

தீபாவளி என்றாலே பட்டாசு, புத்தாடை, பலகாரம் ஆகியவைதான் முன்பெல்லாம் ஞாபகத்துக்கு வரும். ஆனால் இப்போது அவற்றின் ஒட்டுமொத்த இடத்தையும் சின்னத்திரை பிடித்துக்கொண்டுவிட்டது. தீபாவளி தினத்தன்று எந்தெந்த டி.வியில் என்னென்ன நிகழ்ச்சியைப் போடுகிறார்கள் என்பதில்தான் பலரது கவனமும் போகிறது. அந்த வகையில் சின்னத்திரை சேனல்களும் தீபாவளி நிகழ்ச்சிக்காக தயாராகி வருகின்றன. எந்தெந்த டி.வி சேனல்களில் என்னென்ன நிகழ்ச்சிகள் என்பதைப் பற்றி ஒரு சிறிய முன்னோட்டம்.
சன் டி.வி
சன் டி.வியில் காலை 9 மணிக்கு கார்த்திக், காஜல் அகர்வால், பிரபு, சரண்யா கலந்துகொண்டு, ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ படத்தின் படப்பிடிப்பு அனுபவங்களை பகிர்ந்துகொள்ளும் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.
காலை 10 மணிக்கு, இன்றைய சினிமா நிலை குறித்து சாலமன் பாப்பையா தலைமையில் சிறப்புப் பட்டிமன்றம் ஒளிபரப்பாகிறது.
மாலை 5.30 மணிக்கு ஒளிபரப்பாகும் ‘சூப்பர் தீபாவளி’ சிறப்பு நிகழ்ச்சியில் நடிகர் பிரசன்னா உள்ளிட்ட நட்சத்திரங்கள் கலந்துகொள்கிறார்கள்.
காலை 11 மணிக்கு, ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ திரைப்படமும், மாலை 6 மணிக்கு சிங்கம் 2 திரைப்படமும் ஒளிபரப்பாக உள்ளன.
விஜய் டி.வி:
நவம்பர் 2 தீபாவளி அன்று காலை 5.30 மணிக்கு பக்தி பாடல்களோடு நிகழ்ச்சிகளைத் தொடங்குகிறது விஜய் டிவி. காலை 8 மணிக்கு ‘தல தீபாபவளி ஆரம்பம்’ என்ற பெயரில் அஜித் நடிப்பில் வெளிவரும் ஆரம்பம் படம் குறித்த சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. (‘ஆரம்பம்’ படத்தின் ரிலீஸ் என்பதாலோ என்னவோ முக்கியமான அனைத்து சேனல்களிலும் இந்த முறை அஜித் ஸ்பெஷல் நிகழ்ச்சிகள் அணிவகுக்கின்றன.)
காலை 10 மணிக்கு, ‘நானும் எனது விஸ்வரூபமும்’ என்ற தலைப்பில் கமலுடன் ஒரு சந்திப்பு நிகழ்ச்சி. நடிகர் காந்த், தொகுப்பாளினி ரம்யா இருவரும் இந்நிகழ்ச்சியில் கமலுடன் உரையாடுகிறார்கள்.
மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ள, ‘காஃபி வித் டிடி’ நிகழ்ச்சியில் ஆல் இன் ஆல் அழகுராஜா படம் குறித்து சுவாரஸ்யமான நிகழ்வுகளை பகிர்ந்துகொள்கிறார் நடிகர் கார்த்தி.
இதுதவிர, காலை 11 மணிக்கு ‘விஸ்வரூபம்’, மாலை 4 மணிக்கு ‘ஆதலால் காதல் செய்வீர்’, இரவு 7 மணிக்கு ‘துப்பாக்கி’ என்று படங்களின் சரவெடியையும் கொளுத்துகிறது விஜய் டி.வி.
கலைஞர் டி.வி:
காலை 8 மணிக்கு வெங்கட் பிரபு, பிரேம்ஜி, விஜய் வசந்த் மற்றும் நண்பர்கள் சேர்ந்து குதூகல அரட்டையடிக்கும் நிகழ்ச்சி காலையில் ஒளிபரப்பாகிறது.
காலை 10.30 சிவா நடிப்பில் வெளியான, ‘சொன்னா புரியாது’ திரைப்படமும், மாலை 5 மணிக்கு ரஜினி நடித்த ‘சிவாஜி’ திரைப்படமும் ஒளிபரப்பாகவிருக்கிறது.
இதைத்தவிர, ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’, ‘பாண்டிய நாடு’, ‘இவன் வேற மாதிரி’, ‘ஜன்னல் ஓரம்’, ஆகிய படக்குழுவினரின் கலகல சந்திப்புகளும், அந்தந்த திரைப்படம் குறித்த சிறப்புக் கோப்பு காட்சிகளும் தீபாவளி நாள் முழுக்க கலைஞர் தொலைக்காட்சிகளில் வந்து அலங்கரிக்கவுள்ளன.
ஜெயா டி.வி:
நடிகை ஹன்சிகா, குழந்தைகளோடு சேர்ந்து கலகலப்பாக உரையாடும் சிறப்பு சந்திப்பு ஜெயா டி.வியில் ஒளிபரப்பாகவிருக்கிறது. அதோடு தமிழ் சினிமாவில் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் நட்சத்திரங்கள் ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி இருவரின் சந்திப்பு இடம்பெறுகிறது. காதல், இசை, குடும்பம், தலைத் தீபாவளி என அழகாக நகர்ந்துகொண்டிருக்கும் இனிமையான வாழ்க்கை பற்றிய நினைவுகளை இந்நிகழ்ச்சியில் அவர்கள் பகிர்ந்துகொள்கிறார்கள்.
தனுஷ், பார்வதி நடிப்பில் சில மாதங்களுக்கு முன் வெளியான ‘மரியான்’ சிறப்புத் திரைப்படம் தீபாவளி திருநாள் அன்று ஜெயா டி.வியில் ஒளிபரப்பாகவிருக்கிறது.
ஜீ தமிழ்:
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மாலை 3 மணிக்கு ‘பாண்டிய நாட்டு சண்டக்கோழி’ என்ற தலைப்பில் நடிகர் விஷால், விக்ராந்த், இயக்குநர் சுசீந்திரன் கலந்துகொள்ளும் சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. மாலை 5 மணிக்கு சத்யராஜ், மணிவண்ணன் நடிப்பில் உருவான நாகராஜ சோழன் எம்.ஏ. எம்.எல்.ஏ திரைப்படம் ஒளிபரப்பாகிறது.
தீபாவளி பண்டிகையை இரண்டு நாள் கொண்டாட்டமாக கொண்டாடும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நவம்பர் 3 அன்று மாலை 5 மணிக்கு விஜய்சேதுபதி, சஞ்சனா ஷெட்டி நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த, ‘சூது கவ்வும்’ திரைப்படம் ஒளிபரப்பாகவுள்ளது.