

தமிழகமெங்கும் ரசிகர்களின் அமோக ஆதரவுடன் வெற்றி நடைபோடும் ‘காக்கா முட்டை’ வெளியான அதே டொராண்டோ சர்வதேசத் திரைப்பட விழாவில்தான் ‘பிக் கேம்’ என்ற அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த சாகசப் படமும் முதன்முதலில் திரையிடப்பட்டது. மிகுந்த பொருட் செலவுடன் தயாரிக்கப்பட்ட இந்தத் திரைப்படம் ரசிகர்களை இருக்கையின் நுனிக்குக் கொண்டுவரும் சுவாரசியமான காட்சிகளுடன் படமாக்கப்பட்டுள்ளது.
பின்லாந்தில் இதுவரை தயாரிக்கப்பட்ட படங்களைவிட அதிக செலவில் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார்கள். ‘பிக் கேம்’ என்ற பெயரில் 2013-ம் ஆண்டு வெளியான நாவலொன்றை அடிப்படையாகக் கொண்டே இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது.
‘பிக் கேம்’ படத்தை இயக்கியிருக்கும் ஜல்மரி ஹேலண்டர் சிறந்த திரைக்கதையாசிரியர். திரைப்படங்களை இயக்குவதற்கு முன்னர் பல குறும்படங்களை உருவாக்கியுள்ளார். வணிகரீதியில் வெற்றிபெற்ற பல தொலைக்காட்சித் தொடர்களையும் இவர் இயக்கியுள்ளார். 2010-ல் இவர் இயக்கிய த்ரில்லர் படமான ‘ரேர் எக்ஸ்போர்ட்ஸ்: எ கிறிஸ்மஸ் டேல்’ படம் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தது.
இந்நிலையில் வரப்போகும் ‘பிக் கேம்’ ரசிகர்களுக்கான திரை விருந்தாக அமையும் என ரசிகர்கள் நம்புகிறார்கள். படத்தின் டிரெய்லரே படத்தைக் குறித்த உச்சபட்ச எதிர்பார்ப்பை உருவாக்கிவிடுகிறது.
அமெரிக்க அதிபர் செல்லும் ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானம் பயங்கரவாதிகளால் தாக்கப்படுகிறது. இந்தத் தாக்குதல் காரணமாக பின்லாந்தின் அடர் வனத்துக்குள் விமானம் விழுந்துவிட அதிபர் காட்டின் நடுவே மாட்டிக்கொள்கிறார். அவரை 13 வயதுச் சிறுவன் ஒருவன்தான் கண்டுபிடிக்கிறான்.
அவன் எப்படி அமெரிக்க அதிபரைக் காப்பாற்றுகிறான் என்பதே படத்தின் ஒரு வரிக் கதை. அமெரிக்க அதிபராக சாமுவேல் எல் ஜாக்ஸன் நடித்திருக்கிறார். இவர் ஜுராஸிக் பார்க், தி இன்கிரெடிபிள்ஸ், ஜாங்கோ அன்செய்ன்டு போன்ற படங்களில் ரசிகர்களைக் கவர்ந்தவர்.
உயர் தொழில்நுட்பம் செழித்திருக்கும் நாட்டின் அதிபரை, முதுகில் அம்பறாத் தூணியைச் சுமந்தபடி வில்லேந்தி வரும் அந்தச் சிறுவன் மீட்கும் காட்சிகளை மைகா ஒராஸ்மாவின் ஒளிப்பதிவில் கண்டு களிக்கும் கண்களை விட்டு அந்தக் காட்சிகள் எளிதில் அகன்றுவிடாது.
ஒரு பெட்டிக்குள் இருக்கும் அதிபரும் சிறுவனும் துப்பாக்கிக் குண்டுகளிலிருந்து தப்பிப்பதற்காக, உள்ளுக்குள் இருந்தபடியே பெட்டியை மலையிலிருந்து உருளச் செய்கிறான் சிறுவன். என்ன ஆகும் அவர்களுக்கு? எப்படித் தப்பிப்பார்கள்? என்னும் பதைபதைப்பை ஏற்படுத்தியபடி பரபரவெனப் பறக்கிறது படம்.