Published : 26 Jul 2019 11:06 AM
Last Updated : 26 Jul 2019 11:06 AM

புன்னகை எனது அடையாளம்!: ராஷ்மிகா பேட்டி

முத்து 

“ஒருவரைப் பிடித்துவிட்டால் அவருக்காகக் கோயில் கட்டும் ரசிகர்களும் இருக்கவே செய்கிறார்கள்.  என் அப்பா  குஷ்புவுக்குக் கோயில் கட்டியதைப் பற்றிச் சொல்லிக்கொண்டே இருப்பார். என்னால் இப்போதுவரை நம்ப முடியவில்லை. எனக்கும் கோயில் கட்டினால் நன்றாக இருக்குமே என்று நினைத்திருக்கிறேன்” என்று சிரிப்பையும் உற்சாகத்தையும் இழையோடவிட்டபடி நம்முடன் உரையாடினார்  ராஷ்மிகா மந்தனா. விரைவில் வெளியாகவிருக்கும் ‘டியர் காம்ரேட்’ படத்தின் மூலம்  தமிழ் ரசிகர்களைச் சந்திக்க வரும் அறிமுகக் கதாநாயகி.

கிர்க் பார்ட்டி’ படம் தொடங்கி, உங்கள் திரையுலக வாழ்க்கை எப்படிச் செல்கிறது?

நடிக்கத் தொடங்கியபோது மக்களுக்கு என் முகம் நினைவில் நிற்குமா என்பதுகூடத் தெரியாது. முயற்சி செய்யலாம் என்றுதான் சினிமா வாழ்க்கையைத் தொடங்கினேன். முதல் பட வெற்றிக்குப் பிறகு வரிசையாக வாய்ப்புகள் குவிகின்றன. விறுவிறுவென்று மேலே சென்று பின் உடனே வீழக் கூடாது. ஒவ்வொரு படத்தையும் கவனமாக ஒப்புக்கொண்டு அவற்றிலிருந்து கற்க முயல்கிறேன்.  ‘கிர்க் பார்ட்டி’ என்னை அறிமுகப்படுத்தியது. ‘கீத கோவிந்தம்’ என்னப் பிரபலப்படுத்தியது. ஒரே இரவில் நட்சத்திரமாக ஆகிவிட்டதாகவோ எல்லாம் அதிர்ஷ்டம் என்றோ நான் நினைக்கவில்லை.

ரசிகர்கள் உங்களிடம் எதிர்பார்ப்பதை நடிப்பில் தர முடிகிறதா? 

ரசிகர்கள் எதை ஏற்றுக்கொள்வார்கள், மாட்டார்கள் என்பதை இங்கு யூகிக்கவே முடியாது. பிரபலக் கதாநாயகன், குறிப்பிட்ட இயக்குநர் என்றெல்லாம் யோசிப்பதே இல்லை. சிலர் என்னால் அழ முடியாது என்றார்கள். அதை ‘டியர் காம்ரேட்’ படத்தில் மாற்றிக் காட்டியிருக்கிறேன். ஆனால், நிஜ வாழ்க்கையில் என்னைச் சோகமாகக் காணவே முடியாது. என்னுடையது சிரித்த முகம் என்று எல்லோரும் சொல்கிறார்கள். எப்போதும் புன்னகையை ஏந்திருப்பது நம்மை மட்டுமல்ல; நம்மைக் காண்பவர்களையும் மகிழ வைக்கும்.

தமிழில் விஜய்யுடன் ஒரு படம், தெலுங்கில் மகேஷ் பாபுவுடன் ஒரு படம் என முன்னணிக் கதாநாயகர்களுடன் கைகோத்திருப்பது எப்படி இருக்கிறது?

என்னால் முடியும் என்ற நம்பிக்கையில்தான் பெரிய நட்சத்திரங்களின் படங்களை ஒப்புக்கொள்கிறேன். எனக்குத் 
திறமை இருக்கிறது என நம்புகிறேன். நான் பிரபலம் என்பதை இன்னும் உணரவில்லை. இன்னும் ஒரு பத்து படங்கள் 
கழித்து அதை உணரலாம்.

பெண்ணியம் பற்றி உங்கள் பார்வை என்ன?
காட்சிப் பொருளாக இருக்கும் கதாநாயகி வேடம் எனக்கு என்றுமே பிடிக்காது. நான் அப்படி ஒரு கதாபாத்திரத்தைத் தேர்வுசெய்யவும் மாட்டேன். நான் பெண்ணியவாதிதான். பெண்களின் உரிமைக்காகக் 
குரல் கொடுப்பவள்தான். ஆனால், எல்லாக் கதையிலும் பெண்ணியம் இருக்க வேண்டும் என்றெல்லாம் 
பார்க்க மாட்டேன். எனக்குக் கதை நன்றாக இருக்க வேண்டும். அதில் ஏதாவது ஒரு அர்த்தமுள்ள விஷயத்தைச் சொல்ல வேண்டும், அவ்வளவுதான். நல்ல படங்களில் நடித்த பெருமை நமக்கிருந்தால்தான் நமக்காகப் படம் பார்ப்பவர்களுக்கும் பெருமைப்பட முடியும்.

தமிழில் கார்த்தியுடன் முதல் படம். அது பற்றி?

முதன்முறையாகத் தமிழ் 
சினிமாவில் நுழைகிறேன். இங்கும் என் இருப்பைப் பதிவுசெய்வதில் எனது கவனம் இருக்கும்.  இதுவரை மக்கள் 
என்னைப் பார்த்திராத ஒரு கதாபாத்திரம். அதில் நடிக்க விரும்பினேன். அது முன்னதாகவே எனக்குக் கிடைத்துவிட்டது.

படம்: பு. கா. பிரவீன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x