

சாதனா
கல்லூரி நண்பர்களோடு சேர்ந்து தைபே நகரில் நடைபெறும் வரலாற்றுக் கண்காட்சி ஒன்றுக்குச் செல்கிறான் ஜாக். அங்கிருந்த ஓவியம் ஒன்று அவனை ஈர்க்கிறது. அதை ஒளிப்படம் எடுக்கிறான். அவன் கையிலிருக்கும் கேமராவுக்கும் ஓவியத்துக்கும் இடையில் இருக்கும் மாயாஜாலத் தொடர்பால் நூறாண்டுகளுக்கு முந்தைய காலத்துக்குக் கடத்தப்படுகிறான். திடீரென்று 1920-ம் ஆண்டில் இருந்த தைவானுக்குக் காலச்சக்கரம் அவனைக் கொண்டுசென்றுவிடுகிறது.
அப்போது ஜப்பானின் ஆளுகையில் தைவான் தேசம் கட்டுண்டிருக்கிறது. கண்டதும் ரோஸ் மீது காதல் வயப்படுகிறான். ஏழைகள், பணக்காரர்கள், தைவானியர்கள், ஜப்பானியர்கள், போராளிகள், ஆதரவாளர்கள் எனத் தன் தேசத்தின் சமூக அடுக்கில் தென்படும் வர்க்க அரசியலை அதனால் விளையும் பண்பாட்டு முரண்களுக்கும் மத்தியில் முட்டிமோதும் ஜாக்கின் வாழ்க்கையை ரசிக்கும்படியாகக் காட்டுகிறது, தைவான் படமான ‘துவா தியு தியான்’ (Twa Tiu Tiann).
ஆம்புலன்ஸ் வண்டிக்கு ஆபத்தான நிலையில் கொண்டுவரப்படும் நோயாளிகளுக்கு முதலுதவி செய்யும் மருத்துவ உதவியாளர் கதாநாயகன். அவருடைய காதல் மனைவி மருத்துவர். ஓர் உயிரைக் காப்பாற்ற அவசர சிகிச்சையின்போது மருத்துவ வரையறைகளைக் கடைப்பிடிக்கத் தேவையில்லை என்று நினைக்கிறார் கதாநாயகன், அதேபோல் தன் மனத்துக்குச் சரியென்றுபட்டதைப் பட்டென்று செய்கிறார். இதனால் பல உயிர்கள் காப்பாற்றப்பட மருத்துவர்களைவிடவும் இவரை நோயாளிகள் அதிகமாக நேசிக்கத் தொடங்குகிறார்கள்.
ஆனால், மருத்துவமனையின் உரிமையாளருக்கு இவருடைய செயல்கள் கடும்கோபத்தை வரவழைக்கின்றன. மறுமுனையில் மருத்துவரான மனைவிக்கும் இவருக்கும் இடையில் ஈகோ மோதல் மூள்கிறது. மனஸ்தாபம் உச்சத்தைத் தொட மணமுறிவு கோருகிறாள் மனைவி. பணிவாழ்க்கை மணவாழ்க்கையை எப்படியெல்லாம் புரட்டிப்போடும் என்பதைக் கேலியாகச் சித்தரித்துக்காட்டி பின்னர் சீரியஸ் படமாக மாறுகிறது ரஷ்யப் படைப்பான ‘அரித்மியா’.
இந்தப் படங்கள் உட்பட சுமார் 12 நாடுகளின் 16 சிறந்த தற்காலத் திரைப்படங்களைக் காட்டவிருக்கிறது, ‘டாக்டர் கே.சி.ஜி.வர்கீஸ் சர்வதேசத் திரை விழா’. சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவை ஒருங்கிணைத்து வரும் இண்டோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் திரைப்படச் சங்கம், இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியுடன் இணைந்து ஜூலை 24, 25 ஆகிய நாட்களில் சென்னை மயிலாப்பூரில் உள்ள சிட்டி சென்டரில் உள்ள ஐனாக்ஸ் திரையரங்கின் - திரை எண் 2, 3-ல் திரையிட்டுப் படவிழாவை நடத்துகிறது.