

இந்திய நட்சத்திரங்களில் ஐஸ்வர்யா ராய் பச்சன் பெயரால் சுமார் பதினேழாயிரம் இணையதளங்கள் நடத்தப்படுகின்றன. இது ஒன்றே போதும் இவருடைய புகழ் இருபது ஆண்டுகள் கடந்தும் குறையாமல் இருக்கிறது என்பதைக் காட்ட. இந்தியாவின் முன்னுதாரணமான பிரபலங்களில் ஒருவராகத் திகழும் ஐஸ்வர்யா ராய் நடந்து முடிந்த கான் பட விழாவில் வழக்கத்தைவிட அதிகமாகவே கேமராக்களின் ஒளியில் நனைந்தார். கடந்த முறை கான் படவிழாவில் அவர் கலந்துகொண்டபோது இருந்த தோற்றத்தைக் காட்டிலும் இப்போது இளமை கூடியிருந்தது. எடை குறைந்து, ஒல்லி ராயாக ஒய்யாரமாக நடந்து வந்து பார்வையாளர்களை நோக்கிக் காற்றில் தன் முத்தங்களை மிதக்கவிட்டார். ஐஸ்வர்யா ராயின் கான் படவிழாவின் காணொளியும், புகைப்படங்களும் இந்திய ரசிகர்கள் மத்தியில் இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றன.
திருமணத்துக்குப் பிறகு தொடர்ந்து நடித்துவந்த ஐஸ்வர்யா ராய் குழந்தை பெற்றுக்கொண்ட பிறகு சினிமாவை விட்டுத் தள்ளியே இருந்தார். குழந்தைப் பேற்றுக்குப் பிறகு கைக்குழந்தையைப் பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு காரணமாக சினிமாவை விட்டுத் தள்ளியே இருந்தார் ஐஸ்வர்யா. அவர் எடையும் கூடியிருந்தது. சினிமாவில்தான் நடிக்கவில்லையே தவிர விளம்பரம், ஃபேஷன் ஷோக்களில் தலை காட்டிக் கொண்டுதான் இருந்தார். தற்போது அவர் மகள் ஆராத்யா வளர்ந்துவிட்டாள். இதனால் மீண்டும் படங்களில் நடிக்க முடிவெடுத்திருக்கிறார் ஐஸ்வர்யா.
பி. வாசு இயக்க ‘ஐஸ்வர்யாவும் ஆயிரம் காக்கைகளும்' படத்தில் நடிப்பார் என்று அதிகாரபூர்வமாக அறிவித்தார்கள். ஆனால் அதை உடனடியாக மறுத்தார் ஐஸ்வர்யா. அடுத்து மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க இருப்பதாகச் செய்திகள் வலம்வந்தன. அதையும் ஐஸ்வர்யா ராய் ஆமோதிக்கவில்லை. ஆனால், கான் பட விழாவில் பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த ஐஸ்வர்யா, மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க இருப்பதை உறுதிப்படுத்தியிருக்கிறார். இருவர் மூலம் இவரது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிவைத்த மணிரத்னமே இவரது இரண்டாவது இன்னிங்ஸையும் தொடங்கிவைப்பார் என்று தெரிகிறது. மேலும் சஞ்சய் குப்தா இயக்கத்தில் ஒரு இந்திப் படத்தில் நடிக்க இருப்பதையும் ஒப்புக்கொண்டிருக்கிறார்.
ஐஸ்வர்யா ராயைப் பொறுத்தவரை 2012 அவருக்குக் கசப்பும் இனிப்பும் கலந்த ஆண்டு. பிரபல இந்திப் பட இயக்குநர் மதூர் பண்டார்கர் இயக்கத்தில் அர்ஜுன் ராம்பாலுடன் இணைந்து ‘ஹீரோயின்’ என்ற தனது கனவுப் படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பில் நடித்திருந்தார். இந்த நேரத்தில் கர்ப்பமானார். ‘ஹீரோயின்’ திரைப்படம் கவர்ச்சியும் புகழ்ச்சியும் மிக்கவர்களாகப் பார்க்கப்படும் சினிமா கதாநாயகிகளின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் கதையம்சம் கொண்டது. ஐஸ்வர்யா கர்ப்பமானார் என்ற செய்தியால் படத்தின் புகழும் எதிர்பார்ப்பும் மங்கிவிடலாம் என்று தயங்கினார் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவராக இருந்த பண்டார்கர். இதனால் ஐஸ்வர்யா தனது கர்ப்பத்தை மறைத்துவிட்டதாக அதிரடி கிளப்பினார். ஆனால் இதை மறுத்த ராய் “கர்ப்பம் என்பது நோய் அல்ல. சினிமாவில் நடிக்க உடல் ஆரோக்கியமாக இருந்தால் போதும்” என்று பதிலடி கொடுத்தார்.
என்றாலும் இயக்குநரின் தயக்கத்தையும் காய் நகர்த்தலையும் புரிந்துகொண்ட ஐஸ்வர்யா, வீம்பு பண்ணாமல், படத்துக்காக வாங்கிய முன்பணத்தைத் திரும்பிக் கொடுத்துவிட்டுப் படத்திலிருந்து விலகினார். படத்தின் முதன்மைத் தயாரிப்பாளர்களாக இருந்த யூடிவி நிறுவனம் “இந்த நேரத்தில் ஹீரோயின் படத்தை விட ஐஸ்வர்யா ராயின் உடல்நிலைதான் எங்களுக்குப் பெரியது” என்றது.
ஹீரோயின் படத்திலிருந்து விலகிய இரண்டே ஆண்டு களில், மகப்பேற்றுக்குப் பிறகு கூடிய உடல் எடையை உதறியெறிந்து திரைக்குத் திரும்பியிருக்கும் ஐஸ்வர்யா ராயின் உறுதி அவரைப் போலவே அழகானது.