவும் கதாநாயகனாகவும் தொடர்ந்து நடித்து வந்திருக்கிறாரோ அப்படித்தான் சூர்யாவும் தன்னை நல்ல நடிகனாகவும் தக்க வைத்துக்கொண்டிருக்கிறார். இவர்களுடைய கூட்டணியில் உருவாகும் படத்தில் துளியும் தீங்கிருக்காது என்பது என் நம்பிக்கை. அதை ‘ஜாக்பாட்’ படத்தில் உணர்ந்தேன்.
படத்தில் உங்களுக்கும் ஜோதிகா வுக்கும் நடிப்பில் போட்டி இருந்ததா?
நடிப்பில் வேறுபாடு இருந்தது என்று சொல்வேன். நானும் சரி, ஜோதிகாவும் சரி யதார்த்தமாக நடிக்கவே விரும்புவோம். ஆனால் நகைச்சுவை நடிப்பு என்று வருகிறபோது அது இயக்குநர் எதிர்பார்க்கும் வேறொன்றாக இருக்கிறது. ‘ஜாக்பாட்’ படத்தில் எங்கள் இருவரையுமே கொண்டாட்டமான வேறொரு நடிப்புக்குள் இழுத்துவிட்டிருக்கிறார் இயக்குநர். படம் பார்க்கும்போது அதை உணரமுடியும்.
‘மீ டூ’ ஒரு இயக்கமாக வெடித்த நேரத்தில் நீங்கள் அதற்கு ஆதரவாக ஒரு வார்த்தைகூட பேசவில்லையே?
சினிமாவில் பணியாற்றும் எல்லாப் பெண்களின் பாதுகாப்பு, உரிமைகளுக்காகவும் தொடங்கப்பட்ட ‘டபுள்யூ.சி.சி’ (Women in Cinema Collective) அமைப்பை நிறுவிய சிலரில் நானும் ஒருத்தி என்பதை மறந்துவிட்டீர்களா? அதன் கிளையைத் தமிழ் சினிமாவிலும் செயல்படுத்த இங்கே யாரும் ஆர்வம் காட்டவில்லை. ‘மீ டூ’ தீவிரமாக வெடித்தபோது அது பற்றி சமூக வலைத்தளங்களிலோ அறிக்கையாவோ எதையும் கூறாமல், அமைதியாக கவனிப்போம் என்று எங்கள் அமைப்பில் ஒருமனதாக முடிவெடுத்தோம். அதை நானே எப்படி மீறமுடியும்?