

ஊருக்கு வெளியே இருக்கும் ரயில்வே கேட், ரயில் வரும் நேரங்களில் மூடப்படும்போது, அதன் இருபுறங்களிலும் நிற்கும் வாகனங்களில் காத்திருக்கும் பயணிகளிடம் பூ, பழம், தின்பண்டங்களை விற்பவர்களைப் பார்த்திருப்போம். ஆர். செல்வராஜ் இயக்கத்தில் 1983-ல் வெளியான ‘பகவதிபுரம் ரயில்வே கேட்’ படத்தின் கதைமாந்தர்கள் அவர்கள்தான்.
கையில், பேசும் கிளியுடன் அந்தச் சிறு வணிகத்தில் பங்கேற்கும் ராஜலட்சுமிதான் படத்தின் நாயகி. எளிய மனிதர்கள் வாழும் சின்னஞ்சிறிய அந்தக் கிராமத்துக்கு முதல் முறையாக வரும் பேருந்து இன்னொரு முக்கியமான பாத்திரம். அதன் நடத்துநர் (கார்த்திக்) படத்தின் நாயகன். கேட்பதற்கு சுவாரசியமாக இருக்கும் இந்தக் கதை சிறப்பாகப் படமாக்கப்பட்டதா என்பது வேறு விஷயம்.
எனினும், ‘ராசிபுரம் காத்தவராயன், ஸ்ரீரங்கம் சீனிவாசன் ஆகியோர் விரும்பி கேட்டிருக்கும் பாடல் இடம்பெற்ற திரைப்படம் ‘பகவதிபுரம் ரயில்வே கேட்’. பாடலைப் பாடியவர்கள் தீபன் சக்கரவர்த்தி, எஸ்.பி. ஷைலஜா. எம்.ஜி. வல்லபன் எழுதிய பாடலுக்கு இசை இளையராஜா’ என்று மவுன இடைவெளிகளுக்கு நடுவில் விவித்பாரதி அறிவிப்பாளர்களால் பல முறை ஒலிபரப்பப்பட்ட பாடல்களைக் கொண்ட படம் இது.
காலை நேரத் தென்றல்
முந்தைய நாளில் எத்தனையோ கசப்பான விஷயங்கள் நிகழ்ந்திருக்கலாம். ஆனால், இயற்கையின் சுகந்தத்துடன், புத்தம் புதிதாக, மலர்ச்சியுடன் மறுநாள் காலை புலரும் தருணங்கள், எவர் மனதையும் உடலையும் புத்துயிர்ப்புடன் உணரவைத்துவிடும். காலை நேரத்தில் கண் விழிக்கும் மலர்களும் பறவைகளும் இயற்கையின் அற்புதத்தைப் பாடிக்கொண்டிருக்கும். நமது நாயகனும் நாயகியும் தங்கள் காதலைப் பரிமாறிக்கொள்வது இந்த நேரத்தில்தான் என்பதால், ‘காலை நேரக் காற்றின் வாழ்த்தைக்’ கோருகிறது இந்தப் பாடல்.
துள்ளும் இளமையுடன் ஒலிக்கும் கிட்டாருக்கு இணையாகக் குதூகலமாக இசைக்கும் வீணையுடன் பாடல் தொடங்குகிறது. துடிக்கும் மனதின் இசை வடிவமாகக் கொண்டாட்டத்தில் பங்கேற்கும் தபேலா, இயற்கையின் இளமையைச் சுமந்தபடி பாடல் முழுவதும் ஒலிக்கும். ஒற்றையடிப் பாதையின் இருபுறமும் சிலிர்த்துக் கிடக்கும் செடி-கொடிகள், காற்றின் தாளத்துக்கு அசையும் நாற்றுக்கள், காற்றின் தீண்டலில் மெல்லிய அலைகள் பரவும் நீர்ப்பரப்புகள் என்று இந்தப் பாடல் வழங்கும் மனச்சித்திரங்கள் அபாரமானவை. முதல் சரணத்துக்கு முன்னதாக ஒலிக்கும் புல்லாங்குழல் இயற்கை அழகை ரசித்தபடி வருடிச் செல்லும் காலைத் தென்றலின் இசை வடிவமாக ஒலிக்கும்.
இயற்கை சார்ந்த பல பாடல்களைத் தீபன் சக்கரவர்த்திக்கு இளையராஜா வழங்கியதன் காரணம் என்னவாக இருக்கும்? இயற்கையை வியக்கும் அடங்கிய, குளிர்ந்த அவரது குரல் இப்பாடல்களுக்குப் பொருத்தமாக இருக்கும் என்று இளையராஜாவுக்குத் தோன்றியிருக்கலாம்.
இயற்கையுடன் இசைந்து ஒலிக்கும் இதுபோன்ற பாடல்கள் எஸ்.பி. ஷைலஜாவுக்குக் கொடுக்கப்பட்டதற்கு, விரிந்துகிடக்கும் இயற்கையின் எல்லையைத் தொட முயலும் அவரது துல்லியமான குரல் காரணமாக இருக்கலாம். காரணம் என்னவாக இருந்தாலும் இதுபோன்ற கலைஞர்களின் கூட்டுப் பங்களிப்பில் நமக்குக் கிடைத்திருக்கும் பாடல்கள், இயற்கையின் பேரழகை நம் கண்முன் நிறுத்துபவை.
சாரல் தெறிக்கும் இசையருவி
உமா ரமணனுடன் இணைந்து இளையராஜா பாடிய ‘செவ்வரளித் தோட்டத்திலே உன்னை நினைச்சு’ பாடல், கிராமியக் காட்சிகளை வரைந்துசெல்லும் மற்றொரு பாடல். ‘காலை நேரக் காற்றே’ பாடல் புதிதாகத் தொடங்கும் காதலின் குறுகுறுப்பு கலந்த துள்ளல் கலந்தது என்றால், இந்தப் பாடல் காதலில் திளைக்கும் ஜோடியின் ரகசியச் சந்திப்பின் கொண்டாட்டம் எனலாம்.
‘தானானே… தானானா…’ என்று கிராமத்தின் அசல் குரல் ஒன்றுடன் தொடங்கும் பாடல், எளிய தாளக்கட்டுடன் கிட்டார், ஜலதரங்கம் என்று இசைக் கருவிகளின் சங்கமத்துடன் தொடர்கிறது. அருவியின் கிளைகளாகப் பிரிந்து செல்லும் ஓடைகளில் ஒன்று, பசுமையாகக் குளிர்ந்து கிடக்கும் பாறைகளின் மீது ஓடிச்செல்வது போல், தன்னியல்பாக விரிந்துசெல்லும் இசை கொண்ட பாடல் இது.
மாலை நேரத்தில் தென்னங்கீற்றுகளின் நடுவில் எட்டிப் பார்க்கும் சூரியக் கதிர்களின் மஞ்சள் பின்னணியில், பெயர் தெரியாத காதலர்கள் சந்தித்துக்கொள்ளும் காட்சி மனதுக்குள் விரியும். ‘கொட்டுகிற அருவியிலே குளிக்கிற குருவிகளே’ என்று இளையராஜா பாடும்போது, இதுவரை அறிந்திராத அருவியின் சாரல் நம் மீது தெறிப்பதை உணர முடியும். அத்தனை அசலான கிராமத்துப் பாடல் இது.
கங்கை அமரன் பாடிய டைட்டில் பாடலைத் தவிர்த்து வேறு இரண்டு பாடல்களும் படத்தில் உண்டு. சசிரேகா பாடிய ‘தென்றல் காற்றும் அன்புப் பாட்டும்’ பாடல், காதல் வாழ்வில் குறுக்கிடும் சோகங்களை நினைத்து வருந்தும் நாயகியின் மனக்குரலாக ஒலிக்கும். தனித்த குரல் கொண்ட சசிரேகாவின் சிறந்த பாடல்களில் ஒன்று இது. எஸ்.பி.பி. பாடும் ‘ஆசை நெஞ்சில் இனி தீபம் இல்லை’ பாடல், நாயகனின் தரப்பில் பாடப்படும் மற்றொரு காதல் சோகப் பாடல்.
தொடர்புக்கு: chandramohan.v@thehindutamil.co.in