

எஸ்.எஸ்.லெனின்
திரையரங்குகளுக்கு எனத் தயாராகும் சினிமாக்கள் நடைமுறைச் சிக்கல்களால் இணையத்தில் வெளியாகும் வழக்கத்திலிருந்து மாறுபட்டு, நேரடியாக இணையத்தில் வெளியாவதற்கு என்றே தயாராகி உள்ளது ‘இஃக்லூ’ திரைப்படம். ஜூலை மத்தியில் ‘ஜீ5’ தனது தமிழ் ஒரிஜினல் வரிசையில் இந்த இணையத் திரைப்படத்தை வெளியிட்டுள்ளது.
குளிர் படர்ந்த கோத்தகிரியில் கதை தொடங்குகிறது. அம்மா வாசனையின்றி வளரும் இரட்டைச் சிறுமியர்; அவர்களை வளர்க்கும் அப்பா ஆகியோரை முன்வைத்துக் கதை நகர்கிறது. இரட்டையரில் சூட்டிகையான மூத்தவள் தனது அம்மா குறித்த கிடுக்கிப்பிடி கேள்விகளை முதல்முறையாக அப்பாவிடம் வீசுகிறாள். அதற்கு அந்த அப்பாவிடம் பதில் இல்லை. அடுத்த நாளே எதிர்பாரா விதமாக அந்தச் சிறுமி விபத்தில் படுகாயமடைந்து கோமாவில் விழுகிறாள்.
“சிறுமி நினைவு திரும்ப வேண்டுமானால் அவளுக்கு விருப்பமானதை அவள் காதோரம்பேசிக்கொண்டே இருங்கள்” என்று மருத்துவர் அறிவுறுத்துகிறார். அதனையடுத்து, அதுவரை மறைத்திருந்த சிறுமிகளின் தாயும் தன் காதல் மனைவியுமான, அவர்கள் மத்தியில் இல்லாத அந்தப் பெண்ணின் விவரங்களுடன் தனது முன்வாழ்க்கையைச் சொல்லத் தொடங்குகிறார் அப்பா. அது சிவா-ரம்யா என்ற துடிப்பான காதலர்களின் பிளாஷ் பேக் கதையாக நமக்கு விரிகிறது.
ஊடலும் உரசலுமான இளஞ்சிட்டுகளின் காதல், அவர்களுக்கு முட்டுக்கட்டை போடும் பெண்ணின் தந்தை, முறுக்கிக்கொள்ளும் காதலன், இருதரப்புக்கும் இடையே தவிக்கும் காதலி எனப் பார்த்து சலித்த பாதையில் பிளாஷ்பேக் செல்கிறது. என்றாலும், அவற்றைச் சற்று வித்தியாசமாகக் கொடுக்க முயன்றதில் கதைக்குள் ஒன்ற வைக்கிறார்கள். அதிலும், இனிய தொடக்கமாக அமைய வேண்டிய மணவாழ்க்கை, மணமக்களில் ஒருவரின் இறுதி பயணத்தை நோக்கி அடியெடுப்பதுமாக அதிரவைப்பதில் திரைப்படம் இன்னொரு தளத்தில் பயணிக்கத் தொடங்குகிறது.
கேலிப்பொருளாகும் அளவுக்குத் திரைப்படங்களில் அடித்துத் துவைக்கப்பட்ட கேன்சர் நோயை ‘இஃக்லூ’வில் சற்றுப் பரிவுடன் அணுகி இருக்கிறார்கள். புற்றுநோய் பாதித்தவர்களின் உடல்நலப் பாதிப்புகளுக்கு அப்பால், சிக்கலான மனவெழுச்சி ஊசலாட்டத்தையும் கூர்மையாகப் பதிவுசெய்திருக்கிறார்கள். புற்று நோயாளிகளை அவர்களின் குடும்பத்தார் எதிர்கொள்வதில் அவசியமான நுணுக்க அம்சங்களையும் ஒருவாறாக அணுக முயன்றிருக்கிறார்கள். அந்தவகையில் புற்றுநோய் குறித்த சலிப்பான பொதுப்பார்வையை சற்று மாற்றவும் ‘இஃக்லூ’ முயன்றிருக்கிறது.
புற்றுநோயின் பிடியில் சிக்கியவர் இறுதி காலத்தை எதிர்கொள்ளும் காட்சிகள் இழுவையாக இருந்தாலும் தவிர்க்க முடியாதவையாக கடந்துசெல்கின்றன. புற்றுநோயாளியின் ரத்த வாந்தியின் அளவைச் சற்றுக் குறைத்திருக்கலாம். ‘இஃக்லூ’ படத் தலைப்பை விளக்க முற்பட்டிருப்பதும் பட நீளத்தைக் குறைக்கும் முயற்சியில் சில காட்சிகளைத் துண்டாடி இருப்பதும் துருத்தலாக நிற்கின்றன. சாவின் விளிம்பிலிருக்கும் தாய் உற்றுப் பார்த்ததும் பதில்வினையாற்றும் குழந்தையின் தொப்புள்கொடி ஈர்ப்பை படத்தின் இறுதியில் மீண்டும் பயன்படுத்தி இருப்பது சிறப்பு. நெஞ்சுருகி கண்ணீர் உகுக்கச் செய்யும் காட்சிகள் நிறைந்திருந்தாலும் கதாபாத்திரங்களின் மிகையற்ற நடிப்பால் பிரதான காட்சிகளுக்குக் கனம் சேர்த்திருக்கிறார் இயக்குநர் பரத் மோகன்.
காதலர்களாக அறிமுகமாகி மணவாழ்வில் கைகோக்கும் ஜோடியாக வரும் அம்ஜத்கான், அஞ்சு குரியன் ஆகியோர் தங்கள் ஏற்றிருக்கும் ஆழமான கதாபாத்திரங்களின் சித்தரிப்புகளுக்கேற்ப சுவாரசியம் கூட்டுகிறார்கள். சாலை நடுவே சீறும் மனைவியை முத்தத்தில் ஆற்றுப்படுத்துவது, அவளுக்காக நள்ளிரவில் நடுக்கடல் பயணம் போவது, சாவின் விளிம்பில் தத்தளிப்பவள் முன்பாக உணர்வுகளை மென்றுவிழுங்குவது எனக் கலங்கடிக்கிறார் அம்ஜத்கான். காதலன் மீது பொங்கிப் பிரவகிக்கும் காதலுடன் தன் தந்தையை விட்டுக்கொடுக்காது பேசுவதிலும், புற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் மழிக்கப்பட்ட தலையுடன் புலம்புவதுமாக அஞ்சு குரியன் தனது சிக்கலான கதாபாத்திரத்தில் நெகிழ வைக்கிறார்.
குடும்ப உறவுகளில் தத்தம் நிலையிலிருந்து அடுத்தவரிடம் ஊடாடும் மனிதர்களின் உணர்வுப் பெருக்கைக் காட்சிகளாலும் வசனங்களாலும் தெளிவாக வடித்த வகையில் ‘இஃக்லூ’ ரசிக்க வைக்கிறது.
பட முன்னோட்டத்தைக் காண
இணையச் சுட்டி: :https://bit.ly/32YnnzM