

எந்திரன் படத்தை 24 சதவீத மக்கள் மட்டுமே திரையரங்குகளில் பார்த்தார்கள் என்றும், அதேபோலத் துப்பாக்கி படத்தை 18 சதவீதம் பேர் மட்டுமே பார்த்துள்ளார்கள் என்றும் கடந்த வாரம் பார்த்தோம். படம் பார்க்கும் வழக்கம் உள்ளவர்கள் ஒட்டுமொத்தமாக 60 சதவீதம் பேர் இருப்பார்கள் என்று எடுத்துக்கொண்டால், திரையரங்குகளில் பார்த்தவர்கள் போக மீதம் உள்ளவர்கள் எப்படி இந்தப் படங்களைப் பார்த்தார்கள்?
அவர்களும் கண்டிப்பாகப் பார்த்தார்கள் – திருட்டுக் கேபிள் டிவி, இணைய தளங்கள், டிவிடிகள் மூலமாக ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தினரும், தொலைக் காட்சியில் முதல்முறையாக ஒளிபரப்பியபோது ஒரு குறிப்பிட்ட சதவிகித்தினரும் பார்த்திருக்கிறார்கள். முறைகேடான வழிகளில் பார்ப்பதை அரசாங்கம் முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவராதவரை, இந்த ‘பார்வையாளர் இழப்பு’ என்பது தொடர்ந்துகொண்டே தான் இருக்கும். அந்த நாள் வரும்வரை, அதிகபட்ச வசூலை ஒரு புதுப்படத்திற்கு எடுக்க, அதிக அரங்குகளில், வெளியீடு செய்வது அவசியம். தெலுங்குப் பட உலகம், ஒரு பெரிய நடிகரின் படத்தை, 800 முதல் 900 அரங்குகள் வரை வெளியிட்டு, முதல் இரண்டு வாரத்திலேயே, அதிகபட்ச வசூலை எடுத்துவிடுகிறது. வளர்ந்துவரும் நடிகர்கள் நடித்த இந்திப் படமான 2 ஸ்டேட்ஸ், இந்தியாவில் 2700 அரங்குகளுக்கு மேல் வெளியாகும்போது, தமிழ்நாட்டில் குறைந்தது 500 முதல் 600 அரங்குகளில், ஒரு பெரிய நடிகரின் படம் வெளி வர வாய்ப்பு இருக்க வேண்டும். இன்னொரு பெரிய நடிகரின் படத்தோடு வரும்போது, தமிழகத்தில் 1,000 அரங்குகள் மட்டுமே உள்ள தற்போதைய சூழ்நிலையில் இது சாத்திய மில்லை. எனவே அதிகபட்ச வசூலை எடுக்க, பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்படும் படங்கள் தனியாகத்தான் வர வேண்டும். போட்டிக்காகக்கூட, இன்னொரு பெரிய நடிகரின் படத்தோடு வரக் கூடாது என்பதுதான் நிதர்சனமான சூழ்நிலை.
வெற்றியின் திறவுகோல்
ஒரு படம் தனியாக வெளிவர என்ன செய்ய வேண்டும்?
படம் தொடங்கும்போதே வெளியாகும் தேதியை முடிவு செய்ய வேண்டும். ஏவிஎம் நிறுவனம் அப்படித்தான் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களை எடுத்து வெளியிட்டார்கள். இன்றைய காலகட்டத்தில் இது முடியுமா என்று ஆலோசிப்பவர்கள், நடிகர் விஷாலின் தயாரிப்பு நிறுவனம் அடைந்துவரும் வெற்றியைப் பார்க்க வேண்டும். அவரின் பாண்டிய நாடும், நான் சிகப்பு மனிதனும், தொடங்கும்போதே ரிலீஸ் தேதி சொல்லி ஆரம்பிக்கப்பட்டு, அந்தத் தேதியில் வெளியாகி வெற்றி கண்டவை. அதைப் போலவே, அவரின் அடுத்த படமான பூஜை, தீபாவளிக்கு வெளியாகும் என தொடங்கிய நாளே சொல்லி விட்டார். இயக்குநருடன் கூட்டு முயற்சியாக இவ்வாறு தொடங்கும்போதே ரிலீஸ் தேதியை முடிவு செய்து பணிகளைச் சரியாகப் பங்கிட்டு அனைவரும் வேலை செய்தால் இது சாத்தியமே. தமிழில் யூடிவி நிறுவனம், கடந்த இரண்டு வருடங்களாகத் தான் தயாரிக்கும் படங்களுக்கு ரிலீஸ் தேதியைப் பல மாதங்களுக்கு முன்பே சொல்லி அந்தத் தேதியில் படங்களை வெளியிட்டுவருகிறது. சொன்ன தேதியில் வெளியிடும் ஒரு நிறுவனம் என்ற பெயரைப் பெற்றால், மற்ற தயாரிப்பு நிறுவனங்கள், திடீரெனப் போட்டிபோட வர மாட்டார்கள். அந்த ரிலீஸ் தேதியை விட்டு வேறு தேதியை அவர்கள் தேர்வு செய்யவும் இது வகை செய்யும்.
தமிழ் சினிமாவைவிட, ஐந்து மடங்கு பெரிய இந்தி சினிமாவில், அனைத்துப் பெரிய படங்களின் வெளியா கும் தேதி பல மாதங்களுக்கு முன்னரே முடிவு செய்யப்பட்டு அனைத்துப் பத்திரிகைகளிலும் விளம்பரங்கள் தொடர்ந்து வருகின்றன. சில உதாரணங்களை அட்டவணையில் பாருங்கள்.
இந்த அட்டவணை ஒரு உதாரணம்தான். வெளிவரப்போகும் அனைத்துப் படங்களின் தேதியை இந்தி சினிமாவில் முதலிலே சொல்லி விடுவதால், புதிதாகப் படத்தை ஆரம்பிப்பவர்களும், அவர்கள் படத்தின் தேதியை, இந்த அட்டவணையைப் பார்த்து முடிவு செய்ய முடியும். ரிலீஸ் தேதியை முடிவுசெய்யாமல், படங்களை எடுத்துவரும் அனேகத் தமிழ் படங்களுக்கு இத்தகைய வாய்ப்பு இல்லை. படங்கள் கும்பலாக வருவதற்கு இதுதான் முதல் காரணம்.
இந்தி சினிமாவில் வெளியாகும் இந்த அட்டவணை எந்தத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கட்டுப்பாட்டினாலும் வருவதல்ல. எனவே, தயாரிப்பாளர்கள் சங்கம் ரிலீஸ் தேதியில் கட்டுப்பாடுகளைக் கொண்டு வர வேண்டும் என எதிர்பார்க்காமல், சுய கட்டுப்பாட்டுடன், படம் எடுக்கும் அனைத்துத் தயாரிப்பாளர்களும் தங்கள் படங்களின் ரிலீஸ் தேதியை முடிவு செய்து முதலிலேயே வெளியிட்டால், மற்ற தயாரிப்பாளர்களுக்கு அது பெரிய உதவியாக இருக்கும். போட்டிகள் விலகும்.
வழிகாட்டும் மல்லுவுட்
மலையாள சினிமாவில், ரிலீஸ் தேதியைக் குறைந்தது மூன்று அல்லது ஆறு மாதங்களுக்கு முன்பு முடிவு செய்து அரங்குகளை புக் செய்ய வேண்டும். திடீரென முடிவு செய்து, வெளியாகும் படங்கள், அந்த அரங்குகளில் வெளியாக முடியாது. அத்தகைய படங்கள், அவ்வாறு ஒப்பந்தம் செய்யாத அரங்குகளில் மட்டும், குறைந்த அளவில் வெளியாக முடியும். தமிழைவிடச் சிறிய மலையாளப் பட உலகிலும், அரங்குகள் மூலம் ரிலீஸ் தேதிக்கான சுயகட்டுப்பாடுகள் உள்ளபோது, தமிழ் சினிமாவில் ஏன் கொண்டுவர முடியாது?
முடிவு செய்யப்பட்ட தேதியை முதலிலிருந்தே அனைத்து விளம்பரங்களிலும் சொல்லி வர வேண்டும். அப்போது அது எல்லோர் மனதிலும் பதிந்து, படத்திற்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். அதே சமயம், இந்தி சினிமா போல, மற்ற தயாரிப்பாளர்கள் அந்தத் தேதியைத் தவிர்க்கவும் ஏதுவாக இருக்கும்.
எல்லாத் திட்டமிடுதல் களையும் செய்து படத்தை வெளியிட முற்படும்போது, மேலும் எதிர்பார்ப்புள்ள படங்கள் அதே தேதியில் வர யத்தனித்தால், முடிந்த வரை, அந்தத் தயாரிப்பு நிறுவனங்களுடன் ஆலோசித்து அவர்களின் ரிலீஸ் தேதியை மாற்ற முயல வேண்டும். அவர்கள் ஒத்துவரவில்லை என்றால், நம் படத்தை ஒன்று அல்லது இரண்டு வாரத்துக்குத் தள்ளி வைக்க வேண்டும். வெளியாகும் தேதியில் எந்தத் தற்பெருமையும் பார்க்காமல், படத்தின் வெற்றி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு, தனியாக வர எல்லா முயற்சி களையும் ஒரு தயாரிப்பாளர் எடுப்பது, ஒவ்வொரு படத்திற்கும் ஒரு பெரிய வசூலை ஏற்படுத்த வழி உண்டாக்கும்.
ஒரு வருடத்தில் தமிழில் வெளியாகும் 150 முதல் 165 படங்களில், 40 முதல் 50 வரை மட்டுமே ஏதோ ஒரு வகையில் அனைவரும் எதிர்பார்க்கும் படங்கள். மற்றவை, வெளிவந்த பின், நன்றாக இருந்தால் மட்டுமே வசூலில் தாக்கத்தை ஏற்படுத்தும். எதிர்பார்க்கப்படும் இந்தப் படங்கள் தனியாக ஒவ்வொரு வாரமும் வந்தால், எல்லாப் படங்களுக்குமே ஒரு வார உத்தரவாத வசூல் கிடைக்கும். படம் நன்றாக இருக்கும் பட்சத்தில், மேலும் வசூல் சாதனை தொடர முடியும்.
ஒரு படக் குழுவின் போட்டி பார்வையாளர்களுடன் மட்டுமே இருக்க வேண்டும். மற்றொரு படத்துடன் அல்ல. அவர்களை ஆச்சரியப்படுத்தி, சந்தோஷப்படுத்தினால், வெற்றி உறுதி. எனவே, போட்டியைத் தவிர்த்து, சிங்கம் போலத் தனியாக வர அனைவரும் முயற்சி எடுத்தால், வெற்றியின் சதவீதம் தமிழ் சினிமாவில் கூடும்.
தொடர்புக்கு: dhananjayang@gmail.com