

அறிவியல் புனைவும் ஆக்ஷன் காட்சிகளும் நிறைந்த மற்றொரு ஹாலிவுட் படம் பிக்ஸெல்ஸ். ஆனால் இதில் அதகளமான நகைச்சுவையும் முக்கிய அங்கம். கொலம்பியா பிக்சர்ஸ் வெளியிடும் இப்படத்தை க்ரிஸ் கொலம்பஸ் இயக்கியுள்ளார். இவர் இயக்கிய ‘மிஸஸ் டவுட்பயர்’ படம்தான் கமல் ஹாசனின் அவ்வை சண்முகிக்குத் தூண்டுதலாக இருந்தது என்று சொல்கிறார்கள்.
இவர் இயக்கிய ‘ஹோம் அலோன்’, ‘பைசெண்டனியல் மேன்’ ஆகிய படங்களும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றவை. வரும் 24 அன்று வெளிவர உள்ள இப்படம் ‘பிக்ஸெல்ஸ்’ என்னும் பெயரிலேயே வெளியான பாட்ரிக் ழீன் இயக்கிய பிரெஞ்சு அனிமேஷன் படமொன்றை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது.
வேற்றுக் கிரவாசிகளுக்கும் மனிதர்களுக்கும் இடையே சரியான புரிதலை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் நாஸா ஆய்வு மையம் விண்வெளியின் புறப் பரப்பில் டைம் கேப்ஸ்யுல் ஒன்றைக் கொண்டுசேர்க்கிறது. உலக வாழ்க்கையையும் கலாச்சாரத்தையும் விளக்கும் ஃபோட்டோக்களையும் வீடியோக்களையும் கொண்ட கேப்ஸ்யுல் அது. ஆனால் அதில் இடம்பெற்ற வீடியோ கேம்களை வேற்றுக்கிரகவாசிகள் தவறாகப் புரிந்துகொண்டு உலகத்தின் மீது போர் தொடுக்க ஆயத்தமாகிறார்கள்.
கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் தொடக்க நிலையில் இருந்தபோது எண்பதுகளில் உருவாக்கப்பட்ட பேக்மேன் உள்ளிட்ட வீடியோ கேம் கதாபாத்திரங்கள் பிக்ஸெல்கள் வடிவில் இருந்தன. அவற்றை அன்றைய பிக்ஸெல்கள் வடிவில் பார்த்தால் நம்மால் சிரிப்பை அடக்க முடியாது. ஆனால் இந்தப் படத்தில் பேக்மேன், டாங்கிகாங், செண்டிபேட், ஸ்பேஸ் இன்வேடர்ஸ், அர்கனாய்ட், டெட்ரிஸ் போன்ற தொடக்கத்தில் பிரபலமான வீடியோ கேம்களின் பாத்திரங்கள் மனிதர்களை அழிக்க வருகின்றன. இதனால் அமெரிக்காவின் நியூயார்க் நகரம் ரணகளமாகிறது.
இந்தச் சிக்கலுக்குத் தீர்வு காண, அதிபர் வில் கூபர் தன் பால்ய சிநேகிதனான வீடியோ கேம் நிபுணன் சாம் ப்ரென்னரை அழைத்துவருகிறார். வேற்றுக் கிரகவாசிகள் பயன்படுத்தும் டெக்னாலஜியைப் பயன்படுத்தியே அவற்றை அழிக்க சாம் திட்டம் தீட்டுகிறார். பின்னர் என்ன நடந்தது? வீடியோ கேம் பாத்திரங்களிடமிருந்து மனிதர்கள் தப்பிக்கிறார்களா, இல்லை அவற்றிடம் மாட்டிக்கொண்டு அழிகிறார்களா என்பதை ஜாலியாகவும் திகிலாகவும் சொல்கிறது பிக்ஸெல்ஸ்.
மெகா சைஸில் திரையில் பயமுறுத்தும் பிக்ஸெல் கதாபாத்திரங்களும் ஸ்பெஷல் எஃபெக்டுகளும் பார்ப்போரைப் பிரமிக்க வைக்கின்றன. கண்ணுக்கும் காதுக்கும் விருந்தளிக்கும் ட்ரெயிலரின் சில காட்சிகளே முழுப் படத்தையும் பார்க்க வேண்டும் என்னும் ஆவலைத் தூண்டுகின்றன.