

ஒரே ஒரு புருவ அசைவு, கண் சிமிட்டல் மூலம் ‘ஒரு அடார் லவ்’ என்ற மலையாளப் படத்தை இந்தியா முழுவதும் பிரபலமாக்கிய அறிமுகக் கதாநாயகி பிரியா வாரியார். அந்தப் படம் படுதோல்வி அடைந்துவிட்ட நிலையில், பாலிவுட் அவரை அழைத்துக்கொண்டிருக்கிறது. ஸ்ரீதேவியின் மரணத்தைச் சித்தரிப்பதாகக் கூறப்பட்டுவரும் ‘ஸ்ரீதேவி பங்களா’ என்ற இந்திப் படத்தில் நடித்து முடித்திருக்கும் ப்ரியாவுக்கு அடுத்த இந்திப் பட வாய்ப்பும் கிடைத்துவிட்டது. ‘லவ் ஹேக்கர்ஸ்’ என்று தலைப்பிடப்பட்டிருக்கும் அந்தப் படம் இணையக் குற்றங்களை மையமாகக் கொண்டு உருவாகி வருகிறது.
நான் புதுமுகம்
தேர்ந்தெடுத்துத் தமிழில் நடித்தாலும் தெலுங்கில் ஆண்டுக்கு இரண்டு படங்களில் நடித்துவிடுகிறார் தமன்னா. இந்தியில் பல படங்களில் நடித்திருந்தபோதும் ‘பாகுபலி’ இந்திப் பதிப்பைத் தவிர பாலிவுட் அவருக்கு வெற்றியாக அமையவில்லை. தற்போது, நவாஸுதீன் சித்திக் நடிக்கும் 'போலே சுடியான்' என்ற படத்தில் கதாநாயகியாக, கிராமத்துப் பெண் வேடம் ஏற்றிருக்கிறார் தமன்னா.
இது பற்றி பாலிவுட் ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்திருக்கும் அவர், “தமிழ், தெலுங்குப் படங்களில் கிராமத்துக் கதைகளில் நடித்திருக்கிறேன். ஆனால், பாலிவுட்டில் நடித்ததில்லை. நவாசுதீன் போன்ற நடிகருக்கு ஜோடியாக நடிப்பது பெருமையான விஷயம். நானும் அவருடைய மாபெரும் ரசிகைதான். என்னை இந்தப் படத்தில் ஒரு புதுமுகமாகப் பாருங்கள்” என்று வேண்டுகோள் வைத்திருக்கிறார்.