கோடம்பாக்கம் சந்திப்பு: நீச்சல் பழகும் பார்த்திபன்

கோடம்பாக்கம் சந்திப்பு: நீச்சல் பழகும் பார்த்திபன்
Updated on
1 min read

நீச்சல் பழகும் பார்த்திபன்

மணிரத்னம் இயக்கத் தயாராகிவரும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் தானும் நடிக்க இருப்பதாக நடிகர், இயக்குநர் பார்த்திபன் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். ‘மணிரத்னம் படைப்பில், என் பங்களிப்பில், பெருங்களிப்பில் 'பொன்னியின் செல்வன்'. அப்படத்துக்காக ‘ஸ்பெல்லிங்’ மட்டுமே கற்றிருந்த நான் இப்போது ‘ஸ்விம்மிங்’ கற்கிறேன்!”  என்று குறிப்பிட்டுள்ளார். 

வலையடிச் சண்டை 

கடந்த ஒருவாரமாகவே அஜித், விஜய் ரசிகர்கள் என்று கூறிக்கொள்ளும் பலர்,  சமுக வலையைச் சண்டை வலையாக மாற்றி வருகிறார்கள். ‘ட்விட்டர் ஹேஷ்டேக்’குகள் மூலம் மோதிக்கொண்டிருக்கிறார்கள். இவர்கள் உற்பத்தி செய்யும் ஹேஷ்டேக்குகள் அகில இந்திய அளவில் கவன ஈர்ப்பாக மாறுவது  குறித்து திரையுலகப் பிரபலங்கள் பலரும் முகம் சுளித்து வருகிறார்கள். 
இந்நிலையில்,  இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான அஸ்வின் இதனைக் கடுமையாகச் சாடியிருந்தார். “முன்னணி நட்சத்திரங்களின் ரசிகர்கள் என்ற போர்வையில் முட்டாள்கள் விரும்பத்தகாத ஹேஷ்டேகை ட்ரெண்ட் செய்வது அருவருப்பாக இருக்கிறது” என்று விமர்சித்திருக்கிறார்.

சிறகு விரித்த காஜல்

தமிழில் 'கோமாளி', 'பாரீஸ் பாரீஸ்' , 'இந்தியன் 2' ஆகிய படங்களில் நடித்து வரும் காஜல் தெலுங்கிலும் நடிப்பைத் தொடர்ந்து வருகிறார். பாலிவுட் அவருக்குப் பெரிய அளவில் கைகொடுக்கவில்லை. இந்நிலையில் இந்தியத் தயாரிப்பாக உருவாகும் ஹாலிவுட் படம் ஒன்றில் ஆங்கிலம் பேசி நடிக்க இருக்கிறார் காஜல். தவிரத் தமிழ் இணையத் தொடர் ஒன்றில் நடிக்க ஒப்புக்கொண்டு தன் சிறகுகளை டிஜிட்டல் களத்திலும் விரித்திருக்கிறார். அந்தத் தொடரை இயக்க இருப்பவர் வெங்கட் பிரபு. 

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in