Last Updated : 17 Jul, 2015 11:03 AM

 

Published : 17 Jul 2015 11:03 AM
Last Updated : 17 Jul 2015 11:03 AM

காக்கா முட்டை கதை பட்ட பாடு!

லொயோலா கல்லூரியின் முதுகலை ஊடகக் கலைகள் துறை பத்து ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது. இதை, தேசிய விருதுபெற்ற ‘காக்கா முட்டை’ திரைப்படக் குழுவினருடன் ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சியாகக் கொண்டாடினார்கள். ‘காக்கா முட்டை’ படத்தின் இயக்குநர் மணிகண்டன், கதையின் நாயகி ஐஸ்வர்யா, நாயகர்கள் பெரிய, சிறிய காக்கா முட்டைகளாக நடித்த ரமேஷ், விக்னேஷ் மற்றும் பாட்டியாக நடித்த சாந்திமணி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்தனர்.

நிகழ்வில் லொயோலா கல்லூரியின் முதல்வர் ஜி.ஜோசப், ஊடகத்துறை பேராசிரியர்கள், மாணவர்கள் என அனைவரும் கலந்துகொண்டு திரைப்படக் குழுவினரை கவுரவித்தனர். இயக்குநர் மணிகண்டன் தனது ஏற்புரையில் பேசும்போது, ‘‘பத்தாம் வகுப்புக்குப் பிறகு பாலிடெக்னிக் படிப்பைத் தொடங்கி, அதை முடித்துவிட்டு வேலை பார்க்க வந்துவிட்டேன். கல்லூரி கால அனுபவங்கள் இல்லையே என்று எப்பவும் ஒரு ஏக்கம் இருந்துகொண்டே இருக்கிறது.

உதவி ஒளிப்பதிவாளராக வேலைக்கு சேர்ந்து எட்டு ஆண்டுகள் உருண்டோடிய பிறகு சினிமாட்டோகிராபி சார்ந்த ஒரு குறும்படம் எடுக்கலாம் என்று இறங்கி ‘வின்ட்’ என்று ஒரு குறும்படத்தை எடுத்தேன். அது தந்த உற்சாகம்தான் கதைகள் எழுதி இயக்கும் எண்ணத்தை அதிகப்படுத்தியது. அதனால் என்னைச் சுற்றிய சூழ்நிலைகளிலிருந்து கதைகளை எழுதினேன். இந்தக் கதைகளோடு தயாரிப்பாளர்களை அணுகினால், ‘கதை நல்லா இருக்கு. இதை சிறுகதையா படிக்கத்தான் முடியும்’ என்றே அதிகமும் கூறினார்கள்” என்று காக்கா முட்டை படத்தின் கதை படமாகும் வரை தான் பட்ட பாட்டை உள்ளது உள்ளபடி அவர் உரைத்தபோது விழா அரங்கில் அமைதி.

மணிகண்டன் தொடர்ந்தார்... “காக்கா முட்டை கதையை சில தயாரிப்பாளர்களிடம் கொண்டுபோனேன். மூன்றாவதாக நான் சந்தித்த தயாரிப்பாளர் கதையை எடுக்க சம்மதித்தார். ஒளிப்பதிவு, இயக்கத்துக்கும் சேர்த்து ஐந்து லட்சம் சம்பளம் கொடுக்கவும் முன்வந்தார். சில நாட்கள் கழித்து கதையில் காதல் டிராக் மட்டும் சேர்த்தால் பெரிய அளவில் வியாபாரம் ஆகும் என்றார். அதற்கு பதிலாக என் சம்பளத்தையும் 30 லட்சம் வரைக்கும் உயர்த்தித் தருவதாகவும் உத்தரவாதம் அளித்தார்.

அந்த சந்திப்பின்போது என் பைக்கில் பெட்ரோல் இல்லாமல் ஒரு இடத்தில் நிறுத்திவிட்டு நடந்து போய் அவரைப் பார்த்துவிட்டுத் திரும்புகிறேன். ஏனோ, மனம் ஒப்புக்கொள்ளவே இல்லை. ‘இந்த கம்பெனிக்கு படம் செய்ய வேண்டாம் என்று மனம் சொல்கிறது’ என்று கூறிவிட்டு வெளியேறினேன். கதையைக் கெடுத்து லாபம் அடையக் கூடாது என்பது என் நோக்கமாக இருந்தது.” என்று நெகிழ வைத்தவர், வெற்றி மாறன் தனுஷ் இருவரையும் சந்தித்த கதையைக் கூறினார்.

“சென்னைக்கு வந்து 15 ஆண்டுகள் ஆகிவிட்டது, தயாரிப்பாளர் சொல்வதைக் கேட்டு சமரசம் செய்துகொள்ளலாமே என்று தோன்றும். வீட்டில் வந்து யோசித்தால் வேண்டாம் என்று மனம் மறுக்கும். நமக்கான படத்தை இரண்டாவது படமாகச் செய்யலாம். முதல் படத்தைத் தயாரிப்பாளர் உள்ளிட்ட நமக்கு வெளியில் இருப்பவர்களுக்காகச் செய்வோம் என்று நினைப்பேன். என்னைக் கேட்டால் நாம் நினைத்ததை முதல் படத்தில் செய்ய முடியவில்லை என்றால் பின் எப்போதுமே செய்ய முடியாது.

இயக்குநர் வெற்றி மாறனிடம் இந்தக் கதையைச் சொன்னபோதும்கூட ‘எதையும் மாற்றிக்கொள்ள மாட்டேன். ஏதாவது கருத்து இருந்தால் சொல்லுங்க’ என்று மட்டும் கூறினேன். அவருக்கும் சில காட்சிகளில் உடன்பாடில்லாமல் இருந்தது. நான் அதற்கான விளக்கம் கொடுத்தால் அதோடு விட்டுவிடுவார். வெற்றி மாறன், தனுஷ் இருவரும், தங்களுக்கு இருக்கும் சினிமா மீதான காதலால்தான் இந்தப் படத்தைத் தயாரிக்க முன்வந்தார்கள்.

அவர்கள் தயாரித்ததால்தான் படமும் வெளிவந்தது. சரியான மார்க்கெட்டிங் இருந்ததால்தான் வணிக வெற்றியும் கிடைத்தது. இந்தப் படத்துக்குக் கிடைத்திருக்கும் விருது அங்கீகாரம் நல்ல படத்தைத் தொடர்ந்து செய்ய வேண்டும் என்கிற நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது” என்று கம்பீரம் முகத்தில் மின்னப் பேசியவர் நமக்குப் பிடித்த சினிமாவைச் செய்வதுதான் படைப்பாளிக்கு அழகு என்று அழுத்தம்திருத்தமாக அந்த விழாவில் பதிவு செய்தார்.

“நமக்குப் பிடித்த சினிமா என்பது, அதற்கு நாம் நேர்மையாக நடந்துகொள்வதுதான். நமது ஈகோவைக் கதைக்குள் கொண்டுபோகாமல், மற்றவர்களது ஈகோவும் அந்த கதையில் சேராமல் பார்த்துக்கொண்டு அதை சரியான பட்ஜெட்டில் எடுக்க வேண்டும். தவறினால் அது தப்பான சினிமாதான்.

படம் பார்க்கும் ரசிகர்களை மட்டுமே மனதில் வைத்து அவர்களுக்கு உண்மையாகவும் நேர்மையாகவும் வேலை செய்தால் நம் உணர்வைக் கண்டிப்பாகப் புரிந்துகொள்வார்கள். அதுதான் நம்மைத் தனித்து அடையாளப்படுத்தும்’’ என்று மணிகண்டன் பேசிமுடித்ததும் மாணவர்கள் ஓடிச் சென்று அவருக்குக் கைகுலுக்கித் தங்கள் மகிழ்ச்சியையும் வாழ்த்துகளையும் பகிர்ந்துகொண்டார்கள்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x