Published : 03 Jun 2015 12:32 pm

Updated : 09 Jun 2015 15:06 pm

 

Published : 03 Jun 2015 12:32 PM
Last Updated : 09 Jun 2015 03:06 PM

சினிமா எடுத்துப் பார் 11 - "பீம்சிங் அல்ல பாம்சிங்"

11-quot-quot

‘களத்தூர் கண்ணம்மா’ படத்தை பிரகாஷ்ராவை அடுத்து இயக்குநர் பீம்சிங் தொடர்ந்து இயக்குவதற்கான வேலைகள் ஏவி.எம். ஸ்டுடியோவில் தொடங்கின. இதற்கு முன் எடுத்த காட்சிகளை வைத்துக்கொண்டு மேலும் படத்தை எப்படி நகர்த்தலாம் என்று படக் குழுவினருடன் பீம்சிங் கலந்தாலோசித்து எடுத்த அந்தப் படம், மிகப் பெரிய வெற்றி பெற்றது.

பீம்சிங் முதன்முதலில் இயக்கிய ‘செந்தாமரை’ வெளிவர தாமதமானதால், ‘அம்மையப்பன்’ என்ற படத்தை இயக்கி வெளியிட்டார். அந்தப் படம் தோல்வியைத் தழுவியது. அதற்காக பீம்சிங் துவண்டுவிடாமல் அடுத்தடுத்த வெற்றியை நோக்கி பயணப்பட்டு, ‘பா’ வரிசைப் படங்களை வெற்றிகரமாகக் கொடுத்துக்கொண்டிருந்தார். ‘பதிபக்தி’, ‘பாலும் பழமும்’, ‘பாவ மன்னிப்பு’, ‘பாசமலர்’, பார்த்தால் பசி தீரும்’, ‘பார் மகளே பார்’ உள்ளிட்ட அவரது ‘பா’ வரிசைப் படங்களில் ஒரு நட்சத்திர பட்டாளமே நடிக்கும். ஏவி.எம். சரவணன் சார் ‘இவர் பீம்சிங் இல்லப்பா… பாம்சிங்’ என்பார். இந்த ‘பா’ வரிசைப் படங்களுக்கு பீம்சிங்குக்குப் பக்கபலமாக இருந்தவர் எடிட்டர் ஏ.பால்துரைசிங்கம்.

தமிழகத்தின் சிறந்த எடிட்டர்களில் ஒருவரான எடிட்டரும், இயக்குநருமான பி.லெனின், பாரதிராஜா படங்களின் ஒளிப்பதிவாளர் பி.கண்ணன் இருவரும் பீம்சிங்கின் மகன்கள். அவரைப் போலவே இவர்களும் திரையில் முத்திரை பதித்து வருகிறார்கள்.

‘களத்தூர் கண்ணம்மா’ தெலுங்கில் ‘மோக நூமு’ என்கிற பெயரில் டி.யோகானந்த் இயக்கத்தில் ரீமேக் செய்யப்பட்டது. படத்தில் விவசாயி எஸ்.வி.சுப்பையாவின் மகள் சாவித்திரி கர்ப்பமானதற்குக் காரணம் தன் மகன் என்று டி.எஸ்.பாலையாவுக்குத் தெரியவரும். மகள் இப்படி நிலைகுலைந்து நிற்கிறாளே என்கிற கோபத்தில் ‘அவன் யாரு… சொல்லு? சொல்லுலேன்னா உன்னைக் கொன்னுடுவேன்’ என்று எஸ்.வி. சுப்பையா கோபத்தில் கையைத் தூக்குவார். அந்த சமயம் அங்கு வரும் பாலையா ‘அந்தப் பொண்ண கொன்னுட்டா, நீ கொலையாளி ஆகிடுவே. பொண்ணுக்கு மானம் போயிடும். இதுக்கு ஒரே வழி. பேசாமல் அவளை கூட்டிட்டு வெளியூருக்குப் போயிடு’ என்று தன் மகன் செய்த தவறை மறைத்து, எஸ்.வி. சுப்பையாவுக்கு உதவுவதைப் போல சாதூர்யமாகப் பேசி, வெளியூருக்கு அனுப்பி வைப்பார். பாலையாவின் நடிப்பில் மிளிர்ந்த சிறந்த காட்சி அது.

இதே காட்சியைத் தெலுங்கில் எடுக்கும்போது சாவித்திரி நடித்த ரோலில் ஜமுனாவும், எஸ்.வி.சுப்பையாவுக்கு பதில் வி.நாகையாவும், பாலையாவுக்கு பதில் எஸ்.வி.ரங்கா ராவும் நடித்தார்கள். மெய்யப்ப செட்டியார் என்னை அழைத்து, ‘அந்தக் காட்சியைப் படமாக்குவதற்கு முன் ரங்காராவ்கிட்ட தமிழில் பாலையா நடித்த காட்சியை போட்டுக் காட்டு. அதைப் பார்த்துவிட்டு நடிக்கட்டும்’ என்றார். ரங்கா ராவிடம் சென்று ‘‘களத்தூர் கண்ணம்மா’ படத்தில் இடம்பெற்ற காட்சியை ஒரு தடவை பார்த்துவிட்டு செட்டியார் உங்களை நடிக்கச் சொன்னார்’’ என்று சொன்னேன். ‘‘வேண்டாம். அதைப் பார்த்தால் பாலையா நடிப்போட பாதிப்பு வந்துடும்’ என்றார் ரங்கா ராவ். ‘‘செட்டியார் கோபப்படுவாரே…’’ என்ற என்னிடம் ‘‘நான் செட்டியார்கிட்ட சொல்லிக்கிறேன்…’’ என்று சொல்லி விட்டு அந்தக் காட்சியில் நடித்தார்.

படப்பிடிப்பு முடிந்ததும் செட்டியார் அந்தக் காட்சியைப் பார்த்துவிட்டு என்னை அழைத்து, ‘‘ஏம்பா… முத்துராமா. தமிழ்ல பாலையா நடிச்சதை ரங்கா ராவ் பார்த்தாரா?’’ என்று கேட்டார். நான் ரங்கா ராவ் சொன்னதை அவரிடம் சொன்னேன். ‘‘மக்கு மக்கு… நீயெல்லாம் 100 சதவீதம் யூஸ்லெஸ்’’ என்று என்னைத் திட்டிவிட்டு, ‘‘ரங்காராவை என்னிடம் போனில் பேசச் சொல்லு’’ என்றார். உடனே அவர் செட்டியாரிடம் பேசினார். அவரிடம் செட்டியார் ‘‘எனக்காக ஒருமுறை தமிழில் எடுத்திருக்கும் காட்சியைப் பாருங்க’’ என்று சொல்ல, ரங்கா ராவ் செட்டியாருடன் அமர்ந்து படத்தை பார்த்தார்.

எஸ்.வி.சுப்பையாவுக்கு சப்போர்ட் பண்ணுகிற மாதிரி பாலையா சாதூர்யமாகப் பேசி, அவர்களை வெளியூருக்கு அனுப்பும் காட்சியை பார்த்த ரங்கா ராவ், ‘‘பாலையா தந்திரமா, அருமையா நடிச்சிருக்கார். இந்த நடிப்பை நான் மிஸ் பண்ணிட்டேன். ஸாரி சார். அந்தக் காட்சியைத் திரும்ப எடுத்துவிடலாம்’’ என்றார். திரும்பவும் அதை எடுத்தப் பிறகு காட்சி மேலும் பிரமாதமாக வந்திருந்தது.

அன்று என்னை செட்டியார் ‘மக்கு மக்கு 100 சதவீதம் யூஸ்லெஸ்’ என்று திட்டியதால்தான் இன்றைக்கு 100 சதவீதம் யூஸ்ஃபுல்லாக இருப்பதாக நினைக்கிறேன். மேல்அதிகாரிகள் திட்டும்போது, அவர்கள் ஏன் திட்டுகிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டால், தவறைத் திருத்திக் கொண்டு வாழ்க்கையில் வெற்றி பெறலாம் என்பதை இன்றைய தலை முறைக்கு சொல்லிக்கொள்ள ஆசைப் படுகிறேன்.

‘பாவமன்னிப்பு’ சிவாஜி - பீம்சிங் - சந்திரபாபு

‘சகோதரி’ படத்தை பீம்சிங் இயக்கிக்கொண்டிருந்த நேரத்தில் சந்திரபாபுவின் கதை ‘அப்துல்லா’வை படமாக்க நினைத்தார் பீம்சிங். நாயகன் இந்துவாகப் பிறந்து, முஸ்லிமாக வளர்ந்து, கிறிஸ்துவப் பெண்ணை மணம் முடித்துக்கொள்வது போன்ற கதை. இதை ஏவி.எம்.சரவணன் சாரிடம் பீம்சிங் சொன்னதும், அவருக்கும் பிடித்து, அவர் செட்டியாரிடம் சொல்ல பாட்னர்ஷிப்பில் படத்தை எடுக்கலாம் என்று முடிவானது.

வலம்புரி சோமநாதன், சோலை மலை, இறைமுடி மணி, கு.மா.பால சுப்ரமணியம், பாசுமணி ஆகியோர் கொண்ட ஒரு கதைக் குழுவை பீம்சிங் வைத்திருந்தார். குழு விவாதம் என்று அமர்ந்துவிட்டால் விவாதங்களில் சூடு பறக்கும். பீம்சிங்குக்கு இணை இயக்குநர்களாக இருந்த திருமலை, மகாலிங்கம், ராமநாதன் மூவருமே யார், யார் என்னென்ன பேசினார்கள் என்பதை குறிப்பெடுத்து வைத்துக்கொள்வார்கள். பின்னர், அவர்கள் மீண்டும் ஒரு விவாதத்தில் அமர்ந்து முன்பு பேசப்பட்டதில் சுவாரஸ்யமான நல்ல விஷயங்களைத் தனியே எடுத்துக் கொண்டு, வைரத்தை பட்டைத் தீட்டுவது மாதிரி கதையின் தன்மையை மிகச் சிறப்பாக வடிவமைப்பார்கள்.

இப்படி சிறந்த முறையில் வடிவமைத்த பிறகு சரவணன் சாரிடம் ‘‘அப்துல்லா கதையை டெவலப் செய்ததில் ரொம்ப நல்லா வந்துள்ளது. ஆனால், இந்தக் கதைக்கு சந்திரபாபு நாயகனாக நடிக்க முடியாது. கதாபாத்திரம் மிக உணர்ச்சிகரமாக அமைவதால் சிவாஜிதான் அந்த பாத்திரத்தில் ஜொலிக்க முடியும்’ என்றார் பீம்சிங். ‘‘கதை சந்திரபாபுவுடையது. அவர் ஹீரோ இல்லேன்னா எப்படி சார்?’’ என்று சரவணன் சார் தயங்கினார். ‘‘ நான் சந்திரபாபுகிட்ட பேசி ஒப்புதல் வாங்கிவிட்டேன்’’ என்று கூறி, பீம்சிங் பெரிய பெரிய நட்சத்திரங்களை நடிக்க வைத்து, பெரிய பட்ஜெட்டில் எடுத்த படம்தான் ‘பாவமன்னிப்பு’.

பீம்சிங் படங்களுக்கு பெரும்பாலும் கவியரசர் கண்ணதாசன்தான் பாடல்கள் எழுதுவார். மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன் - ராமமூர்த்திதான் இசையமைப்பாளர்கள். அந்த இசைக் கோர்வையில் (மியூசிக் கம்போஸிங்) அப்படி ஓர் இனிமை, குளுமை, ஒருங்கிணைப்பு இருக்கும்.

அப்படி ஓர் இசைக் கோர்வை நிகழும் இடத்துக்கு கவியரசர் கண்ணதாசன் வந்தார். எம்.எஸ்.வியைப் பார்த்து ‘‘விசு.. இன்னைக்கு மெட்டுக்குப் பாட்டா… பாட்டுக்கு மெட்டா?’’ என்று கேட்டார். அது என்ன கேள்வி? அதற்கு என்ன பதில்..?

- இன்னும் படம் பார்ப்போம்...

தவறவிடாதீர்!

    சினிமா தொடர்சினிமா எடுத்துப் பார்எஸ்.பி.முத்துராமன் தொடர்ஏவிஎம் செட்டியார்பாவமன்னிப்புகளத்தூர் கண்ணம்மா

    Sign up to receive our newsletter in your inbox every day!

    More From This Category

    More From this Author

    x