

வடிவேலுவைப் புகழின் உச்சத்தில் தூக்கி வைத்த படங்கள் பல. அவற்றில் முக்கிய மானது ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’. இந்தப் படத்துக்கு முன்னோடி யாகவும் முன்மாதிரியாகவும் விளங்கிய படம், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடித்த ‘மந்திரி குமாரி’. அதுவரை துணைக் கதாபாத்திரங்களில் நடித்துவந்த எம்.ஜி.ஆர் இந்தப் படத்தில் நாயகன் ஆனார். பார்த்திபன் என்ற கதாபாத்திரத்தில் நடித்த எம்.ஜி.ஆருக்குக் கிடைத்த வரவேற்புக்கு இணையாக, இதே படத்தில் சாந்தவர்மன் என்ற கோமாளித்தனமான ஒரு விந்தைக்குரிய அரசனாக நடித்துப் பெயர் வாங்கினார் எஸ்.எஸ். சிவசூரியன். கோமாளி / ஏமாளி ராஜாவாக சிவசூரியன் தோன்றிய அத்தனை காட்சிகளிலும் ரசிகர்கள் கைதட்டினார்கள். அதன்பிறகு சிவசூரியன் முன்னணி நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகராக வலம்வர ஆரம்பித்தார்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சிவராம மங்களம் என்ற சிற்றூரில் 1927-ல் பிறந்தவர் சிவசூரியன். தாயார் வடிவு, தந்தை சிதம்பரத்தேவர். சிவசுப்பு என்ற தம்பியும் சிவசூரிய வடிவு என்ற சகோதரியும் உண்டு. 7-ம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர் அத்துடன் படிப்பை முடித்துக் கொண்டார். படிப்பைவிட நடிப்பில் நாட்டம் அதிகமானதால் இளவயதிலேயே நாடகங்களில் சிறு வேடங்களில் நடிக்கலானார்.
நவாபு ராஜமாணிக்கம் சபாவில் பட்டை தீட்டப்பட்ட சிவசூரியன், தனது பாடும் திறமையால் நாடகங்களில் தொடர்ந்து நாரதராக நடித்துப் புகழை ஈட்டினார். இந்தியாவில் மட்டுமின்றி இலங்கையில் தமிழர்கள் வாழும் பல பகுதிகளில் எம்.ஜி.ஆர்., எம்.என். நம்பியார் ஆகியோருடன் நாடகங்களில் நடித்திருக்கிறார். பின்னாளில் எம்.ஜி.ஆரின் ஆதரவாளராகச் சிவசூரியன் மாற இந்த நாடக காலத்து நட்பு அவருக்கு வழி வகுத்தது. சிவசூர்யனின் குன்றாத திறமையைக் கண்ட எம்.ஜி,ஆர்., தான் நடித்த பல படங்களில் சிவசூர்யனை நடிக்க வைத்தார்.
திரைப்படம் பெற்று வந்த புகழால், நாடக நடிகர்கள் பலரும் சேலத்தில் தங்கி ராஜா- ராணி சினிமாக்களில் நடிக்க வாய்ப்பு தேடிக் காலம் அது. சிவசூர்யனும் சேலத்துக்கு வந்தார். மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரத்தின் அன்பைப் பெற்று. ‘மந்திரி குமாரி’யில் சாந்தவர்மன் கதாபாத்திரம் பெற்று நடித்தார்.
பிறகு பிரபலமான நடிகரான இவர் 1950-ல் அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி முன்னிலையில்.துரைப்பாண்டிச்சி என்பவரை மணந்துகொண்டார். இத்தம்பதிக்கு 14 குழந்தைகள். இவர்களில் இன்று உயிரோடிருப்பவர்கள் பேபி வடிவு, சாந்தி, ராஜா மணி, கற்பகவள்ளி என்ற 4 பெண்களும் சிதம்பரம், கந்தகுமார், பூச்சி முருகன் என்ற 3 மகன்களுமே ஆவர்.
சிவசூரியனின் தமிழ்ப் பற்று அலாதியானது. எப்போதும் தூய தமிழில்தான் பேசுவார். இவரது கடைசிப் படம் ரஜினிகாந்த் நடித்த ‘ஊர்க்காவலன்’. திரைப்படங்களில் நடிக்காவிட்டாலும் தனது இறுதிக்காலம் வரை நாடகங்களில் நடித்து வந்தார். கடந்த 1997 ஆண்டு 74-வது வயதில் காலமானா சிவசூர்யனை ஒரு திராவிட இயக்க நடிகர் என்றால் மிகையாகது