

மகராசன் மோகன்
பெரும்பாலும் பத்திரிகையாளர் சந்திப்பின் முடிவில் கோபம் கொப்பளிக்க விடைபெறுவார் அமலா பால். இம்முறை நிதானம், பக்குவம், நேர்கொண்ட பார்வையோடு கேள்விகளை எதிர்கொண்டார். அவரது நடிப்பில் உருவாகியிருக்கும் ‘ஆடை’ திரைப்படம் இன்று வெளியாகும் வேளையில், கவலை ஏதுமற்ற கண்களுடன் திரைவாழ்க்கை - சொந்த வாழ்க்கை குறித்தும் அமலா பால் உரையாடியதன் ஒரு பகுதி இங்கே..
கதை கேட்கும்போதே சர்ச்சையை உருவாக்கும் என்று தெரிந்தும் ‘ஆடை’யில் நடிக்க என்ன காரணம்?
சினிமாவில் நாம பார்க்குற ஹீரோயின், வில்லி மாதிரி இல்லாமல் சமூகத்துல ஒரு பெண்ணாக ‘ஆடை’ படத்தோட காமினி கதாபாத்திரம் இருக்கும். தன்னோட கோபம், துணிச்சல், வெறுப்பு எல்லாவற்றையும் அந்தந்த இடத்திலேயே வெளிப்படுத்தக்கூடிய கேரக்டர். டிரெய்லர் பார்க்கிறவங்க ஒரு மாதிரி பேசுவாங்க. படம் பார்க்கும்போது எந்த இடத்திலும் முகம் சுளிக்க மாட்டாங்க. கதை ஓட்டம் அப்படி இருக்கும். அதனால்தான் சம்மதித்தேன்.
காமினி கதாபாத்திரத்தின் மனநிலையில்தான் தற்போது இருக்கிறீர்களா?
நிச்சயமாக இல்லை. நாலைந்து வருடங்களுக்கு முன்பு இந்த மாதிரி ஒரு மனநிலையில் இருந்தேன். அப்போ எனக்கு 19 -ல் இருந்து 20 வயது இருக்கும். மூன்று வருடங்களுக்கு முன்பு இந்தக் கதை வந்திருந்தால் நிச்சயம் நடிக்க ஒப்புக்கொண்டிருக்க மாட்டேன்.
அமலாபால் இந்த அளவுக்குப் பக்குவம் அடைந்துவிட்டதற்கு நிஜ வாழ்க்கை காரணமா?
சினிமாவும்தான். என்னோட நிஜ வாழ்க்கையைச் சினிமாவில் இருந்து பிரிக்கவே முடியாது. எனக்கே என்னைப் பற்றித் தெரியாத பல விஷயங்கள் செய்தியாக வரும்போதுதான் தெரிந்துகொள்வேன். அதெல்லாத்துக்கும் காரணம் சினிமா தந்த இந்த புகழ்தான். நடிகையாக இன்றைக்கு பிரதிபலிக்கும் இந்த முகம் எனக்கு மற்றவர்கள் அளித்தது. ஒவ்வொரு படமும் ஒரு விதம். ஒவ்வொரு கட்டத்திலும் என்னோட திறமையை வெளிப்படுத்தும் சக்தியை கடவுள் எனக்குக் கொடுத்தார். நிஜ வாழ்க்கையில் பல துரோகங்களை எதிர்கொண்டபோது, பல நண்பர்கள் என்னை விட்டுப் பிரிந்தனர். அதையும் இந்த சினிமாவுக்கு வந்ததால்தான் பெற்றேன். இந்த மாதிரி எனக்குக் கிடைக்கும் அனுபவங்கள் எல்லாமே என் சினிமா வாழ்க்கை வழியே கிடைத்தவைதான். ஆகவேதான் இரண்டையும் பிரிக்க முடியாது என்கிறேன்.
இமயமலைப் பயணம்தான் உங்களை மாற்றியது என்கிறார்களே?
என்னோட 17 வயதில் சினிமாவுக்குள் வந்தேன். நமக்கு என்ன கேட்கணும்னு தோணுதோ, அது குறித்த விளக்கம் மட்டும்தான் அந்தக் காலகட்டத்தில் எனக்குக் கிடைக்கும். அந்த மாதிரி நேரத்தில் திருமணம் உள்ளிட்ட பல விஷயங்கள் என்னோட வாழ்க்கையைப் புரட்டிப்போட்டன.
அவற்றிலிருந்து விடுபட்டபோது, இனி அமலாபால் அவ்வளவுதான் எனப் பலர் நினைத்தனர். அந்த மாதிரி நேரத்தில் ஒரு ஹேண்ட் பேக் முழுக்க கொஞ்சம் ட்ரெஸஸ், பாத்ரூம் சிலிப்பர்ஸ் என எடுத்துக்கொண்டு மலைப் பிரவேசம் சென்றேன். இமயமலையின் கீழ் கங்கை பகுதிக்குச் சென்றபோது என்னோடு 10 பேர் இருந்தனர். அதிலிருந்து 5 மணி நேரம் நடந்து உயரம் சென்றதும் 4 பேர்தான் இருந்தனர்.
என்னோட பையை ஒரு கட்டத்தில் என்னாலேயே சுமக்க முடியாத சூழல். எதுவும் வேண்டாம் என அந்த இடத்திலேயே கொண்டுபோயிருந்த மொத்த உடமைகளையும் விட்டுவிட்டு வெற்று மனுஷியாக வானம் அளந்தேன். அப்போதுதான் இந்த வாழ்க்கையின் அர்த்தம் புரிந்தது. தற்போது புதுச்சேரியில் இருபதாயிரம் ரூபாய் வாடகையில் ஒரு வீடு, காற்றுமாசுபாடு வேண்டாமே என காரைத் தவிர்த்துவிட்டு ஒரு எளிய வாழ்க்கைக்குள் என்னால் இலகுவாகப் பழகிக்கொள்ள முடிந்திருக்கிறது. இமயமலைப் பயணம் மட்டும்மல்ல; வாழ்க்கை பயணம் சொல்லித் தந்த பாடமும்தான் என்னை மாற்றிப்போட்டுவிட்டன.
இப்போது ‘மைனா’ படத்தின் நாட்களைத் திரும்பிப் பார்ப்பதுண்டா?
ஒரு நடிகையாக இன்றைக்கும் நான் ஒரு போராளிதான். ‘மைனா’ திரைப்படம் வந்தபோது மேற்குத் தொடர்ச்சி மலையின் குரங்கணி கிராமத்தில் ஒரு சாதாரண மலைவாசிப் பெண்ணாக, மலையின் குழந்தையாக கேரவன் வசதி இல்லாமல் அந்த ஊரின் மக்களோடு மக்களாக வாழ்ந்த அனுபவம் திரும்பக் கிடைக்காது. அதேமாதிரி ‘அம்மா கணக்கு’ படம் வந்தபோது அது ஒரு அனுபவமாக இருந்தது. 23 வயதில் 14 வயது பெண்ணுக்கு அம்மா. அந்த மாதிரி விஷயமும் எனக்கு இனி அமையாது. இப்போது ‘ஆடை’. எந்தக் கதாபாத்திரத்திலும் தண்ணீரைப்போல் என்னால் எளிமையாகப் பொருத்திக் கொள்ளமுடியும் என்ற நிலைக்கு வந்துவிட்டேன்.
உங்களைப் பிரிந்தபிறகு இயக்குநர் விஜய் மறுமணம் செய்துகொண்டுவிட்டார். உங்கள் நிலைப்பாடு என்ன?
நிச்சயம் நானும் திருமணம் செய்துகொள்வேன். குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளவும் விருப்பம் உண்டு. அதேபோல குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்க்கும் ஆசையும் இருக்கிறது. எல்லாமும் நடக்கும். காலம் எனக்கும் கொடுக்கும்.