

ச.ச.சிவசங்கர்
அண்மைக் காலமாக பாரபட்சம் இன்றி இந்தியா முழுவதும் நடைபெற்று வரும் சமூகக் கொடுமை, சாதி ஆணவப் படுகொலைகள். அனைத்துத் தளங்களிலும் பேசும் பொருளாக மாறியிருக்கும் இந்தப் பேரவலத்தைத் தடுக்கச் சட்டம் இயற்றப்பட வேண்டும் எனக் குரல்கள் ஒலிக்கத் தொடங்கிவிட்டன. பாக்யராஜ் என்ற புதியவர் இயக்கியிருக்கும் ‘குல சாமி’ என்ற 20 நிமிடக் குறும்படம், சாதி ஆணவக் படுகொலையைக் கதைக் கருவாக்கி, அதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் கோணத்தில் ஈர்க்கிறது..
நிறைமாதக் கர்ப்பிணியான அந்தப் பெண், தன் கணவனின் படுகொலைக்குப் பின் வேறு ஊருக்கு சென்று வாழ்க்கையைத் தொடங்குகிறாள். காலம் விரைகிறது. வறுமையிலும் தன் மகனின் கல்வி பாதிக்கப்படாமல் பார்த்துக்கொண்ட அந்தத் தாய் திடீரென மரணிக்கிறாள். இதற்கிடையே அவள் வசிக்கும் ஊருக்குக் கோயில் வேண்டுமென கூடிய பஞ்சாயத்து, சாதிச் சிக்கலில் முடிகிறது.
மரணத்தில்கூட ஊரார் அவனுக்கு உதவ முன்வராத நிலையில் கண்ணீரோடு வெள்ளந்தியாக புழுதிக் காற்றுக்கு மத்தியில் தன் அம்மாவின் உடலைச் சுமந்து திரிகிறான் மகன். கோயில் கட்டும் விவகாரத்தில் சாமி சிலையை இரவுக்குள் ஊருக்குள் கொண்டுவர ஒரு தரப்பினர் முடிவெடுக்கிறார்கள். ஒருபக்கம் சாமி சிலையைத் தூக்கிக்கொண்டு ஊரார் செல்லும் காட்சித் துணுக்கும், மறுபக்கம், மகன் தன் அம்மாவின் உடலைச் சுமந்து செல்லும் காட்சித் துணுக்கும் மனிதபிமானத்தில் பார்க்க முடியாத கடவுளைச் சிலையில் பார்க்கும் முரணை முகத்திலறைந்து சொல்கிறது. சாமியைக் காரணம் காட்டி புறக்கணிக்கபட்ட அம்மாவுக்கு அந்தச் சாமியே இடமளிக்கும் திருப்பம் படத்தின் முத்தாய்ப்பு.
நடித்தவர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைவரது பங்களிப்பும் குறும்படத்தின் வடிவத்துக்கும் நேர்த்திக்கும் பொருள் சேர்த்திருக்கின்றன.