காற்றில் கலந்த இசை 15: வானை நோக்கிப் பொழியும் சாரல்

காற்றில் கலந்த இசை 15: வானை நோக்கிப் பொழியும் சாரல்
Updated on
2 min read

ஒரே மெட்டைப் பல்வேறு மொழிகளில் பயன்படுத்துவது என்பது இசையமைப்பாளரின் சுதந்திரம் சம்பந்தப்பட்ட விஷயம் மட்டுமல்ல; வெவ்வேறு கலாச்சாரங்கள் கொண்ட மாநிலங்களின் ரசிகர்களின் மனதைத் தொடும் அளவுக்கு, குறிப்பிட்ட அந்தப் பாடலை மெருகேற்றுவதைப் பற்றியது. ராஜேஷ் கன்னா, அமிதாப் நடித்த ‘ஆனந்த்’ படத்துக்காக இசையமைத்த ‘நா ஜியா லாகே நா’ பாடலின் மெட்டை பாலுமகேந்திராவின் முதல் தமிழ் படமான ‘அழியாத கோலங்கள்’ திரைப்படத்தில் ‘நான் எண்ணும்பொழுது’ பாடலாகத் தந்தார் சலீல்சவுத்ரி. இந்திப் பாடலின் சூழல் வேறு. இளமைக் கால நினைவுகளின் தொகுப்பாகவே தமிழில் இப்பாடலை உருவாக்கியிருந்தார் சலீல் தா. இப்படிப் பல உதாரணங்களைச் சொல்லலாம்.

தமிழ்த் திரைக்கு அறிமுகமான காலத்திலேயே பிற தென்னிந்திய மொழிகளிலும் இசையமைக்கத் தொடங்கிவிட்ட இளையராஜாவும் ஒரே மெட்டை வெவ்வேறு மொழிகளில் பயன்படுத்தியிருக்கிறார். ஆனந்த் நாக், ரஜினிகாந்த், சாரதா நடித்த ‘மாத்துதப்பட மக’ (1978) எனும் கன்னடப் படத்துக்காக அவர் இசையமைத்த ‘பானு பூமியா’ பாடலின் தமிழ் வடிவம்தான் ஜேசுதாஸ், எஸ்.பி. ஷைலஜா பாடிய ‘ஏதோ நினைவுகள்’ பாடல்.

விஜய்காந்த், ஷோபா நடித்த ‘அகல் விளக்கு’ (1979) படத்தில் இடம்பெற்ற பாடல் அது. புகழ்பெற்ற கதாசிரியர் ஆர். செல்வராஜ் இப்படத்தை இயக்கியிருந்தார். கன்னடப் பாடலை எஸ்.பி.பி.யும் எஸ். ஜானகியும் பாடியிருந்தார்கள். ஒரே மெட்டுதான். ஆனால், பாடகர்கள் தேர்வு, தாளம், நிரவல் இசை தொடங்கி பாடலின் உணர்வு வரை, இதன் தமிழ்ப் பிரதி தரும் அனுபவம் முற்றிலும் வேறானது. ஓராண்டுக்கு முன்னர் உருவாக்கிய கன்னடப் பாடலை அந்த அளவுக்கு மிக நேர்த்தியாக மெருகேற்றியிருந்தார் இளையராஜா.

ஆங்கிலத்தில் haunting என்று ஒரு வார்த்தையைப் பயன்படுத்துவார்கள். இதற்கு ஆட்கொள்ளுதல் என்று தமிழில் பொருள் கொள்ளலாம். அந்த வகையில், கேட்பவர்களை மெள்ளமெள்ள ஆட்கொண்டுவிடும் பாடல்களில் ஒன்று இது. காதலின் களிப்புடன் பாடப்படும் டூயட் பாடலாக அல்லாமல், கைவிட்டுப்போன காதலின் நினைவு தரும் வலியின் இசை வடிவமாகவே இப்பாடலைக் கொள்ளலாம். விரிந்து வியாபித்திருக்கும் இயற்கையின் பிரம்மாண்டத்துக்குள் தன்னைக் கரைத்துக்கொள்வதன் மூலம், இழப்பின் வலியை மறக்கச் செய்யும் போதை வஸ்து என்றே இப்பாடலைச் சொல்ல முடியும்.

‘ம்..ஹ்ம்..’ என்று ஜேசுதாஸின் மெல்லிய ஹம்மிங்குடன் தொடங்கும் பாடலின் உயரத்தை, தொடர்ந்து ஒலிக்கும் ஷைலஜாவின் ஹம்மிங், பரந்து விரிந்திருக்கும் வானம் வரை இட்டுச் செல்லும். சுற்றியலையும் மெல்லிய காற்று தவழ்ந்து பூமியில் படர்வதைப் போன்ற உணர்வைத் தரும் முகப்பு இசையுடன் பாடல் தொடங்கும்.

‘ஏதோ நினைவுகள்…’ எனும் பல்லவியின் முதல் வார்த்தைகளே, கடந்து வந்த வாழ்வில் ஏதோ ஒரு தருணத்தில் தேங்கி நிற்கும் வசந்த காலத்தின் உறைவிடத்துக்கு நம்மை அழைத்துச் சென்றுவிடும். நண்பகல் வேளை ஒன்றில், சமவெளியான நிலப்பரப்பில் நின்றுகொண்டு வானில் மிதக்கும் மேகங்களை ரசிக்கும் உணர்வைத் தரும் நிரவல் இசையைத் தந்திருப்பார் இளையராஜா. பூமியிலிருந்து வானை நோக்கிப் பொழியும் சாரல் மழையாக, இப்பாடலின் இசையை தன் மனதுக்குள் அவர் உருவகித்திருக்க வேண்டும். கேட்பவர்களின் அப்போதைய மனநிலைக்கு ஏற்ப வெவ்வேறு மனச் சித்திரங்களை உருவாக்கும் தன்மை கொண்ட பாடல் இது.

குறிப்பாக, இப்பாடலின் இரண்டாவது நிரவல் இசை தரும் உணர்வு விவரணைகளுக்கு அப்பாற்பட்டது. கடந்த கால நினைவின் நெகிழ்ச்சியான தருணங்களையும், மெல்லிய சோகத்தையும் தனக்குள்ளேயே மீட்டிப் பார்க்கும் பாவத்துடன் ஒலிக்கும் கிட்டார் இசையைத் தொடர்ந்து, அலை அலையாகப் பரவும் காற்றில் மிதக்கும் எண்ணங்களாக விரிந்து செல்லும் வயலின் இசைக்கோவையை அமைத்திருப்பார் இளையராஜா.

பகல் நேரத்துத் தனிமையில் அமர்ந்து இப்பாடலைக் கேட்பவர்களை இனம்புரியாத அமானுஷ்ய உணர்வு ஆட்கொண்டுவிடும். பாடலின் இறுதியில் ஒலிக்கும் பல்லவியின் வார்த்தைகளை ஜேசுதாஸும் ஷைலஜாவும் பகிர்ந்துகொள்ளும்போது பாடலின் வடிவம் வேறொரு தன்மையை அடைந்து முடிவுறும். “காற்றினில் செல்லும் என் காதல் எண்ணம் ஏங்கும் எந்நாளும்” எனும் உணர்வுபூர்வமான வரிகளை எழுதியவர் கங்கை அமரன்.

எஸ். ஜானகி பாடிய ‘மாலை நேரக் காற்றே’, சசிரேகா பாடிய ‘நீ கண்ணில் வாழும் மன்னன்தானே’ போன்ற பாடல்களும் இப்படத்தில் உண்டு. ‘ஓட்டு கேட்க வருவாங்கண்ணே’ பாடலில் பாவலர் வரதராசன் பேனருடன் தோன்றிப் பாடுபவர் இளையராஜாவின் அண்ணன் ஆர்.டி. பாஸ்கர்.

படங்கள் உதவி: ஞானம்

தொடர்புக்கு: chandramohan.v@thehindutamil.co.in

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in