

எஸ்.எஸ்.லெனின்
நெட்ஃபிளிக்ஸ் அண்மையில் வெளியிட்ட மற்றுமொரு த்ரில்லர் இணையத் திரைப்படம் ‘மர்டர் மிஸ்டரி’.
நியூயார்க் போலீஸ்காரர் ஒருவர், தன் மனைவியுடன் ஐரோப்பிய உல்லாசப் பயணத் துக்குக் கிளம்புகிறார். 15-ம் ஆண்டின் திருமண நாளைக் கொண்டாடும் விதமாகக் கிளம்புகிறார். அலுப்புத்தட்டும் திருமண வாழ்க்கைக்குப் புத்துணர் வூட்டுவதற்கான தேனிலவுப் பயணமாகவும் அந்த ஐரோப்பிய விஜயத்தை அவர்கள் குதூகலமாகத் தொடங்குகிறார்கள். விமானத்தில் எதிர்ப்படும் கோடீஸ்வரர் ஒருவருட னான சந்திப்பு, அவர்களின் தேனிலவுப் பயணத்தை களேபரமாக்குகிறது.
கோடீஸ்வரரின் அழைப்பை ஏற்று அவரது சொகுசுப் படகில் ஐரோப்பிய துறைமுக நகரங்களைத் தரிசிக்கக் கிளம்புகின்றனர். மேலும், சில விருந்தினர்களும் சேர்ந்துகொள்ள உல்லாசமாகத் தொடங்கும் கடல் பயணத்தில் எதிர்பாராத சம்பவங்கள் அரங்கேறத் தொடங்குகின்றன. கோடீஸ்வரக் குடும்பத்தின் அதிபதி மீதான கத்திக்குத்துடன் கடல்மீதான கொலைப் படலம் தொடங்குகிறது. அடுத்தடுத்து மேலும் பலர் மர்மமாக இறக்கின்றனர். கரைசேரும் படகுப் பயணிகளிடம் பிரெஞ்சு போலீஸ் விசாரணையைத் தொடங்குகிறது. எதிர்பாராத விதமாய் தேனிலவுக்கு வந்த அமெரிக்க ஜோடியையே ஏனைய பயணிகள் அனைவரும் சந்தேகப்படுகின்றனர்.
’நானும் போலீஸ்காரன்தான்..’ என்று மனைவி முன்பாக கித்தாப்பு காட்டிய அமெரிக்க போலீஸ்காரர், அதன்பின்னர் பிரெஞ்சு தெருக்களில் ஜோடியாய் ஒளிந்து ஓட வேண்டியதாகிறது. இதற்கிடையே உயிரோடிருக்கும் பயணிகளில் வேறு சிலரும் அடுத்தடுத்து கொல்லப்பட, எல்லாப் பழியும் அமெரிக்க ஜோடி மீதே விழுகிறது. சிலபல துரத்தல்கள், துப்பாக்கிப் பிரயோகங்களுக்குப் பின்னர், தங்கள் மீதான கொலைப்பழியைத் துடைத்து உண்மைக் குற்றவாளிகளை ஆதாரத் துடன் அமெரிக்க ஜோடி அம்பலப்படுத்துவதுடன் திரைப்படம் முடிகிறது.
ஹாலிவுட் 'கிரேஸி மோகன்’ பாணி வசனங்களுடனான இந்த காமெடி த்ரில்லர் திரைப்படத்தில் கொலைகளுக்கு நடுவே கிச்சுக்கிச்சு மூட்டுகிறார்கள். அமெரிக்க ஜோடியாக வரும் ஆடம் சாண்ட்லர், ஜெனிஃபர் அனிஸ்டன் இருவரும் அவ்வப்போது ஊடலில் அடித்துக்கொள்வதும் அதே வேகத்தில் தேனிலவுப் பயணத்தைக் கொண்டாடிக்கொண்டே கொலையாளியை கண்டுபிடிக்கத் திண்டாடுவதுமாகக் கலகலக்க வைக்கிறார்கள். ஒரு சில அமெரிக்கத் திரையரங்குகளில் வெளியானதைத் தொடர்ந்து சர்வதேச அளவில் நெட்ஃபிளிக்ஸ் வெளியிட்டிருக்கும் ’மர்டர் மிஸ்டரி’ திரைப்படமான இதை கைல் நியூவாசெக் இயக்கி உள்ளார்.
முன்னோட்டத்தைக் காண கைபேசியில் ஸ்கேன் செய்யுங்கள்: