

அதிரடியை மறந்த அஜய் தேவ்கன்!
அஜய் தேவ்கன், ஸ்ரேயா சரண் நடிப்பில் மலை யாளத்தில் சூப்பர் ஹிட்டான ‘திரிஷ்யம்’ படத்தின் பாலிவுட் மறுஆக்கம் விரைவில் வெளியாகவிருக்கிறது. இந்தப் படத்தில் அஜய் தேவ்கன் ‘விஜய் சாள்காவ்ங்கர்’ என்னும் நடுத்தர வர்க்கக் குடும்பத்தலைவர் கதாபாத்திரத்தில் நடித்திருக் கிறார்.
அதிரடி நாயகனாக தொடர்ந்து நடித்து வந்த அஜய் தேவ்கனின் இந்தப் புது அவதாரத்தைப் பார்ப் பதற்குப் பாலிவுட் ஆவலுடன் காத்திருக்கிறது. நிஷிகாந்த் காமத் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் தபுவும், ரஜத் கபூரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். ‘திரிஷ்யம்’ தமிழ் மறுஆக்கமான ‘பாபநாசம்’ வெளியான பிறகு, ஜூலை 31ந் தேதி இந்தி ‘திரிஷ்யம்’ வெளியாகிறது.
காயப்படுத்தாத முன்னாள் காதலி!
‘பிக்கு’வின் வெற்றிக்களிப்பைச் சமீபத்தில் பாலிவுட் நட்சத்திரங்களுக்குப் பார்ட்டி வைத்துப் பகிர்ந்துகொண்டார் தீபிகா படுகோன். ஆனால், இதே நேரத்தில் தீபிகாவின் முன்னாள் காதலரான ரன்பீர் நடிப்பில் வெளியான ‘பாம்பே வெல்வட்’ படம் பாக்ஸ் ஆபிஸில் படுதோல்வியைச் சந்தித்தது. இதனால், தீபிகா ‘பிக்கு’ வெற்றி பார்ட்டி ஏற்பாடு செய்திருந்த தருணம் பாலிவுட்டில் பல்வேறு ஊகங்களை உருவாக்கியது.
“இந்தப் பார்ட்டி திட்டமே கடைசி நேரத்தில் உருவானதுதான். இதற்குப் பின்னால் எந்த உள்நோக்கமும் கிடையாது. ‘பாம்பே வெல்வெட்’ குழுவிலிருந்து அனுராக் காஷ்யப், மது மன்ட்டேனா, விகாஸ் பால் போன்றோரும் இந்தப் பார்ட்டியில் கலந்துகொண்டனர். நான் ரன்பீரையும், கத்ரீனாவையும்கூட இந்தப் பார்ட்டிக்கு அழைத்திருந்தேன். ஆனால், அவர்கள் கலந்துக்கொள்ளாததை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. நானும் இதே மாதிரிச் சூழ்நிலைகளைக் கடந்துதான் வந்திருக்கிறேன். ரன்பீரைக் காயப்படுத்தும் எதையும் நான் செய்யமாட்டேன். ‘பாம்பே வெல்வட்’ குழுவினரின் வலியை என்னால் உணரமுடிகிறது” என்று இதற்கு விளக்கமளித்திருக்கிறார் தீபிகா.
கூகுள் கொண்டாடிய நட்சத்திரம்
பாலிவுட்டை 50களில் கலக்கிய முன்னணிக் கதாநாயகியரில் முக்கியமானவர் மறைந்த நர்கீஸ் தத். கூகுள், அவரது 86வது பிறந்தநாளைக் கருப்பு வெள்ளை ‘டூடில்’ வைத்துச் சமீபத்தில் கொண்டாடியது. ‘அவாரா’ , ‘ 420’, ‘சோரி சோரி’, ‘மதர் இந்தியா’ போன்றவை அவரது நடிப்பில் வெளியாகிப் பெரும் வெற்றியைச் சந்தித்த படங்கள். அவருடைய ‘பியார் ஹுவா, இக்ரார் ஹுவா’, ‘ஜஹான் மேய்ன் ஜாதி ஹூன்’ போன்ற பாடல்கள் இப்போதும் ரசிகர்களை முணுமுணுக்க வைத்துக்கொண்டிருக்கின்றன.
குழந்தை நட்சத்திரமாக 1935யிலேயே ‘தலாஷ்-இ-இஷ்க்’ படத்தில் நர்கீஸ் அறிமுகமாகிவிட்டார். ஆனால், கதாநாயகியாக அவர் அறிமுகமானது 1942-ல் வெளிவந்த ‘தமன்னா’ என்ற படத்தில்.
கதாநாயகியாக 20 ஆண்டுகள் நர்கீஸ் ராஜ்ஜியம்தான். பெரும்பாலான படங்களில் ராஜ் கபூருடன் தோன்றிய நர்கீஸ், 1958-ல் சுனில் தத்தைத் திருமணம் செய்துகொண்ட பிறகு படங்களில் நடிக்கவில்லை.
தொகுப்பு - கனி