Published : 26 Jul 2019 10:57 AM
Last Updated : 26 Jul 2019 10:57 AM

ஈக்வடார் திரை விழா: காயத்தோடு மறைந்த மாயை!

சாதனா 

தென் அமெரிக்க நாடுகளான ஈக்வடாருக்கும் பெருவுக்கும் இடையில் 1941-ல் எல்லைப் போர் தொடங்குகிறது. இந்தப் போரில் தன்னுடைய நாட்டைக் காக்க ஈக்வடாரைச் சேர்ந்த இளைஞன் ஜார்ஜ் முன்வருகிறான். ராணுவ அனுபவம் தன்னைப் பண்பட்ட மனிதனாக்கும், சமூகத்தில் மரியாதை பெற்றுத்தரும் என்று நம்புகிறான். ஆனால், உண்மை அதற்கு நேர்மாறாக இருக்கிறது. சக ராணுவ வீரர்களால் ஜார்ஜ் மட்டம் தட்டப்படுகிறான்; உதாசீனப்படுத்தப்படுகிறான்.

மேலும், எதிரிகளிடம் சிக்கிக் காயப்பட்டு அவதிப்படுகிறான். வலி, வேதனை, பசியால் துடிக்கிறான். எதிரிகளின் ராணுவக் கூடாரத்தில் சிக்குண்டிருக்கும் அவனுக்கு இருக்கும் ஒரே ஆறுதல் அந்நாட்டுச் செவிலிப் பெண் ஒருத்தி மட்டுமே. ஒரு கட்டத்தில் எல்லைப் பாதுகாப்புப் பணி மீதான மாயை விலகி அங்கிருந்து தப்பிக்க முயலும் அவன் என்னவாகிறான் என்பதைக் காட்டுகிறது, ‘ஓபன் வூண்ட்’ (Open Wound) திரைப்படம்.

வளையத்துக்கு வெளியே நின்று வேடிக்கை பார்ப்பவர்களுக்குக் குத்துச்சண்டை ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ளும் முரட்டுத்தனமாக விளையாட்டாக மட்டுமே தோன்றலாம்.  ஆனால், அது வெறும் மூர்க்கத்தனமான விளையாட்டு அல்ல, ஒழுக்கமும் அர்ப்பணிப்பும் மனித உணர்வுகளும் கொப்பளிக்கும் ஆட்டம் என்பதை நான்கு கதாபாத்திரங்கள் வழியாகப் பேசுகிறது, ‘லா டோலா பாக்ஸ்’ (La Tola Box). இது உண்மையான குத்துச்சண்டை வீரர்களைப் பற்றிக் கதைவடிவில் உருவாக்கப்பட்ட ஆவணப்படமாகும்.

பொழுதுபோக்குத் திரைப்படங்களுக்கு இணையான வரவேற்பையும் பெருமதிப்பையும் தன் மக்களிடையே பெற்றிருக்கும் நாடுகளில் ஒன்று ஈக்வடார். இந்நாட்டின் சிறந்த படங்களைக் காட்டவிருக்கிறது, ‘ஈக்வடாரியன் திரை விழா’. ‘ஓபன் வூண்ட்’, ‘லா டோலா பாக்ஸ்’ படங்களுடன் ‘பிஃபோர் தி மூன் ரைசஸ்’ (Before the Moon Rises), ‘லகனடி’ (LLaganati) ஆகியவற்றை இண்டோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் திரைப்படச் சங்கம், இந்தியாவின் ஈக்வடார் தூதரகத்துடன் இணைந்து திரையிடவிருக்கிறது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அலையன்ஸ் பிரான்சைஸில் ஜூலை 29, 30 ஆகிய நாட்களின் மாலைப் பொழுதுகளில் இந்தப் படங்களைக் காணலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x