

‘வாயை மூடிப் பேசவும்' திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஷான் ரோல்டன் (ஆர். ராகவேந்திரா), இசை அமைத்திருக்கும் அடுத்த படம் ‘முண்டாசுப் பட்டி'. பாடல்களை எழுதியிருப்பவர் முத்தமிழ்.
‘வாயை மூடிப் பேசவும்' படத்தில் நகரத்துக்கு ஏற்ற நவீன பாணிப் பாடல்களை தந்திருந்த ஷான், இந்தப் படத்தில் கிராமத்து இசைக்கு நகர முயன்றிருக்கிறார். பாடல்களின் பின்னணி இசை அது பாட்டுக்குக் கடந்து போகாமல், செவிகளைப் பிடித்திழுக்கிறது.
‘ஜிகர்தண்டா' படத்தின் ‘கண்ணம்மா’ பாடல் மூலம் வித்தியமான குரலுக்காகப் பிரபலமான ரிதா ஆண்டனிதாசன், ‘ராசா மகராசா’ மூலம் மீண்டும் ஆச்சரியப்படுத்தியிருக்கிறார். ஒப்பாரிப் பாடலுக்கான சாயலுடன் இந்த டூயட்டை அவர் பாட, வரிகளும்கூடக் கிண்டலாக ஒலிக்கின்றன. ஆண் குரலில் இசையமைப்பாளர் ஷான் ரோல்டனே, உணர்ச்சிகரமாகப் பாடியுள்ள விதம் வசீகரிக்கிறது. வெறும் 3 நிமிடங்களே ஒலிக்கும் இதில் கிராமத்து மெட்டு, மேற்கத்திய பின்னணி இசையைக் கலந்து உருவாகியுள்ள புதிய ஃபியூஷன் அமர்க்களம்.
அடுத்ததாக ‘ஆம்பள சிங்கம்’ பாடலை ஷான் ரோல்டன் பாடியுள்ள விதம், 80-களின் கமல்ஹாசன் முத்திரைப் பாடல்களை (குரல் உட்பட) ஞாபகப்படுத்துகிறது, ரசிக்க முடிகிறது.
ஆண்டனிதாசன் தனது வழக்கமான ஹைபிட்ச் பாடல்களுக்குப் பதிலாக, ‘கில்லாடி ஒருத்தன்’ பாடலை மாறுபட்டுப் பாடியிருப்பது நன்றாக இருக்கிறது. அக்மார்க் நாட்டுப்புறப் பாணிப் பாடலான இதுவும் ரசிக்க வைக்கிறது.
பிரதீப் குமார், கல்யாணி நாயர் பாடியுள்ள ‘காதல் கனவே’ மென் மெலடி ரகம். ஹரிசரண் பாடியுள்ள ‘இது என்ன’ வார்த்தைகளால் நகரும் மெலடி.
அடிப்படைகளில் வலுவாக இருக்கும் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் அடுத் தடுத்து இரண்டு படங்களில் மாறுபட்ட பாணிப் பாடல்களைக் கொடுத்து கவர்ந்திருக்கிறார்.