ஹாலிவுட் ஜன்னல்: வேரை மறக்காத சிறுவன்

ஹாலிவுட் ஜன்னல்: வேரை மறக்காத சிறுவன்
Updated on
1 min read

எஸ்.சுமன் 

ஹாலிவுட்டில் ஆர்ப்பாட்டமான திரைப்படங்களுக்கு மத்தியில் ஆழமும் எளிமையுமான படங்களும் வெளியாவதுண்டு. திரைவிழா மேடைகளை அலங்கரித்து வரும் ‘லுஸ்’ (Luce) என்ற படம் அந்த வரிசையில் சேர்கிறது.
ஓர் அமெரிக்கத் தம்பதி, போரால் தத்தளிக்கும் ஆப்பிரிக்க நாடு ஒன்றிலிருந்து தங்களுக்கான மகனைத் தத்தெடுத்து வளர்க்கின்றனர்.

அவனுக்கான வளர்ப்பிலும் கல்வியிலும் சிரத்தை காட்டுகின்றனர். சிறுவனும் படிப்பு, விளையாட்டு எனப் பள்ளியின் நட்சத்திர மாணவனாக வலம் வருகிறான். அவனுடைய பெற்றோர் பெருமையில் பூரித்துப் போகின்றனர். பள்ளியில் சிறுவன் எழுதும் கட்டுரை ஒன்றின் உள்ளடக்கம் எல்லாவற்றையும் கலைத்துப் போடுகிறது. பதின்ம வயதுச் சிறுவன் தனது வேர்களின் பிடியிலிருந்து விடுபட முடியாது தவிப்பதையும், நினைவில் காடுள்ள மிருகமாய் வினோதம் காட்டுவதையும் அதன் பிறகுதான் அனைவரும் கவனிக்கின்றனர்.

சிறுவனிடம் உறைந்திருக்கும் பிரச்சினைகள், அவனால் வளர்ப்புப் பெற்றோர் எதிர்கொள்ளும் சவால்கள், அர்ப்பணிப்பு உணர்வுள்ள ஆசிரியை ஒருவரின் உதவியுடன் சிறுவனை ஆற்றுப்படுத்த அவர்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் போன்றவையே ‘லுஸ்’ திரைப்படம்.

படத்தில் கதை பல அடுக்குகளில் நின்று உரையாடுவதுடன், பல்வேறு சமூக அவலங்களை ஒருசேரச் சிக்கெடுக்க முயல்கிறது. குழந்தை வளர்ப்பின் பிரச்சினைகள், நவீன முகங்காட்டும் இன வேற்றுமை, அரச வன்முறையின் கோர முகம், மாணவர்களிடம் தடுமாறும் தற்காலக் கல்விமுறை, பாலின பேதங்கள் என்பன உட்படப் பல பிரச்சினைகள் அலசப்படுகின்றன.

ஆஸ்கர் விருது பெற்ற ஆக்டோவியா ஸ்பென்சர் ஆசிரியராகவும், சிறுவனின் அம்மாவாக நவோமி வாட்ஸூம் தோன்றுகின்றனர். உடன் கெல்வின் ஹாரிசன் ஜூனியர், டிம் ரோத் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். ஜே.சி.லீ எழுதி, ஜூலியஸ் ஓனா இயக்கி உள்ள ’லுஸ்’ திரைப்படம் அமெரிக்காவில் ஆகஸ்ட் 2 அன்று வெளியாகிறது.

முன்னோட்டத்தைக் காண:

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in